முஸ்லீம் வாலிபர்களுக்கு. குடி அரசு துணைத் தலையங்கம் - 15.02.1931

Rate this item
(0 votes)

சமீப காலமாக, அதாவது சுமார் ஒரு வருஷகாலமாக அநேக இஸ்லாம் வாலிபர்களுடனும், பல மௌல்விகளுடனும், இரண்டொரு மௌலானாக்களுடனும் நெருங்கிக் கலந்து பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. அதிலிருந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் பலர் முழுவதையும், சிலர் ஒன்றிரண்டு தவிர மற்றதையும் ஒப்புக்கொள்ளுபவர்களாகவே அறியமுடிந்தது.

ஆனால் கடவுள் என்பதைப் பற்றி மாத்திரம் அவர்களில் அநேகர் தங்கள் அபிப்பிராயத்தை வெளியில் எடுத்துச் சொல்லவே பயப்படுவதையும் சிலர் அப்புறம் இப்புறம் திரும்பிப் பார்த்துப் பேசுவதையும், பார்க்கும்போது நமக்கு மிக்க பரிதாபமாகவே இருந்தது.

அதில் ஒருவர் நம்மிடம் பேசுகையில் “நீங்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசும், எழுதும் எழுத்துக்கள் எல்லாம் இந்துமதக் கடவுள்களைப் பற்றி மாத்திரம் பேசுகின்றீர்களா? அல்லது மற்ற மதக் கடவுள்களையும் பற்றி பேசுகின்றீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு நாம் விடையளிக்கையில் “நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் தானே காரண பூதனாயிருக்கின்றதும், அதை வணங்கினால் நமது தேவைகள் பூர்த்தியாகுமென்பதும், அதற்கு பணி விடை செய்தால் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும் என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது செய்த கருமத்திற்குத் தகுந்த பலனை நாம் செத்தபிறகு நமது ஜீவன் அல்லது ஆத்மா என்பவைகளுக்கு அளிக்கின்றாறது என்னப்படுவதுமான கடவுள் என்பது எந்த மதத்தைச் சேர்ந்ததானாலும், அந்த அர்த்தம் கொண்ட கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றோம்” என்று சொன்னோம்.

“இந்தப்படி சொல்வதற்குக் காரணம் என்ன?” என்று அவர் கேட்டார்.

நாம் அதற்கு விடையளிக்கையில், “இந்த மாதிரியான ஒரு கடவுள் தன்மையை மக்களுக்குள் புகுத்துவதால் மனித வர்க்கம் தன் முயர்ச்சியற்று, முற்போக்கற்றுப் போவதற்கு இடமேற்படுகின்றது என்றும், இந்தியா இன்று இந்த மிருகப்பிராய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும், மற்றும் மக்களில் உயர்வு தாழ்வும், செல்வவானும், தரித்திரனும் இருக்க இதுவே காரணம்” என்றும் சொன்னோம்.

அதற்கவர் “அப்படியானால் உங்களுடைய கடவுள் சம்பந்தமான எழுத்துக்கள் எங்கள் ஆண்டவனையும் தானே சேர்த்துப் பேசுவதாயிருக்கின்றது” என்று சொன்னார்.

நாம் அதற்கு, நான் என்ன செய்யலாம், உங்களுக்காக வேண்டு மானால் இஸ்லாமானவர்கள் கடவுள் தவிர என்று சொல்லி விடட்டுமா? என்று சொன்னோம்.

அதற்கவர் சிரித்துக்கொண்டே, எங்களைப் பரிகாசம் செய்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு “நீங்கள் மேலே குறிப்பிட்ட குணமும், தன்மையும் கொண்ட கடவுளைப் பற்றித்தான் சொல்லுகின்றேன் என்று சொன்னபிறகு, இஸ்லாமானவர்கள் கடவுள் மாத்திரம் அதிலிருந்து எப்படி விலக்கப்படும் என்றும் இன்றைய தினம் எல்லா மார்க்கத்தாரும் இந்த மாதிரியாகத்தானே கடவுளைக் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று சொன்னார்.

அப்படியானால் அதற்கு நாம் என்ன செய்வதென்று சொன்னோம்.

