இராமன் படத்தை செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது? விடுதலை-11.05.1971

Rate this item
(0 votes)

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி நிலைக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இங்கு கூடி உள்ளோம். தற்போது ரொம்பப் பேருக்குப் பார்ப்பானை ஆசை தீர வைய வேண்டும்- அடிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், என்கின்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் பார்ப்பனர் நடந்து கொண்ட விதம் மற்றவர்களை அப்படி எண்ணும்படியாகச் செய்துள்ளது.

பார்ப்பான் ஒழிய வேண்டுமானால் அவனை விரட்டுவது என்று பெயரா அல்லது அவனைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பெயரா? பார்ப்பான் ஒழிக என்று வாயால் சொல்வதால் மட்டும் பார்ப் பானை ஒழிக்க முடியாது. பார்ப்பானைப் பூண்டற்றுப் போகும்படிச் செய்ய வேண்டுமானால் எதனால் அவன் வாழ்கின்றானோ- பிழைக்கின்றானோ அதனை ஒழிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வாயால் கத்துவதால் பயனில்லை.

 

பார்ப்பான் ஒழிய வேண்டியது மிக மிக அவசியமாகும். அவனால் இந்த நாடும் உலகமும் மிக மிகக் கேடடைந்து வருகிறது என்பதோடு, அவனால் நாம் இன்னமும் இழி மக்களாக இருந்து கொண்டிருக்கிறோம். பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குப் பக்கபலமாக- ஆதரவாக- பாதுகாப்பாக இருக்கிற கடவுளை, - மதத்தை, - சாஸ்திரத்தை, - கோயில்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்.

ஒரு சமயம் சி.பி. இராமசாமி அய்யர் மதமும், ஒரு விரல் அளவு சாமி உருவம் இருந்தால் போதும்; எவராலும் பார்ப்பனரை ஒழிக்க முடியாது என்று சொன்னார்.

 

அவர் சொன்னது 100க்கு 100 உண்மை யாகும். மதமும் கடவுளும் இருக்கிறவரை பார்ப்பான் இருந்து தான் தீருவான். ஒருவன் எதனால் பார்ப்பான் என்றால் மதப்படி- கடவுள் அமைப்புப்படி என்று தான் சொல்கின்றான். நாம் ஏன் சூத்திரர்கள் என்றால் கடவுள் அப்படி அமைத்திருக் கிறார். சாஸ்திரத்தில் இருக்கிறது; மதப்படி தான் என்கின்றனர். எனவே நாம் சூத்திரத் தன்மைக்கும் பார்ப்பானின் உயர் சாதித் தன்மைக்கும் காரணமாக இருப்பது கடவுள் - மதம் - சாஸ்திரம் ஆகியவையேயாகும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை எப்படித் திருத்தினான் என்றால், சாமி படத்தை நான் செருப்பால் அடித்தேன் என்பதாகவும், அப்படி அடிப்பதற்குத் தி.மு.கழக அரசு ஆதரவாக இருந்தது என்றும், சாமி படத்தை செருப்பாலடிக்க ஆதரவு கொடுத்த தி.மு.கழகத்திற்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்தார்கள்.

 

நான் இராமனையும், முருகனையும் செருப்பால் அடிப்பது போன்று படம் போட்டு ஊரெங்கும், தமிழ்நாடு முழுவதும் ஒட்டினார்கள். இதனை முதலில் செய்ய வில்லை. முதலில் இந்தச் செய்தியை வெளி யிட்டால் எல்லா மக்களும் இப்படிச் செய் தால் என்ன செய்வது என்று பயந்து விட்டனர். முதலில் அவர்கள் மக்களிடையே பிரசாரம் செய்தனர்; என்னவென்றால், சேலம் மாநாட்டில் எவன் மனைவியை எவன் வேண்டுமானாலும் அடித்துக் கொண்டு போகலாம் என்று தீர்மானம் போட்டார்கள். பெண்கள் கற்பிற்கு ஆபத்து வந்து விட்டது என்று பிரசாரம் செய்தனர்.

சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெண்கள் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக ஒரு தீர்மானம் போடப்பட்டது. ஒருவன் மனைவி (அவனை விரும்பவில்லையா னால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது என்பதேயாகும். இந்நிலை இன்றைக்கும் சட்டப்படிக் குற்ற மல்ல. பின் ஏன் இத்தீர்மானம் போட்டோம் என்றால், பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

இத்தீர்மானத்தைத் திரித்துப் பிரசாரம் செய்தார்கள். நாம் மறுப்பு எழுதியதை அவர்கள் வெளியிடவில்லை. அதன் பின்தான் கோர்ட்டில் நாம் போட்ட தீர்மானத்தை மாற்றி வெளியிட்டு தம்மைத் தாழ்மைப்படுத்தப் பார்க்கிறார்கள், இதனைத் தடுக்க வேண்டும் என்று வழக்குப் போட்டோம். அந்த வழக்குப் போட்ட பின்தான் அதை விட்டுவிட்டு இராமன் படத்தை செருப்பாலடித்ததைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.

 

இந்தச் செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். செருப்பினால் அடித் தது எனக்குத் தெரியாது. நம் திட்டத்திலும் அது இல்லை. முதலில் யாரும் செருப்பினால் அடிக்கவில்லை.

பின் அந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பித் தது என்றால், சேலத்தில் தேவாலயப் பாதுகாப்பு மாநாடு என்று ஒன்று கூட்டி, அதில் என்னை மிகவும் கண்டித்துப் பேசி னார்கள். அந்த மாநாட்டிற்கு மக்கள் கூட்டம் இல்லை. அந்த மாநாடு நடக்கிற போது நான் சேலத்தில் இருந்தேன். அப்போது நம் தோழர்கள் வந்து அந்த மாநாட்டைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். பின் அக்கூட்டத்தின் சார்பில் ஓர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்கள். பிறகு கூட்டமும் ஊர்வலமும் நடத்துவதானால் ஒரு சிறு மாநாடே நடத்தி விடலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக் கொண்டேன்.

அந்த ஊர்வலத்தில் நம் மக்கள் கடவுள்களாகக் கருதிக் கொண்டிருக்கிற சில கடவுள்களின் பிறப்புகளைப் படமாகப் போட்டு கொண்டு ஊர்வலம் போவதாக ஏற்பாடு செய்தார்கள். இது எப்படியோ தெரிந்து பார்ப்பனர்கள் கலெக்டரிடம் சென்று ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

அவர் பார்ப்பனர் ஆனதால், போலீஸ் சூப்பிரன்டிடம் சொல்லி ஊர்வலத்தைத் தடை செய்யச் சொல்லி இருக்கிறார். சூப்பிரன்ட் ஊர்வலத்தை நிறுத்தும்படியாகச் சொல்வதாக வந்து சொன்னார்கள். நான் அதற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தான் அவர்கள் வேலையே தவிர, நிறுத்து வதற்கு வேண்டுமானால் தடை போடட்டும் என்று சொன்னேன்.

தடைபோட்டாலும் கேட்க மாட்டார்கள் மீறி நடத்துவார்கள் என்று தெரிந்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

ஊர்வலம் வந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் 30, 40 பேர் கருப்புக் கொடியை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந் தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக 500 க்கு மேற்பட்ட போலீசார் வளைத்து நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்கின்ற தைரியத்தில் கருப்புக் கொடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வீசினான். ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருக் கின்றனர். நான் கண்டிக்கா விட்டால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கும். அவன் வீசிய அந்தச் செருப்பை எடுத்து ஒரு தோழர் ஊர்வலத்தில் வந்த இராமன் உருவத்தை அடித்தார். அதைப் பார்த்து மற்ற தோழர் களும் தங்கள் தங்கள் செருப்பாலடிக்க ஆரம்பித்தனர். இதுதான் நடந்த உண்மை யாகும்.

இதை அவர்கள் தி.மு.க அரசு உத்தரவு கொடுத்தார்கள். அந்த உத்தரவின் பெய ராலேயே அடித்தோம் என்று பிரசாரம் செய்தான்; பத்திரிகைகளில் எல்லாம் எழுதினான். நான் அதை மறுக்கவில்லை; காரணம் மறுத்தால் நம் தோழர்கள் செருப்பால் அடிப்பது தவறு என்று கருதி விடுவார்களே என்று மறுக்கவில்லை. அதன் பலனாக இச்சம்பவம் இந்தியா பூராவும் விளம்பரம் ஆகும்படியாக ஆயிற்று. நாம் எவ்வளவு பாடுபட்டாலும், செலவு செய்தாலும் இவ்வளவு விளம்பரம் செய்ய முடியாது. அந்த அளவிற்கு விளம்பரம் நடைபெற்றிருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.

 

28.03.1971 அன்று மதுரையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

விடுதலை-11.05.1971

Read 48 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.