சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது? விடுதலை- 7.5.1970

Rate this item
(0 votes)

இன்றையத் தினம் இங்குச் சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி விளக்கம் தரவேண்டும் என்பதற்காக நம் தோழர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்து இன்றைக்கு 45 வருடங்களுக்கு மேலாகின்றது. அதனைத் தோற்றுவித்ததன் உத்தேசமே சமுதாயத் தொண்டு செய்வதற்காக ஆகும்.

 

சமுதாயத் தொண்டு செய்கிற ஸ்தாபனத்திற்குச் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைக்க வேண்டி ஏன் ஏற்பட்டது என்றால், மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மானமற்றத் தன்மையை எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக முதலில்- Self Respect Propaganda Institution என்று ஆங்கிலப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம் நம் மக்கள் இழிவான நிலை ... இழிவான வாழ்வு வாழ்கிறார்கள்; அவர்கள் இழிவை எடுத்துக் காட்ட வேண்டும். அவர்களுக்கு அறிவையும், மான உணர்ச்சியினையும் ஏற்படுத்த வேண்டுமென்பதாகும்.

என்ன இழிவு என்றால் பார்ப்பானைத் தவிர இந்நாட்டு மக்கள் நாலாம் சாதி, சூத்திர மக்களாக இருக்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும்- மக்களின் இழிவு நிலையைப் போக்க வேண்டும். அவர்களின் அறிவற்ற தன்மையை எடுத்துக்காட்டி அறிவு பெறச் செய்து, சூத்திரத் தன்மையைப் போக்க வேண்டும் என்பதாகும்.

 

நம் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட போது, நம் மக்களுக்கு மனிதன் மதப்படி, மத தருமப்படி நடக்க வேண்டும், சாஸ்திரப்படி நடக்க வேண்டும் எனப் புகுத்தப்பட்டு, அது மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது, மக்களில் சிலர் ஏன் கீழ்ச்சாதி- பறையன் என்றால், முன் ஜன்மத்தில் செய்த பாவத்தால் என்றும், ஏன் பார்ப்பான் என்றால் முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தால் என்றும் மக்கள் கருதினார்களே தவிர, இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய்து அடுத்த ஜன்மத்தில் மேல்சாதியாகப் பிறக்க வேண்டும் என்று கருதினார்களே தவிர, இந்த ஜன்மத்தில் நாம் ஏன் இழிசாதியாக இருக்கிறோம் என்று நம் மக்களில் எவரும் வெட்கப்பட வில்லை. இந்த இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் தோன்றுகிற வரை எவருமே முயற்சிக்கவும் இல்லை.

 

பார்ப்பனரல்லாத மக்களுக்காக இங்கு ஜஸ்டிஸ் கட்சித் தோற்றுவிக்கப்பட்டது என்றாலும், அதில் பதவி உத்தி யோகங்களில் பார்ப்பானுக்கே உரிமைகள் வழங்கப்படு கின்றன, அதில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தோன்றியதே தவிர, மக்களின் இழிவைப் பற்றி அது கவலைப்பட வில்லை.

வெள்ளைக்காரன் கூட இங்குள்ள மததருமப்படி தான் ஆட்சி செய்தான். அவன் சில திருத்தங்கள் சமுதாயத் துறையில் செய்ய முற்பட்ட போது, இந்நாட்டுப் பார்ப் பனர்களே அதை எதிர்த்தனர். எனவே, அவன் அதில் தலையிடவில்லை, இந்த நாட்டில் காங்கிரஸ் ஏற்பட்டது வெள்ளைக்காரன் ஆட்சியைப் பாதுகாக்கவே தவிர, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல.

வெள்ளைக்காரன் சமுதாயத் துறையில் அரசாங்கத்திற்கு இருந்த எதிர்ப்பைச் சமாளிக்க, பார்ப்பனர்களைப் பிடித்து ஏற்பாடு செய்தது தான் காங்கிரசாகும். காங்கிரசின், சரித்திரத்தைப் பார்த்தால் ஓரிருவர் சமுதாய திருத்தம் பற்றிப் பேசி இருக்கிறார்கள் என்றாலும், அப்போதே அது பற்றிப் பேசக்கூடாது என்று அவர்களைத் தடுத்து விட்டனர். அது காங்கிரசின் கொள்கைக்கு விரோதம் என்று சொல்லிவிட்டார்கள்.

