துருக்கியில் பெண்கள் முன்னேற்றம். குடி அரசு - கட்டுரை - 21.06.1931 

Rate this item
(0 votes)

திறைமறைவில் உரை போட்டுக் கொண்டு இருக்க வேண்டிய பெண்கள் இன்று துருக்கியில் பிறந்ததின் பயனாய் திறையை அவிழ்த்துத் தள்ளி உரையைக் கழட்டி எறிந்து விட்டதோடல்லாமல் "எங்களுக்குக் கல்யாணம் வேண்டாம். கல்யாணம் செய்து கொள்ளுவதன் மூலம் புருஷர்களுக்கு அடிமையாய் இருக்க இனி நாங்கள் சம்மதிக்கமாட்டோம்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதோடு நிற்காமல் - எங்களுக்கு உத்தியோகம் வேண்டும்' என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் புர்தாவை-கோஷாவை படுதாவை "மதக்கட்டளை' என்று சொல்லப்பட்ட மார்க்கத்தில் பிறந்தும் இஸ்லாம் மார்க்கத்தின் பிரமுகரான கலீபா இருந்த பிரதான நகரமாகிய துருக்கியில் பிறந்தும் துருக்கியானது கமால்பாஷா என்கின்ற ஒப்பற்ற ஒரு வீரரின் ஆக்ஷியில் இருக்க நேர்ந்ததின் பயனாய் இன்று அப்பெண்மணிகள் * எங்களுக்கு கல்யாணம் வேண்டாம். உத்தியோகம் வேண்டும்" என்று சொல்லக்கூடிய யோக்கியதை அடைந்து விட்டார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பாங்கி முதலிய வியாபார ஸ்தவங்களிலும் அதாவது சதா பல புருஷர்கள் நடமாடும் இடங்களிலும் தங்கள் தலையைக் கத்தரித்துக் கொண்ட அழகான முஸ்லீம் பெண்கள் தாராளமாய் வேலையில் அமர்ந்திருக்கிறார்கள், மெடிக்கல் காலேஜ் (வைத்தியக் கலாசாலை வா காலேஜ் சட்டக் கலாசாலை முதலிய இடங்களில் பெண்கள் அதிகமாக சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களில் பலர் ஆண்கள் பலபேர் கல்யாணம் இல்லாமல் இருக்கும்போது நாங்கள் ஏன் கல்யாணம் இல்லாமல் இருக்கக் கூடாது”? என்று கேட்கின்றார்களாம். 

மற்றும் பலர் “ நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால் நன்றாய்ப் பழகி சகல குணமும் தெரிய நேர்ந்த புருஷர்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வோம்” என்று சொல்லுகின்றார்களாம். 

மற்றும் பலர் நாங்கள் 40 வயது ஆனபிறகுதான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கத் துடங்குவோம்" என்று சொல்லுகின்றார்களாம். பெண்கள் முன்னேற்றம் என்னும் துறையில் துருக்கிப் பெண்கள்தான் உலகத்திற்கே வழிகாட்டிகளாக ஏற்படக்கூடும் என்றே நினைக்கின்றோம். ஆகவே இந்தியா வில் உள்ள சகல பெண்மணிகளும் ஒன்று துருக்கிப் பெண்களைப் பின்பற்ற வேண்டும். அல்லது துருக்கியில் பிறக்காததற்காக ஒப்பாரிவைத்து அழ வேண்டும். இல்லையேல் மதக்கட்டளைகளுக்கு தாங்களே (பெண்கள்) வியாக்கியானம் சொல்லப் புரப்படவேண்டும். இம்மூன்றைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. 

குடி அரசு - கட்டுரை - 21.06.1931

Read 47 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.