பார்ப்பனத்தியைக் கல்யாணம் செய்து கொண்ட நம்மவர்கள் நிலை. விடுதலை-26.11.1958

Rate this item
(0 votes)

டாக்டர்களுடைய அன்பான நடத்தையாலேயே உலகத்தில் அரைவாசி நோய் போய்விடும். ஆனால் ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போனால் அங்கிருக்கிற டாக்டர் பார்த்தாலே நோய் தானாக வருகிறது!

இந்தத் திருச்சியிலே சர்க்கார் (அரசு) ஆஸ்பத்திரியிலே (மருத்துவமனையிலே) இருக்கிற (மாவட்ட மருத்துவ அதிகாரியிடம்) டி.எம்.ஓ.விடம் நோய் என்று சொல்லி எங்களுடைய ஆள்கள் போனால் மிகவும் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்துகிறாராம்.. அவர் ஜாதிமுறைப்படி ஓர் ஆதி திராவிடர் பறையன், பஞ்சமன் என்று சொல்லப்படும் கீழ் ஜாதியைச் சார்ந்த ஒருவர். இவர்களுக்கெல்லாம் என்ன பிறக்கும்போதே யோக்கியதை, அந்தஸ்து (தகுதி) வந்துவிட்டதா? யாராலே வந்தது இந்த யோக்கியதை என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்த சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதானே பறையன், சக்கிலி, பஞ்சமன் என்பவரெல்லாம் மாறிக் கொண்டு வருகின்றன. யாராவது மறுக்கட்டுமே பார்க்கலாம். இதுமாதிரி ஆள்கள் எல்லாம் டி.எம்.ஓ.வாக வருவதற்கு யார் முயற்சி பண்ணினது? சொல்லட்டுமே பார்ப்போம்! ஜஸ்டிஸ் கட்சி என்ற இந்தத் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னால் எந்தப் பறையன், எந்தச் சக்கிலி, எந்தப் பஞ்சமன் இங்கு டி.எம்.ஓ.வாக (மாவட்ட மருத்துவ அதிகாரியாக) வந்திருக்கிறான்? எடுத்துக்காட்டினால் ஏற்றுக் கொள்கிறேன்.

நீங்கள் பிறவியில் இழிந்தவர்; ஜாதியால் கீழ்ஜாதி; உங்கள் பிறவி இழிவை ஒழிக்கப் பாடுபடுகிறோம். அதற்கு ஆக ஜெயிலுக்கு (சிறைக்கு) வந்தோம். நீங்கள் பிறக்கும்போது உமக்கிருந்த யோக்கியதை என்ன? இந்த நாட்டிலேயே பிறக்கும்போதே பிறவியினால் யோக்கியதை ஒருவனுக்கு உண்டு என்றால் அது பார்ப்பானுக்குத்தானேயொழிய யாருக்கும் இல்லை. இதை நினைக்க வேண்டாமா?

அப்படியேதான் உனக்கு என்று ஒரு அந்தஸ்து (தகுதி) அரசாங்கத்தின் மூலம் ஏற்பட்டது என்று சொன்னாலும் யார் நீ? எங்களுடைய (Public Servant) வேலைக்காரன்தானே? மேலே இந்த நாட்டுக்கே பிரதம மந்திரியாக இருக்கிற நேரு சொல்லுகிறார் நான் மக்களுடைய வேலைக்காரன் என்று அப்புறம் நீ யார்? எம்மாத்திரம்?

எனக்கு யாரோ சொன்னார்கள் இந்த ஆசாமி அப்படி நடப்பதற்குக் காரணம் ஒரு பார்ப்பனத்தியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதனாலேயே தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டுதான் தோன்றித்தனமாக நடந்து வருகிறார் என்று.

நம் ஆட்கள் சிலர் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் நம் ஜாதியாக ஆவதற்குப் பதிலாக இவன் பார்ப்பானாகி விடுகிறான்! பார்ப்பான் மாதிரியே பேசுகிறான் நடை, உடை, பாவனைகள், பேச்சு, உணர்ச்சி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறான். அவர் அப்படிப்பட்ட ஆள்களில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ தம்முடைய ஆட்களை மனிதர்களாகவே மதித்து நடப்பதில்லை. இதற்கு ஏதாவது வழி பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பல பேர்கள் சாகப் போவது உறுதிதான். இது போன்றவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆவார்கள்?


14.11.1958 மணச்சநல்லூரில் பெரியார்.

விடுதலை-26.11.1958

 
Read 50 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.