அதற்கவர் “அதை மாத்திரம் விட்டுவிடக்கூடாதா” என்றார்.

நாம் எதை, இஸ்லாம் கடவுளை மாத்திரமா? என்றோம்.

அவர் மறுபடியும் சிரித்துக் கொண்டு “பொதுவாகக் கடவுள் என்பதையே தான் சொல்லுகின்றேன்.” என்று சொன்னார்.

நாம் மற்ற கடவுள்களைச் சொன்னால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டது என்றும், வேண்டுமானால் உங்கள் கடவுளைச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னோம்.

இவற்றை நாம் பரிகாசமாய் சொல்லுவதாக அவர் உணர்ந்து பிறகு உண்மையாய் பேசுவதாய்ச் சொல்லிப் பேசியதாவது :-

“நீங்கள் சொல்லுவதில் குற்றம் இருப்பதாக நான் சொல்லவரவில்லை. ஆனால் என்போன்றவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பது தான் எனது கவலையே ஒழிய கடவுளைப் பற்றிய கவலை எனக்குச் சிறிதும் கிடையாது. சுமார் பத்துவருஷ­ காலமாகவே எனக்கிருந்ததில்லை. ஆனாலும் கவலை இருக்கின்றதாக நம்பிக்கொண்டு நடக்கின்றவர்களைவிட நான் மிகவும் ஒழுக்கத்துடனும், நியதியுடனும் நடந்து வந்திருக்கின்றேன் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். ஆனால் என்னுடைய நடவடிக்கையை விட கடவுளைப் பற்றிக் கவலை கொண்டிருப்பதாக நான் நடந்து கொண்ட வேஷ நடவடிக்கையே என்னை பிறத்தியார் மதிக்கச் செய்திருக்கின்றதே அல்லாமல் என் ஒழுக்கத்தைப்பற்றி யாரும் மதிப்பதில்லை. ஆதலால் கடவுளைப் பற்றி கவலையில்லை என்று சொல்லிவிட்டால் என்னை எனது மார்க்கத்தார்கள் ஒழித்து விடுவார்கள்” என்று சொன்னார்.

அதற்கு நாம் உங்களுக்கு அந்த மாதிரி மக்களின் மதிப்பு வேண்டுமானால் அந்தப்படியே நடவுங்கள் இல்லாவிட்டால் தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னோம்.

பிறகு, அவர் கடைசியாக முஸ்லீம் வாலிபர்களுக்குள்ளாவது இப்படியொரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்று கருதியிருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நாம் மிகவும் சந்தோஷம் என்று சொன்னோம். பிறகு வேறு பல விஷயங்கள் பேசினோம்.

நிற்க, இந்தப்படியான எண்ணமுள்ள இன்னும் அநேக வாலிபர்கள் இருக்கின்றார்கள். இரண்டொரு வாலிபர்கள் இதற்காக அதாவது சுயமரியாதை இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தங்களது மார்க்கத்தைக்கூட விட்டுவிடத் தயாராயிருப்பதாகச் சொன்னார்கள். அப்படி அவர் சொல்ல நேர்ந்த அவசியம் அவருக்கு மனித சமூகத்தினிடமிருக்கும் அன்பானது அவருடைய மார்க்கத்தைவிட பெரியதாகக் கருதியதேயல்லாமல் வேறல்ல.

ஆகவே, அப்படிப்பட்ட வேகமுள்ள வாலிபர்களானாலும், மௌல்விகளானாலும் தங்கள் சமூகத்திலுள்ள சில பழக்க வழக்கங்கள் மார்க்கத்தின் பேரினாலும், புரோகிதர்களாலும், இந்துக்கள் சாவகாசத்திலானாலும் அவை மனித இயற்கைக்கும், தர்மத்திற்கும் விரோதமாய் இருந்தால் அக் கொள்கைகளை அதிலிருந்து கொண்டே திருத்த முயற்சிப்பதுதான் பயனளிக்குமேயொழிய மார்க்கத்தை விட்டு திடீரென்று வெளியேறி விட வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். இந்தப்படி அவர்களை அந்த மார்க்கக் கட்டளைப்படி நடந்து ஆண்டவன் என்பவரிடம் சன்மானம் பெறவோ, மோக்ஷமடையவோ நாம் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அந்த மார்க்கப் பேரைச் சொல்லிக்கொண்டாவது, அந்த சமூகத்தை சீர்திருத்தம் செய்யப் பயன்படுவார்களே என்கின்ற ஆசையின் மீதேயாகும்.

