அண்ணா முடிவெய்திவிட்டார்! அண்ணா வாழ்க! 04.02.1969

Rate this item
(0 votes)

அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! நோய் வருவதும் முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்சநிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.

யானறிந்த வரை, சரித்திரம் கண்ட வரை, அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4ல், 8ல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டிய தான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.

இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்று விட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்கமுடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார் எனவே அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்ட முடியாது.

இன்று மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் நானறிந்த வரை அண்ணா முடிவடைந்து விட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பதுதான். நான் சொல்லுவேன் அண்ணா இறந்து விட்டார். அண்ணா வாழ்க என்பதற் கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எந்தவித மாறுதலும் (திருப்பமும்) இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்தே வரும் ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு, அதன் படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

அண்ணா நோய் வாய்பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெரு மானும், மாண்புமிகு மந்திரிமார் களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும் சிகிச்சை செய் வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ண மூர்த்தி, முதல் வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங் குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்து கொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரிக்கைக்காரர் களும், விஷ யங்களை அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும், மிக மிகப் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும்.

தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டு மென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுகிறேன்.

04.02.1969 அன்று சென்னை வானொலி மூலம், பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வர் நள்ளிரவு 12.22 மணிக்கு 03-02-1969 இல் மறைவுற்றமைக்கு தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை:

Read 33 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.