தமிழிசை எப்படி இருக்கவேண்டும்? குடிஅரசு தலையங்கம் - 29.1.1944

Rate this item
(0 votes)

தமிழிசைக்கு கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள். பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது.

இசை விருந்தளிக்கும், செல்வவான்களும் நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இனி என்ன செய்ய வேண்டும்?

தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழில்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாட வேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம் நமக்குத் தமிழினிடம் ஏற்பட்ட உணர்ச்சியேயாகும். இது ஒரு பெரிய மாறுதல்தான்.

இசை, நடிப்பு ஆகியவை எதற்கு பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அவை மனதில் பதியவைப்பதற்கும் அவை வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனத்திற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன. அடுத்தபடியாக இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி இருந்து வருகின்றது. ஆகவே இசைக்கும், நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால் நுகர்வோரும் இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை இல்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதை சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும் வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய் விடுகிறது.

நம் நாடும் நாமும் எவ்வளவோ குறைபாடுகள் உடையவர்களாக இருக்கிறோம். அக்குறைபாடுகள் ஒழிக்கப்படுவதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்கிறோம். இம்முயற்சியின் மூலம் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் அனுபவித்து வருகிறோம். இவற்றை யாராலும் மறுக்க முடியாது. அப்படியிருக்க நம்முடைய கலைகள், நாம் அனுபவிக்கும் நுகரும் சாதனங்கள், இன்பத் தன்மைகள் ஆகியவை எப்படியிருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால கஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத்தக்க தாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாத தாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும் உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன் இவைகளையே பொருள் கொடுத்தும் காலத்தையும், ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து அறிவும், மானமும் கேட்டு, முற்போக்கும் தடையுற்று கீழ்நிலைக்கு வர வேண்டியவர்களாவோம்.

------

நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள். நாட்டிலுள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒருகாலைத்தூக்கி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீபதூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்காக மக்களை வரவழைத்துப் பஜனை பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்கு பக்தி புகட்டுவதும் தானா? இது யார் செய்ய வேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்? நிலை குலைந்து, இழிவடைந்து தரித்திரர்களாய், மடையர்களாய், கீழ் மக்களாய், மக்களுக்கு என்ன பலனைத் தரும்? அவர்கள் குறையைப் போக்கிக் கொள்ள ஏதாவது உணர்ச்சி ஏற்படுமா? அல்லது முயற்சியை நடக்குமா? மறுமுறையும் சிந்தித்துப் பாருங்கள். இதில் பொருளாதார ஞானம் இருக்கிறதா என்று பஜனைப் பாட்டுகள் தமிழில் இருந்தால் என்ன, தெலுங்கில் இருந்தால் என்ன, இந்தியில் இருந்தால் என்ன, அல்லது ஜப்பான், ஜெர்மனி, பாஷையில் இருந்தால்தான் என்ன? கடவுளுக்கு எந்தப் பாஷை தெரியாது?

நாட்டினுடைய செல்வம், அறிவு, ஊக்கம், உணர்ச்சி இந்தப் பஜனைக்காகவா இப்படி செலவழிக்கப்பட வேண்டும்? இதைக் காணும் அயலான் எவனாவது இந்த நாட்டு மக்களுக்குத் தன்மான உணர்ச்சியோ, இழிவையும், கீழ்மையையும் கண்டு உடல் துடிக்கும் சொரணையோ இருக்கிறது என்று கருத முடியுமா? நாட்டு மக்களுக்கு இதில் பிரவேசித்து இந்தத் தன்மானத்துக்குக் கேடு செய்யும் தன்மைப்பற்றி சிந்திக்கவோ, விளக்கவோ, தடுக்கவோ, உரிமை இல்லையா என்று கேட்கிறேன்.


தமிழிசைக் கிளர்ச்சிக்குச் செலவாகும் பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் பார்த்தால் அதன் பயன் இந்த பஜனையில் முடிவதானால் மானமும் அறிவும் உள்ள எவனுக்குத்தான் வயிறு எறியாது என்று கேட்கிறேன்.

(பெரியார் அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சேலம் சென்ட்ரல் தியேட்டர் அருகில் சென்னை நீதிக்கட்சி மாநாடு, திருச்சி பொதுக்கூட்டம் ஆகியவற்றில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை)

குடிஅரசு சொற்பொழிவு 26.2.1944

 

இசை (சங்கீத)க் கலைக்கு மொழி முக்கியமில்லை. குரல் இனிமை, ஒலி இனிமை, தாள இனிமை தான் முக்கியமானது. மொழி இனிமை முக்கியமல்ல என்று இருக்குமேயானால், நமக்கு இந்த இசைக் கலை வளர்ச்சி முயற்சியில் இன்று கலந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் மொழி இனிமையை முக்கியமாய் நாம் சொல்லும் போது அம்மொழிக்கு பொருள் வேண்டாமா? அப்பொருளுக்கு பலன் வேண்டாமா? அப்பலன் கிளர்ச்சியின் குறிக்கோளுக்கு ஏற்றதாக, நலந்தரத்தக்கதாக இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டுகிறோம்.

உதாரணமாக சென்னைத் தமிழ் இசை மாநாட்டில் இசைவாணர் தியாகராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.

ஒரு பாட்டு:
(ராகம்: ஷண்முகப்பிரியா)

பல்லவி
பார்வதி நாயகனே பரமசிவா
கருணாகர சம்போ
அனுபல்லவி
சர்வ பௌமனே சங்கரனே
கைலாசவாசனேசந்திரசேகரா
என்பதாகும்,
மற்றொரு பாட்டு.
(ராகம்: லதாங்கி)
பல்லவி
ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி
அனுபல்லவி
ஒ ஜனநி நீயே அபயம்
சாணுன் உபய சரணம் என்பதாகும்.

