ஜாதி ஒழிப்புக்கு பெண்களே முன்வாருங்கள். விடுதலை -2.2.1952

Rate this item
(0 votes)

எனக்கு முன்னால் பேசிய சில தோழர்கள் சொன்னார்கள். ஏதோ கலியாணம் (கலப்பு மணம்) செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து போகும் என்று. கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழிந்து போகும் என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை. அதை ஒரு ஜாதியாக ஆக்கிவிடுவார்கள்! எப்படி என்றால் கலப்பு மண ஜாதி என்றுதான் கடைசிக்குச் சொல்ல முடியுமே தவிர, ஜாதி அடியோடு போய்த் தொலைய முடியாது. அதுவும் சமஜாதியில்தான் கலப்பு மணம் நடைபெறும். பறையன், சக்கிலி பள்ளன் முதலிய ஜாதிகளில் மேல் ஜாதியான் லேசில் மணம் செய்யமாட்டான். நம் நாட்டிலே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்; நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம், இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே. அந்த ஜாதிக்குள் கூட ஜாதி போவதில்லையே! அதையும் பல ஜாதிகளாகக ஆக்குகிறோமே. அவர்களும் மேல்ஜாதி ஆகத்தானே பார்க்கிறார்கள். பட்டிக்காட்டு தாசிகள் ஜாதி பார்த்துத் தான் புழங்குகிறார்கள். இதனால் கலப்பு மணத்தால் ஜாதி போய்விட்டதென்று கூற முடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறேன். தோழர் சாமி சிதம்பரனார், தோழர் குருசாமி, தோழர்கள் எஸ். ராமநாதன் முதலியவர்களும்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறோம். அதனால் ஜாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருக் கிறார்கள். அது மட்டுமல்லாமல், எங்களுக்குக் குழந்தைகள் இருந்து அவர்களுக்குக் கலியாணம் ஆகவேண்டுமானால் அப்போது தகராறுதான். கலப்பு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி கலப்பு ஜாதியார்கள் தாம் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுவார்கள். அன்றியும் எங்களுக்கு மதம் கடவுள் ஜாதி என்ற மூன்றைப் பற்றியும் கவலை இல்லை. அதனால்தான் மறுஜாதி மணம் செய்து கொள்ளவும், அதனால் தைரியமாக இருக்கவும் முடிகிறது.

எனவே இந்தக் கொள்கையையும் பரிட்சை செய்து பார்க்க வேண்டுமானால் செய்யலாம். நம்மிடம் அரசாங்கம் வந்த பிறகு ஜாதி ஒழிப்புக்கு ஏதாவது சட்டம் செய்யலாம். மத சாஸ்திரங்களை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிப்பது கஷ்டம்.

************

இத்தனை பேரும் இன்றைய தினம் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று கூறிவிட்டு சும்மா இருந்து விடுவதனால் ஒரு பலனும் இந்த மாநாட்டால் ஏற்படமுடியாது. இந்த மாநாடு நல்ல முறையிலே கூட்டப்பட்டு இருக்கிறது. அந்த முறையிலே இன்றிலிருந்து நம்முடைய ஒவ்வொரு மக்களும் தங்கள் தங்களுடைய ஜாதி இழிவை போக்கிக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதோடு பெண்களும் இம் முயற்சியில் முன் வருவார்கள். ஆனால் கண்டிப்பாக ஜாதி ஒழிந்தே போகும் என்று தைரியமாகக் கூறலாம். ஏனென்றால், ஜாதியைப் பற்றி கெட்ட நம்பிக்கைகள் அவர்களிடம்தான் சீக்கிரத்தில் குடி புகுந்து கொள்கிறது.
எனவே பெண்கள் அந்த நம்பிக்கை எல்லாம் அடியோடு விட்டு விடவேண்டும். இந்த மாதிரி நடக்கும் மாநாடுகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தாங்கள் வருவதோடு அல்லாமல், தங்கள் புருஷனையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும்.

சில ஆண்கள் பெண்கள் பேரிலே குறை கூறுவது. அதாவது நான் சீர்திருத்தக்காரன் ஆகிவிட்டேன். ஆனால் என் வீட்டிலே உள்ளவர்கள் சரியில்லை என்று கூறுவது. இது நியாயமா?

நான் கூறுகிறேன். உண்மையில் இவர்களே பெண்களை பிசாசாக்கி விடுகிறார்கள். இவர்கள் மாத்திரம் தனியாக கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் போய் கருத்துகளை அறிந்து கொண்டு வருவது பழக்கமாக இருக்கின்றதே அன்றி, தங்களுடன் தங்கள் மனைவி மார்களையும் அழைத்துக் கொண்டு வந்து இந்த மாதிரியான கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம் பெண் களுடைய பழைய மூட நம்பிக்கைகளை மாற்ற வழி காண்பது கிடையாது.

சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறி வேலை செய்து வருவதன் பயனாக இன்றையத் தினம் ஓரளவு பயன் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் யாராலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது. உதாரணமாக, இப்போது நடக்கின்ற திருவிழாக்களைப் பார்த்தாலே புரியும். தெருவிலே சாமி ஊர்வலம் போகிறது என்றால் ஒரு பிணம் சுடுகாட்டுக்குப் போவதற்கும், சாமி ஊர்வலம் போவதற்கும் வித்தியாசம் காணமுடியாத அளவு நிலைமை மாறிவிட்டது. வாகனத்தின் மேல் உட்கார்ந்து இருக்கும் ஒரு குருக்களையும், கோவிலினால் பிழைக்கும் ஒரு சிலரையும், குருட்டு நம்பிக்கைக்காரர்களையும் தவிர முன்னைப் போல மக்கள் திரளையோ, பிரமாண்டமான தாளமேளங் களோ, காணமுடியாத அளவில் திருவிழாக்கள் நடக்கின்றன.

இதிலிருந்து மக்களுடைய மனது ஓரளவு மாறிக் கொண்டே வருகிறது. ஆகையால் இந்த எண்ணத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே வரவேண்டியது நமது கடமையாகும். இன்னும் கொஞ்சநாள் போகப் போக நம்முடைய பிரச்சாரத் தால் அவற்றுக்குக் கெட்ட காலம் வருவது நிச்சயம்.

பல தோழர்கள் சொன்ன மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிடர் கழகமும் தங்கள் தங்களுடைய வேலை முறைகளை கலந்து வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வது என்று ஆரம்பித்தால் ஒரு வருட காலத்திலே நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடைந்து விடும். அதனாலே ஒரு கஷ்டமும் இல்லை.

 

30.1.1952இல் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

விடுதலை -2.2.1952

Read 40 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.