பர்மா புத்த மாநாட்டில். - விடுதலை - 09.12.1954

Rate this item
(0 votes)

கபாயே, டிசம் - 5: இங்கு உலக புத்த அறநெறி மாநாட்டு அலுவலகத்தில் பெரியார் அவர்களும் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் காலை 10-20 மணிக்கு சந்தித்தார்கள். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியார் அவர்களை தன்னைவிட திடகாத்திர நிலையில் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக தனிமையில் பல செய்திகள் குறித்து அளவளாவினார்கள். அவர்கள் பேசுகையில் இந்த உலக புத்த மாநாடு குறித்தும் எதிர் காலத்தில் தாங்கள் இருவரும் எப்படி நாட்டிற்கு வழிகாட்ட வேண்டும் என்பதை பற்றியும் பேசியதாகத் தெரிகின்றது

பின்னர் பெரியார் அவர்கள் டாக்டர் அம்பேத்கர், டாக்டர் மல்லல சேகரா முதலியவர்கள் உடனிருக்க புகைப்படம் எடுக்கப்பட்டது

- விடுதலை - 09.12.1954 

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மா வில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை . நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரைப் பேசச் சொல்லிவிட் டார்கள். அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையொப்பம் போட்டு புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம் என்று சொன்னார்

"மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகக் தங்கலாமென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம் கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இவற்றையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக் கழகம்) ஆரம்பிக்காமல் நாமும் சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா?என்று இன்னும் என்னென்னவோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்த்துவிட்டார்

- விடுதலை - 07.12.1956 

பர்மாவில் நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர், அவர்கள் என்னைப் பார்த்து "என்ன இராமசாமி! இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதால் நாம் என்ன பலன் ஏற்பட முடியும்? வா! நாம் இரண்டு பேரும் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிடுவோம்என்றார். நான் சொன்னேன். மிகவும் சரி, இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ் நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றேன். இந்த கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன், சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங் களைப் பற்றியும் இப்போது மக்களிடையே எடுத்துச் சொல்லிப் பிச்சாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஓர் இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால், நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே, நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்ன்பதாகச் சொன்னேன்

- விடுதலை - 22.02.1959 

அவர், தாம் புத்தமதத்துக்கு மாறும் முன்பு என்னையும் அழைத்தார். நான் கூறினேன். இந்து மதத்தில் இருந்து கொண்டு இந்து மதத்தைக் கண்டித்து அதன் வண்டவாளங்களை எல்லாம் வெளுத்து வாங்கினால் எவனும் எதிர்த்துக் கேட்க முடியாது. மதம் மாறிவிட்டு இந்து மதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உனக்கு என்ன யோக்கி யதை உள்ளது'' என்று கேட்பார்கள். இந்து மதத்தில் இருந்து கொண்டே கண்டித்தால் எவரும் எதிர்த்துக் கேட்க முடியாது என்று எடுத்து உரைத்தேன். அது கண்டு அவர் கூறினார். நீங்கள் என்ன காலம் எல்லாம் பேசிக் கொண்டே இருந்து விட்டுச் சாவது என்று முடிவு செய்து கொண்டீர்களா? காரியம் ஏதாவது செய்ய முற்பட வேண்டாமா?என்று என்னைக் கேட்டார். அதற்கு நான் என்னமோ அய்யா, எனக்கு இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தைத் தாக்குவதுதான் சரி என்று படுகின்றது. தாங்கள் வேண்டுமானால் இப்போது சேருங்கள். நான் என்னாலான அளவு ஆதரவு கொடுக்கின்றேன். பிறகு வேண்டுமானால் பார்க்கலாம்என்று கூறினேன்

இது பர்மாவில் நடைபெற்ற உலக புத்த மார்க்க மாநாட்டுக்குப் போன இடத்தில் இப்படிப் பேசிக் கொண்டோம்

- விடுதலை - 04.05.1963

Read 111 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.