 

திலகர் என்ற பார்ப்பனர்- சமுதாய சம்பந்தமான கருத்தே காங்கிரசில் இருக்கக் கூடாது என்று தடுத்துவிட்டார். பார்ப்பனர்களே, காங்கிரசின் தலைவர்களாக இருந்து வந்தனர். ஒரு சமயம் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் ராஷ்பிகாரிகோஷ் என்கின்ற பார்ப்பனரல்லாத ஒருவரைத் தலைவராக்கி விட்டனர். அதனை உடனே எதிர்த்து, திலகர் வேறு ஒருவரை பிரப்போஸ் செய்கிறேன் என்று சொல்லி, ராஷ்பிகாரி கோஷைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று கலகம் செய்ய ஆரம்பித்தார். திலகரின் ஆட்கள் மேடையில் செருப்பு வீச ஆரம்பித்து விட்டனர். தாதாபாய் நவுரோஜி முதலியவர்கள் மீதெல்லாம் செருப்பு விழுந்தது.

அதன்பின் காங்கிரசில் வெகுநாட்கள் வரை பார்ப்பனரல்லாதார் தலைமையே வரவில்லை. அரசியலை மட்டும் வைத்துக் கொண்டு மக்களை நெருங்க முடியாது. மக்களின் ஆதரவு பெற வேண்டுமானால் சமுதாயத்தை யும் சேர்த்துக் கொண்டால் தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்ட பின், காங்கிரஸ் அரசியலுக்காகவே என்று ஒரு பிரிவும், சமுதாய சம்பந்தமான காரியத்திற்காக ஒரு பிரிவும் என்று, எங்குக் காங்கிரஸ் மாநாடு நடந்தாலும் ஒரு நாள் அரசியலுக்கும், ஒரு நாள் சமுதாயத்திற்கும் என்று பிரித்து நடத்த ஆரம்பித்தனர்.

 

அப்போது தான் சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அவர்கள் பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றிப் பதவி- உத்தி யோகங்கள் பெறுகின்றனர் என்பது பற்றிப் பிரசாரம் செய்ததில், மக்களுக்குப் பார்ப்பனர் மேல் வெறுப்பு ஏற்படும் படியாயிற்று. காங்கிரஸ் என்றாலே அப்போது பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள்; ஆனதால் காங் கிரசையே மக்கள் வெறுத்தனர். அதன் காரணமாகக் காங் கிரஸ் செல்வாக்கற்றுப் போய் விட்டது. காங்கிரஸ்காரர் களை மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர். அவர்கள் தனியே வெளியில் வரவே பயந்தனர்.

அதன்பின் காங்கிரஸ் சமுதாயத் தொண்டின் மூலம் தான் மக்களை அணுக முடியும் என்று உணர்ந்ததும் காங்கிரசிற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதன் இலட்சியம் சமுதாயத் தொண்டுதான் என்று சொல்லி மக்களிடையே பிரச்சாரம் செய்தார்கள். எங்கள் இலட்சியம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லி விட்டு, அதன்பின், ஆனால் சாதி அமைப்பை மாற்றக் கூடாது என்றார்கள். தீண்டப்படாத மக்களுக்குத் தனி கிணறு, தனிப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுப்பது என்று வேஷம் போட்டார்கள். சமபந்தி போஜனம் பற்றிக் காந்தியார் சொன்னது என்ன என்றால், மலம் கழிப்பதில் கூட மனிதன் இன்னொருவனுடன் சேர்ந்து இருப்பதற்கு வெட்கப்படும் போது, சாப்பாட்டில் எப்படிச் சேர்ந்து சாப்பிட முடியும்? என்று கேட்டவர் ஆவார். இது பற்றிக் குடிஅரசுவில் அப்போதே கண்டித்து எழுதி இருக்கின்றேன்.

