கிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு!இல்லை என்று மறுத்துக் கூற முடியுமா? விடுதலை-4.4.1950

Rate this item
(0 votes)

மக்களைப் பிரிப்பதே மதம்

ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவைகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவைகள் அவரவர்கள் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர மக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக் குள்ளே இருக்கும் உயர்வு தாழ்வுகளை ஒழித்து, எந்தவிதமான சமத்துவத்தையோ, ஒழுங்கையோ, ஒழுக்கத்தையோ நிலை நாட்டவில்லை என்பதால்தான்.

வேறு மதத்தவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. எந்த மதம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அந்த மதம் மனித சமுதாயத்தைப் பிரித்து வைத்திருக்கிறது. நம்முடைய மதம் இன்னது என்று கூறிக்கொள்ளத்தான் முடிகிறதேயொழிய, வேறென்ன இவைகளால் லாபம்.

இந்து மதத்தை எடுத்துக்கொண்டால் இன்னும் மோசம். 4 அல்ல 400 அல்ல 4000-க்கும் மேற்பட்ட வகையாக மக்களைச் சாதி பேர் சொல்லி இந்து மதம் மக்களை ஒன்று சேரவொட்டாமல் பிரித்து வைத்திருக்கிறது. ஒரு மதத்திலேயே 1000 கணக்கான சாதிகள்-அதிலே ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நிலையென்றால் இது எப்படி நியாயம் ஆகும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுக்குப் பெயர் பிராமணன், மற்றவனுக்குச் சூத்திரன், கடைசியானவனுக்குப் பஞ்சமன் என்ற பட்டம் இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது, தொடக்கூடாது, பார்த்தால், தொட்டால் தீட்டு என்று எழுதி வைத்துக்கொண்டு இந்த 1950ஆம் ஆண்டிலேயும் அதையே நடைமுறையில் செய்கிறார்கள்.

அதுபோலவே கிருஸ்துவ மதத்தை எடுத்துக் கொண்டாலும், நம் நாட்டைப் பொறுத்த வரையில் அது மோசமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை விட கிருஸ்துவ மதம் பல மடங்கு மேல் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்து மதத்தைப் போலவே பாப்பாரக்கிருஸ்துவன் என்பது போன்று பல சாதிப்பிரிவுகள் இருந்து கொண்டு, அவைகளின் பெயரால் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டும் வருகின்றது.

எவனாவது ஒருவன் இந்து மதத்தை விட்டு கிருஸ்துவமதத்திற்குப் போவானென்றால் இந்து மதத்திலே தனக்கிருக்கும் இழிநிலை, அவைகளிலே போதிக்கப்படும் மூடக் கருத்துக்கள் இவைகள் பிடிக்காமல், அறிவு, நாகரிகம், சமத்துவம் பெறவேண்டுமென்றுதானே கிருஸ்துவ மதத்திற்குப் போயிருப்பான். வேண்டுமானால் சில பார்ப்பனர்கள் இல்லை என்று கூறலாம்.

பணம் கொடுத்து பாவையரைக் காட்டி நம்மவரை மயக்கினார்கள் என்று கூறுவார்கள். அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அந்தப்படி பணத்தைக் காட்டி, அவர்களை மதம் மாறும்படி செய்திருந்தால் இப்போதுள்ள கிருஸ்துவர்கள் பணக்காரர்களாய் இருக்க வேண்டும். அப்படி யாரும் பணக்காரர்களாய் இருப்பதாகவும் தெரிய வில்லை.

அல்லது பெண்களைக் காட்டி ஏமாற்றினார்களென்றால் கிருஸ்தவத் தாய்மார்கள் வெள்ளைக்காரப் பெண்மணிகளாக இருக்க வேண்டும். அதுவும் இல்லை. பின் ஏன் கிருஸ்துவ மதத்திற்கு மாறினார்கள் என்று கேட்டால், இந்து மதத்திலே நமக்கு இருக்கும் இழிவு ஒழியும், அறிவு நாகரிகம் வளரும் என்பதால் தான். இன்னமும் நான் கூறுவேன், இந்த நாட்டிற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் கிருஸ்துவர்கள் தான் என்று.

கிருஸ்துவ ஆங்கிலேயன் இங்கு வராதிருந்தால் நம் மக்கள் இன்றும் நாய்கள், பன்றிகள் நிலையிலேயேதான் காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள். அவனால் ஏதோ நமக்கு அறிவு சிறிது வளர்ந்து, இன்று ஓரளவு நாகரிகம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தக் கருத்தை எந்தப் பார்ப்பனரிடமும் வாதாடி அவைகளை ஒத்துக் கொள்ளும்படி செய்ய என்னால் முடியும்.


இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதத்தில் தங்கள் நலன் கருதி இந்துக்கள் சேர்ந்தாலும், அதிலேயும் சாதிப்பிரிவு இருக்கிறது, ஆகவே தான் அதிலேயும் சீர்திருத்தம் வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

அது போலவே முஸ்லீம் மதமும் இந்த நாட்டு மக்களை எவ்வளவோ சீர்திருத்தியிருக்கிறது. நம்முடைய நாட்டு மக்கள் அத்தனை பேரும் சமுதாயத்தில் ஒன்று என்று இல்லா விட்டாலும் கூட, முஸ்லீம்களைப் பொருத்த மட்டிலுமாவது, தங்களுக்குள் சாதி பேதம், உயர்வு, தாழ்வு என்பது இல்லாமல் செய்து விட்டார்கள். முஸ்லீம் என்று சொன்னால் அவர்கள் காரியத்திற்கு ஒன்றுபட்டு, கட்டுப்பாடாக இருந்து செயலாற்றும் பண்பு அவர்களுக்கு இருக்கிறது.

ஆகவே கிருஸ்துவ, முகமதிய மதத்தை விட இந்து மதம் மட்டம் என்பதோடு மட்டுமல்ல, அவைகளில் இல்லாத பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் இந்து மதத்திலே இருக்கின்றன. ஏனென்றால் இதில்தான் பித்தலாட்டத்தையே போதிக்கும் வேத புராண, இதிகாசங்கள் நிறைந்திருக்கின்றன.

அதுமட்டுமல்ல ஆயிரங்கடவுள்கள், அதன் பேரால் ஆபாசமான கற்பனைகள் நிறைந்திருக் கின்றன. அந்தக் கடவுள்கள் உருவ பேதம், குணபேதம், கொண்டு நம்மைவிட மோசமான நிலையிலிருக்கின்றன. பல பெண்டாட்டிகள் உடைய கடவுள், தேவடியாள் வீட்டுக்குச் செல்லும் கடவுள், ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்ளும் கடவுள்-ஆக இந்தப் பலரகக் கடவுள்கள் இந்து மதத்தில்தானே இருக்கின்றன.

கிருஸ்தவ மதத்திலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. முஸ்லீம் மதத்திலும் ஜாதி பேதம், உருவக் கடவுள், ஆபாசக் கடவுள்கள் இல்லை என்றாலும் சில குறைபாடுகள் உண்டு. இல்லை என்று எந்த முஸ்லீமாவது மறுத்துக் கூற முடியுமா? நல்ல கடவுள்கள் என்றால் பணக்காரன் என்று ஒருவனும், பிச்சை யெடுத்து வாழவேண்டும். என்று மற்றொருவனும் என்று ஏழை பணக்காரனைக் கொண்ட எந்த மதமும்; கடவுளும் உண்மையான மதம் ஆகாது.

ஒருவனுக்குப் பூமி இருக்க வேண்டுமானால் காடுவெட்டி கழனியாக்கிச் செய்திருந்தால் தான் முடியும். அப்படி ஏற்பட்ட சொத்துக்கள் தானே எல்லாவகையான அத்தனையும். அவை ஏன் ஒரு தனி மனிதனிடத்தில் 100 ஏக்கரா 50 ஏக்கரா என்று இருக்க வேண்டும். மற்றவன் வயிற்றுக்கு இல்லையே என்று வாடி இருக்கவேண்டும்.

ஒருவனிடத்தில் ஏன் 2 அடுக்கு, 3 அடுக்கு மாடி வீடுகள் பல இருக்க வேண்டும்; மற்றொருவன் குந்தக் குடிலற்று கதறி அழும் நிலையில் இருப்பது. நாணயமான, யோக்கியமான கடவுள் என்றால் மக்களுக்கு இத்துறையில் இதுவரை செய்ததென்ன? இந்த நாட்டில் எத்தனை பேர் படிப்பற்றவர்கள்? படிக்க வசதியில்லாதவர்கள். இவர்களுக்கு இந்தக் கடவுள் சாதித்ததென்ன?

ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம் எங்கள் கடவுள், எங்கள் மதம், எங்கள் சாஸ்திரம் என்று ஒவ்வொருவரும் கூறுவதும் அடிப்படையில் ஒன்றுதான், கலரில் தான் வித்தியாசம் இருக்கிறதென்று. ஏன் என்றால் அவைகள் அந்தக் காலத்திலே சரியாக இருக்கலாம். அந்தக்காலத்து மக்கள் அறிவுக்கேற்ற முறையில், அறிவுத்தெளிவு ஏற்படாத அந்தக் காலத்தில் இந்த மாதிரியான காரியங்கள் செய்தார்கள்.

கடவுள்கள் அத்தனையும் நம்முடைய கற்பனைகளே. இந்துக் குழந்தைக்கு இந்துக் கடவுளரைப் பற்றியும், மகமதியக் குழந்தைக்கு மகமதிய கடவுளரைப்பற்றியும், கிருஸ்துவக் குழந்தைக்குக் கிருஸ்துவக் கடவுளைப் பற்றியும் அந்தந்த மதத்தவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் தெரிகிறதே தவிர, இயற்கை யிலேயே கடவுள் உணர்ச்சி அக்குழந்தை களுக்கு ஏற்படுவதில்லை.

1.4.1950 அன்று வீரகலூர் பொதுக்கூட்டத்த்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

விடுதலை-4.4.1950

Read 19 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.