பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விடுதலை- 28.05.1967

Rate this item
(0 votes)

நாம் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறோம். ஆனால் மணமக்களை வாழ்த்துவது என்பதும் கூட ஒரு மூட நம்பிக்கையே ஆகும். அதையே இப்போது பலர் செய்தார்கள்.

இது ஒரு சம்பிரதாயமே ஆகும். இந்த முறையையேப் பார்ப்பான் காசு பறிப்பதற்காக ஏற்பாடு செய்ததே ஆகும். அவர்களுடைய வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற அறிவுரை கூறவே இதுபோன்ற நிகழ்ச்சியாகும்.

 

நாகரசம்பட்டியார் குடும்பம் நமக்கு மிக வேண்டிய குடும்பம் தான் என்றாலும், சொன்னால் வெட்கப்பட வேண்டும். சுயமரியாதைப்படி நடக்கிறதாகச் சொல்லிக் கொண்டு செய்யும் இத்திருமணமானது, சுயமரியாதைக் கொள்கைக்கு ஏற்றதாக இல்லை. இதை இப்படி ஏன் சொல்கிறேன் என்றால், இந்த இரண்டு திருமணங்களும் அவர்கள் சாதிக்குள்ளேயே செய்து கொண்டார்கள். அப்படி கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதில் சம்பந்தம் அவர்களுக்கு இடித்துக் கூட சொல்ல வேண்டிய உரிமை எனக்கு உண்டு.

இந்தச் சிறு வயதிலேயே அவர் தனது பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு செய்திருக்க வேண்டியதில்லை. அதை இன்னும் நல்ல முறையில் படிக்க வைத்திருக்கலாம். அது இன்னும் மற்ற தாய்மார்களும் தங்கள் பெண்களுக்கு அவசரப்பட்டுத் திருமணம் செய்யக் கூடாது. நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவர்களே, தங்களின் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.

 

மூட நம்பிக்கையான காரியங்களை விட்டு விட வேண்டும். நமக்கு வேண்டியதெல்லாம் நம் நாட்டைப் பொறுத்தவரை அறிவின்மைக் குறை நீங்க வேண்டியதே ஆகும். அதைக் கொண்டு எல்லாவற்றையும் சரி செய்து கொள்ள வேண்டும். சமத்துவம் வரவேண்டும்.

கொஞ்ச காலத்திற்காவது பிள்ளை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள குறைகளில் மிகப் பெரியது இந்தப் பிள்ளைப்பேறுதான் ஆகும். இனி வரப் போகும் அரசாங்கமும் இதைத் தடுக்க முயற்சிக்கும் வகையில் பெண்களின் வயதை 21-ஆக்கப் போகிறது. பிள்ளைப் பெறுவது தங்களின் பிற்காலத்தில் தங்களுக்குச் சம்பாதித்துப் போட வேண்டுமே என்று கருதுகிறார்கள். இனி சக்தி குறைந்தால், சர்க்கார் மான்யம் கொடுக்கும்.

 

மனிதன் சந்தோஷப்பட வேண்டுமானால் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிகமாகப் பெற்றுக் கொண்டு அவஸ்தைக்கு ஆளாகக் கூடாது. காமராசரின் அரசாங்கத்தால் இப்போது கல்வி பரவி இருக்கிறதே ஒழிய, நம் மக்களால் கல்வி பரவவில்லை. படித்தவர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகம் வேண்டுமென்று நினைக்கிறார்கள். அது நமக்கும் தொல்லை; சர்க்காருக்கும் தொல்லை. படிப்பைக் கொண்டு தொழில் செய்ய வேண்டும். தொழில் துறையில் நாம் ரொம்பவும் முன்னுக்கு வரவேண்டும்.

படித்தவர்கள் மனம் அரசாங்கத்தில் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. இது மாற வேண்டும்.

நாம் நமக்காகத் தான் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு - மற்ற மக்களுக்குத் தங்களால் ஆன தொண்டுகளைச் செய்ய வேண்டும்.

நம் மக்களுக்கு இன உணர்ச்சி பெருக வேண்டும். மற்ற பிற இனத்தானுக்கு இருப்பது போல் தன் இனம் முன்னேற வேண்டும். பார்ப்பானை எடுத்துக் கொள்ளுங்கள் - அவன் பிச்சைக்காரனாக இருந்தாலும், சங்கராச்சாரியாக இருந்தாலும், இராஷ்டிரபதியாக இருந்தாலும் அவன் எண்ணமெல்லாம் தனது இனத்தின் முன்னேற்றத்தைப் பற்றியதாகவே இருக்கும். அதுபோன்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். நம் மக்கள் முன்னேற வேண்டுமென்பதில் ஒவ்வொருவருக்கும் எண்ணம் இருக்க வேண்டும். அதற்காகப் பாடுபட வேண்டும்.

மணமக்கள் வரவிருக்கு மேல் செலவிடக் கூடாது. ஆடம்பரமாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் சராசரி மனித வாழ்வு வாழ வேண்டும். மற்ற மக்களோடு சரி சமமாகப் பழக வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மணமக்கள் குடும்பத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

21.05.1967- அன்று நாகரசம்பட்டி திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.

விடுதலை- 28.05.1967

Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.