தாலி எதற்காகக் கட்டப்படுகிறது? விடுதலை 20.2.1968

Rate this item
(0 votes)

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே!

நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன். ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே, என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்ப வனாவேன்.

இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?

அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சி யடைந்து விட்டது.

தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரன் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?

100 வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது.

அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கிய பின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று! நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.

பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான்.

நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான்.

கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத் திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.

இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடிய வில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!

அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.

இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல், மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான், நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல், காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!

தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும்.

பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150 வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.

பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டப்படி கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.

இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21 வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல அளவு கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.

தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்கவேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.

பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை, கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.

இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுபலமானதாகும்.

நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.

மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்.

வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசை மொழிகளுக்கு என்ன பலனோ, அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும்.

அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.

9.2.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து.

விடுதலை 20.2.1968

 
Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.