இப்படியே தான் அங்கு நடந்த 100க்கு 97 பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளை தெலுங்கிலோ, சமஸ்கிருதத்திலோ, இந்தியிலோ, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி, இருந்தால் என்ன குடிமுழுகிப் போய் இருக்கும்.

இந்த மாதிரி பாட்டுகள் பாடச் செய்வதற்கு ஆகவா இருகோடீஸ்வரர்கள் கூடி, உலகத்தைத் திரட்டி பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர்ந்த திருவிழா இராப்பத்து பகல் பத்து போல் நடத்துவது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால் இதற்கு (ஐகோர்ட் ஜட்ஜுகள் முதல்) இத்தனை பெரியவர்கள் விரோதம் தான் இப்பெரியார்களுக்கும் தமிழ் இசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்பட வேண்டும் என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை என்றே தோன்றும்.

----

ஆரியப் புராணங்களில் அதேகம் முத்தமிழ் கலை இலக்கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய்திருக்கும் கேட்டை ஒழிக்க.. மானத்தில் கவலையுள்ள நாம் எதை பலி கொடுத்தாவது இந்த நிலையை மாற்றியாக வேண்டும்; அடியோடு ஒழித்தும் ஆக வேண்டும்.

ஏனெனில், இப்படிப்பட்ட முன்னேற்றமான காலத்திலும்கூட தமிழர்கள் மனிதத்தன்மை பெறாததற்கும், அதைப்பற்றி சரியான கவலை கொள்ளாததற்கும் இந்தப் புராண இதிகாச கதைகளின் உண்மை அறியாத மூடநம்பிக்கையே முதற் காரணம்.

இந்த மூடநம்பிக்கைகளே தான் தமிழர்களாகிய நமக்கு மதமாகவும், பக்தியாகவும், கடவுளாகவும் இருப்பதோடு மாத்திரமல்லாமல், இவைகளே கலையாகவும், நாடகமாகவும், சங்கீதமாகவும், சினிமாவாகவும், இலக்கியங் களாகவும், மக்களை மேன்மையாகவும், கீழ்மையாகவும் கருதவும், வாழ்க்கை நடப்பதற்கு நீதியாகவும், உபமான உபமேயமாக எடுத்துச் சொல்லுவதற்கு ஆதாரமாகவும் இருக்கின்றன.

அன்றியும் அறிவாளிகள், கவிகள், பண்டிதர்கள், மேதாவிகள், மகாத்மாக்கள், மகான்கள் என்பவர்களுக்கும் அவர்களது வாழ்வுக்கும், மேன்மைக்கும், விளம்பரத்துக்கும் மூலப் பொருள் பொக்கிஷங்களாய் இவைகளே இருக்கின்றன. ஆதலால் மொழி, சமுதாயம் ஆகிய துறைகளிலும், அறிவு, கலை, இலக்கியம், சமயம் முதலாகிய துறைகளிலும், நம் மக்களுக்கு இன்று இருந்துவரும் இழிவுகள் ஒழிந்து மேன்மைகள் ஏற்பட வேண்டும் என்று உண்மையாய் கருதுகிறவர்கள் இதுபோன்ற பெருத்ததொரு புரட்சிகரமான முயற்சிகள் செய்ய வேண்டும்.

சமநிலை அடைய வேண்டுமானால்

உண்மையாகச் சொல்லுகிறேன், வடமொழி சாஸ்திர புராண இதிகாசங்கள் (தமிழர்களாலேயே ஆனவைகளானாலும்) அவை எந்த ரூபத்தில் நுழைக்கப்பட்டு இருந்தாலும், அல்லது தானாகவே நுழைந்திருந்தாலும் அவை அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய, தமிழன் மனித உரிமையோடும் மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள்.

... மற்றும், அவைகள் வடமொழியில் இருப்பதைவிட தமிழில் இருப்பவைகளே நமக்கு மிகுதியும் கேடு செய்யக் கூடியவையாகும். அன்றியும் அவை வெறும் கதை, காவியம் புராணம் ஆகிய உருவில் இருப்பவைகளைவிட கலை உருவில் இருப்பதும்; இலக்கியம், நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் உருவில் இருப்பதும் மிக மிகக் கேடு செய்பவையாகும் என்பதே எனது அறிவுக்கு ஆராய்ச்சிக்கும் எட்டிய முடிந்த முடிவாகும்.

...... எப்படியாவது அந்தப் புராண, இதிகாச, தேவார, பிரபந்தம் ஆகியவை கூறும் இராமன், கிருஷ்ணன், சிவன், சுப்பிரமணியன், ஷண்முகன், காளி, கவுரி முதலிய கடவுள்களையும் அவர்களைப்பற்றிய கலை, இலக்கியம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன்மையும் ஆன கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள். இந்தக் காரியங்களில் சமய, புராண, இதிகாச பண்டிதர்களையும் சமயாச்சாரிகளையும், கலை வாணர்களையும் துச்சமாகக் கருதுங்கள்.

உங்கள் மனோவேகம் கொண்ட மட்டும் அவர்களை வெறுத்துத் தள்ளுங்கள்.
இவர்களை, ஆரியர்களைவிட மோசமான உங்கள் விரோதிகளாகக் கருதுங்கள்.

 

தந்தை பெரியார்.

குடிஅரசு தலையங்கம் - 29.1.1944

 
Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.