கமால் பாக்ஷா வீரர் மார்க்கத்தை வெளிப்படையாய் விட்டிருந்தாரானால், அவரால் அந்த சமூகத்திற்கு அவ்வளவு நன்மை செய்திருக்க முடியாது. ஆதலால் நமது முஸ்லீம் வாலிபர்களும், வங்காள முஸ்லீம் வாலிபர்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதுபோல இந்த மாகாணத்திலும் புரோகித ஒழிப்புச் சங்கமென்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்து கொண்டு அதன் மூலம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் அநேகத்தை நிறைவேற்றி வைக்கலாம். அன்றியும் இந்தத் துறையில் மற்றவர்களைவிட முஸ்லீம்களுக்கு வேலை குறைச்சலாய் இருக்கின்றதென்றே சொல்லுவோம். ஏனெனில் அவர்களுடைய மார்க்கக் கட்டளைகள் என்பதில் பல ஏற்கனவே சுய மரியாதைக் கொள்கையாகவே இருக்கின்றன.

ஆகையால் கடவுளைப் பற்றிய பேச்சு மாத்திரம் அவர்களுக்கும் வேண்டியதில்லை என்பது நமது அபிப்பிராயமாகும். வேண்டுமானாலும் அதை முதலில் பிரசாரம் செய்வதைவிட மற்ற காரியங்களைச் செய்வதே அனுகூலமானதாகும். விவகாரம் வரும்போது அதைப் பற்றியும் பேச யாரும் பயப்படவேண்டியதில்லை. ஆனால் அது அவரவருடைய சொந்த அபிப்பிராயம் என்றுகூட சொல்லிக் கொள்ளலாம்.

ஆகவே முடிவாக நாம் சொல்லிக் கொள்வதென்னவென்றால் முஸ்லீம் வாலிபர்கள் இந்த தமிழ்நாட்டில் ஒரு புரோகித மொழிப்புச் சங்கம் ஏற்படுத்திக்கொண்டு மக்களை புரோகிதக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கும் படியும், தங்கள் தங்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க மக்களுக்குத் தைரியம் வரும்படியாகவும் செய்ய வேண்டியது முதல் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதற்கு அவசியமும் மற்ற இதன் முழு விபரங்களும் வேண்டுமானால் வங்காள முஸ்லீம் புரோகிதமொழிப்புச் சங்கத்தாரிடமிருந்து தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதன் அவசியத்திற்குக் காரணம் அவர்கள் சொல்லுவதற்கு மேல் நாம் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. மூட நம்பிக்கை என்பதும் புரோகித ஆக்ஷியென்ப தும் எந்த மதத்திலும் இருக்கக்கூடாது என்பதை யாரும் ஒப்புக்கொள்ளுகின்றார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மதத்தில் அவை இல்லை என்று சொல்லிவிட்டு அன்னிய மதத்தில் இருப்பதாகச் சொல்லு கின்றார்கள். ஆதலால் இன்ன மார்க்கத்தில்தான் இருக்கின்றது என்றும், இன்ன மார்க்கத்திலில்லை யென்றும் யாரும் வாதிட வேண்டியதில்லை. நடு நிலைமையிலிருந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டுபார்த்து, தங்களுக்கு இருப்பதாய் தோன்றினால் அதை விலக்கட்டும். தோன்றாவிட்டால் அப்ப டியே இருக்கட்டும் என்கின்ற கொள்கை வைத்தே முதலில் வேலை துவக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். வேலை துவக்கினால் பொதுநல ஊக்கமுள்ள அநேக மௌல்விகள்கூட ஒத்துழைக்கத் தயாராயிருக் கின்றார்களென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தந்தை பெரியார் -குடி அரசு துணைத் தலையங்கம் - 15.02.1931

 
Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.