சமுதாய ஏற்றத் தாழ்வைப்- பார்ப்பனர், பார்ப் பனரல்லாதார் என்கின்ற பேதத்தை ஒழிப்பதற்காக என்று, இந்த ஊர் பார்ப்பான் வ.வே.சு. அய்யர் என்பவர் ஒரு குருகுலம் ஆரம்பித்தார். அப்படிக் குருகுலம் ஆரம்பித்த அந்தப் பார்ப்பனர் நமக்கு முன் வந்த, பண்டங்களையே சாப்பிட மாட்டார். அப்படிப்பட்ட அவரால் ஆரம்பிக்கப் பட்ட குருகுலத்தில் சாதி பேதம் கடைப்பிடிக்கப்பட்டது.

பார்ப்பானுக்குத் தனியாக நல்ல உணவும், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனியாக சாதாரண உணவும் பரிமாறப்பட்டது. இந்தக் குருகுலத்திற்குக் காங்கிரஸ் நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகச் சொல்லி முதலில் ரூ. 5000 கொடுத்திருந்தேன். அதன் நடவடிக்கை தெரிந்ததும் நான் அந்த மீதிப்பணத்தைக் கொடுக்க வில்லை. எனக்குத் தெரியாமல் என்னுடைய செகரட்டரி பார்ப்பானிடம் வந்து அந்தப் பணத்திற்குச் செக் வாங்கிக் கொண்டு போய்விட்டார். இது தெரிந்ததும் நான் ராஜாஜியிடம் சென்று பார்த்தீர்களா பார்ப்பன புத்தியைக் காட்டிவிட்டார் என்று கோபித்துக் கொண்டேன். அதற்கு அவர், தான் கண்டிப்பதாக சமாதானம் கூறினார்.

காங்கிரஸ் 1920-இல் சட்டசபையில் எவ்வளவு ஸ்தாபனங்கள் இருந்ததோ அதில் பாகம் தான் 1923-இல் ஜெயித்தார்கள். பின் 1926-இல் ஜஸ்டிஸ் கட்சியினர் அடியோடு தோற்று விட்டனர். அப்போது நம் தீவிர பிரசாரத்தால் காங்கிரசிற்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அதுவரை தேர்தலுக்கு நிற்ப தில்லை என்று பிரசாரம் செய்த காங்கிரஸ் தேர்தலில் நிற்பது என்று ஆரம்பித்தது. நான் அப்போது அதனை எதிர்த்தேன்.

1925-இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் தேர்தலில் நிற்பதானால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு 100-க்கு 50 ஸ்தாபனங்களை ஒதுக்கிவிட்டு மற்றதில் தான் போட்டி போட வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு சென்றேன். அதனைப் பெரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள். ஓட்டுக்கு விட்டால் அந்தத் தீர்மானம் நிறைவேறிவிடும் என்கின்ற நிலை ஏற்பட்டதும், அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்த திரு.வி. கல்யாணசுந்தரம் அவர்கள் காங்கிரசின் கொள்கைக்கு விரோதம் என்று சொல்லி என் தீர்மானத்தை ஏற்கவில்லை என்றதும், உடனே நான் கோபமாகப் பேசிவிட்டு வெளியேறி விட்டேன்.

அதிலிருந்து வெளிவந்த பின்தான் நான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன் கொள்கை கடவுள், மதம், சாஸ்திரம், காங்கிரஸ் ஒழிக, பார்ப்பான் ஒழிக, என்கின்ற 5 கொள்கைகளாகும். இவை ஒவ்வொன்றையும் விளக்கி, குடிஅரசுவில் பல கட்டுரைகளை எழுதினேன். அதை எதிர்த்து எவரும் ஒரு கட்டுரை கூட எழுதவில்லை. பார்ப்பான் எல்லாம் ஒன்று கூடி இதுபோல எழுது கின்றானே என்று யோசித்து, விஜயராகவாச்சாரி தலைமையில் கூட்டம் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் விஜயராகவாச்சாரியே அவன் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகட்டும்; நீங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டாம். அவன் சொல்வதை, எழுதுவதை வெளியிட வேண்டாம் என்று சொன்னார். அதன்படி தான் இன்று வரை பார்ப்பனர்கள் நடந்து கொள்கின்றனர்.

