மனு தர்மத்தை மெய்படுத்தலாமா? குடிஅரசு கட்டுரை -20.09.1947

Rate this item
(0 votes)

ஒரே ஒரு விமோசனம் அதென்ன தெரியுமா? அதுதான் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு காந்தியார் இங்கு வந்தபோது சொன்ன மார்க்கம். அதாவது ஒரு சூத்ர ஸ்த்ரீ வயிற்றில் பிராமணனுக்கு விவாக முறைப் படி பிறந்த பெண் மறுபடியும் பிராமணனையே மணந்ததின் மூலம் அவள் வயிற்றில் பிறந்து இப்படியாக 7 பிறவி பிறந்தால் 7ஆம் தலை முறையில் பிராமண ஜாதி ஆகலாம் என்பதுதான்.

இதுதான் காந்தியார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருப்பூரில் சொன்னது. மற்றும் கடைசியாகச் சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆகமாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்த விதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மையாகும், தத்துவமாகும். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 713)

பிராமண தர்மம்: பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும், பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய்ச் செய்யக்கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத் திற்கு மார்க்கமில்லை என்கின்ற காலத்தில் அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 83)

ஏனெனில் அந்தப் பிழைப்பு இரும்புக் கலப்பையையும் மண் வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டியதாகும். ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். (அத்.10.சு.84)

தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிடவேண்டும். (அத்.10.சு.96)

சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலியவைகளுக்கு உரிமை கிடையாது. (அத். 10. சு.126)

சூத்திரன் எவ்வளவு தகுதியுடைய வனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிக மாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிரா மணனுக்கு இம்சையாக நேரும் (அத்.10.சு.129)

சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். (அத்.11. சு.13)

அசுரர்கள் என்பது சூத்திரர் களைத்தான் என்பதற்கு ஆதாரம். மனு தர்ம சாஸ்திரத்தில் 11ஆம் அத்தியாயம் 20ஆம் சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் - அவர் கள் பொருளைக் கவ்வுவது தர்ம மாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திராவிடர்கள் சூத்திரர்கள். சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்திரமே இந்து மதத்திற்கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என் பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக் கூடாதென்றும். அவை எப்படியாவது ஒழிக்கப் பட்டே ஆக வேண்டுமென்றும் அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களைத் திராவிடர் களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர் கழகத் திராவிட நாடு எழுச்சிக்கு தமிழ்நாடு.ஆந்திரநாடு, கேரள நாடு, கர்நாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவதென்றால், மனுதர்ம சாஸ்திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்பதல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும்?

குடிஅரசு கட்டுரை -20.09.1947

Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.