1925-இல் நான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்தேன். 1927-லேயே காந்தி என்னோடு பேசவேண்டும் என்று இராமநாதனை அழைத்து, என்னை அழைத்து வரும்படிச் சொன்னார். இராமநாதன் வந்து சொன்னதும் நானும் அவரும் சேர்ந்தே சென்றோம். காந்தியார் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தார். நானும், இராமநாதனும் போய்ச் சந்தித்தோம். அங்கு இராஜாஜியும், தேவதாஸ் காந்தியும் கீழே இருந்தார்கள். காந்தி மாடியில் தங்கியிருந்தார். நாங்கள் போனதும் எங்களை விட்டுவிட்டு அவர்கள் கீழே வந்து விட்டார்கள். ``என்ன ராமசாமி உன்னைப் பற்றி ``கம்ப்ளைன்ட் வந்திருக்கிறதே என்ன என்றார் காந்தியார். நான் உடனே ஒன்றும் கம்ப்ளைன்ட் இல்லைங்க; இந்த மதம் ஒழிய வேண்டும் என்பது தான் என் கொள்கையாகும் என்றேன். அதற்கு அவர் இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாது என்று ஒப்புக் கொண்டார்.

அந்தச் சம்பாஷணையில் கடவுள், மதம், சாஸ்திரம், ஆகியவற்றைப் பற்றி எல்லாம் பேசினோம். பார்ப்பனர் களைப் பற்றி நான் சொன்னதும், ஏன் பார்ப்பான் மேல் உனக்கு வெறுப்பு வந்தது என்று கேட்டார். உடனே நான் அயோக்கியன் மேல் வெறுப்பு வருவதில் தவறில்லையே என்றேன். அப்படியானால் பார்ப்பனர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்கின்றாயா? என்று கேட்டார். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்றேன். உடனே அவர் ராஜகோபாலாச்சாரி என்றார். அதற்கு நான் அவர் நல்லவர், தியாகி, உண்மையானவர்; ஆனால் எல்லாம் அவர் ஜாதிக்காக என்றேன். உன் கண்ணுக்கு ஒரு பார்ப்பனர் கூட நல்லவராகத் தென்படவில்லையா? என்றார். இல்லை என்றேன். அப்படிச் சொல்லாதீர்கள்; கோபாலகிருஷ்ண கோகலேயை நல்ல பிராமணர் என்றே கருதுகிறேன் என்றார்.

நான் உடனே மகாத்மாவின் கண்ணுக்கே ஒரு பிராமணர் தான் நல்லவராகத் தோன்றியிருக்கிறார் என்றால், சாதாரணமான எங்களைப் போன்றவர்கள் கண்களுக்கு எப்படி உண்மை பிராமணர் தோன்ற முடியும்? என்று சொன்னேன். இப்படி உரையாடியதில் யாரும் எந்த முடிவுக்கும் வரவில்லை.

காந்தியார், இதுவரை நாம் ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று நினைக்கின்றேன். இன்னும் இரண்டு, மூன்று முறை சந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன்னார். சரிஎன்று சொல்லிக் கீழே வந்ததும், இராஜாஜி அவர்கள் என்ன பேசினாய் என்று கேட்டார். நான் அங்கு நடந்த உரையாடலை அப்படியே சொன்னதும் இராஜாஜி, அவருடைய (காந்தியாருடைய) ஒரு மாதத்து ஓய்வைக் கெடுத்து விட்டாய் என்று சொன்னார். தேவதாஸ் காந்தி அவர்கள் இன்னமும் இரண்டு நாள் இங்கேயே தங்கி மறுபடியும் சந்தியுங்கள் என்று சொன்னார். நாங்கள் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்.


15.3.1970, அன்று திருச்சியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

விடுதலை- 7.5.1970

Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.