சிந்தித்து அறிவின்படி எக்காரியமும் செய்ய வேண்டும். விடுதலை-1.8.1962

Rate this item
(0 votes)

பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, மணமக்களே!

உலகில் மக்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, நம்பிக்கைவாதிகள். முன்னோர்கள் சொன்னது என்ன? சாஸ்திரம் என்ன சொல்கிறது? புராணம் என்ன சொல்கின்றது? முன்னோர் நடப்பு என்ன என்று பார்த்து அதன்படி நடப்பவர்கள். இரண்டாவது சாரார் அறிவுவாதிகள். மேலே சொன்னவற்றில் நம்பிக்கை வைக்காது, அறிவு கொண்டு அலசிப் பார்த்து அறிவுக்குச் சரி என்று படுகின்ற வழியில் நடப்பவர்கள்.

நான் வெறும் அறிவை ஆதாரமாகக் கொண்டே பேசுகின்றேன். எனது அறிவுக்குச் சரி என்று எது படுகின்றதோ, அதனையே பேசுகின்றேன். அதைச் சரியா? தப்பா? என்று சிந்தித்துப் பார்க்கக் கூடிய அறிவும் உங்களிடம் இருக்கின்றது. சம்சாரம், யசாகரம் என்று ஒருவர் குறிப்பிட்டார். அது சுத்த முட்டாள்தனமான கூற்றாகும்.

மனிதனுக்கு அறிவு இருக்கின்றது. நன்மை தீமையை உணரும் சக்தியுள்ளது. இப்படிப்பட்ட மனிதன் தம் வாழ்க்கையை ஏன் துன்ப சாகரம் என்று கூற வேண்டும்? நல்ல முறையில் திருத்திக் கொள்ள சக்தி அற்ற சோம்பேறிகளின் கூற்றாகும்.

அடுத்து குறள்படி நடக்க வேண்டும் என்று கூறினார்கள். குறளில் கூறப்பட்டபடி மக்கள் நடக்க வேண்டும் என்பது பொருந்துமா? குறளில் எல்லா பாகமும் மக்களின் வாழ்க்கை முறைக்கு அறிவுடைமைக்கு ஏற்றதாக இருக்கின்றதா? குறள் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாகக் கூறுவார்கள். 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனுக்கு என்ன அய்யா அறிவு இருக்க முடியும்? 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனுக்கு இன்றைய மக்கள் வாழ்க்கைக்கு ஏற்ற முறைகளை கூறி இருக்க முடியுமா?

குறள் மாநாடு கூட்டி குறளை மக்கள் மத்தியில் மதிப்பு ஏற்படச் செய்தவன் நான்தான். இப்படிப்பட்டவன் கூறுகின்றேன், ஏதோ மக்களுக்குப் பயன்படக்கூடிய சில நல்ல கருத்துகளை குறளில் கூறி இருக்கின்றார். அவ்வளவுதான்.

நான்தான் உங்களை கேட்கின்றேன், குறளில் எதற்காக அய்யா காமத்துப்பால் என்ற பகுதியை ஏற்படுத்தினார்? இதனால் மக்கள் கண்டுகொள்வது என்ன? இதனைப் படித்துத் தான் காதலை ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டுமா?

மக்களை எந்தக் காரியத்தையும் அறிவின்படி நடக்க வேண்டும். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் அர்த்தமற்ற மூடச் சடங்குகளோடு முட்டாள்தனமான செலவுகளும் செய்வதுதான் கவுரவம் என்று கருதும் நிலை மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. ஆடம்பரமான கச்சேரி வைப்பது இதனால் எவருக்கு லாபம்? 3 மணி நேரம் 3,000 பேரை வேலைமெனக் கெட்டு உட்கார வைப்பது எவனுக்கு பாட்டின் பொருள் புரியும்? சங்கீத ஞானம் எத்தனை பேர்களுக்கு இருக்கும்? நான்கு சோம்பேறிகள் முன்னாடி உட்கார்ந்து தலையை ஆட்டுவது கண்டு மற்றவர்களும் தலை ஆட்டுவதைத் தவிர, இதைப் பற்றி என்ன தெரியும்?

பணம் 2,000 அல்லவா நஷ்டம் ஆகின்றது. எனவே, எந்தக் காரியமும் பகுத்தறிவுப்படி சிக்கனமாகத்தான் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றோம்.

மணமகன் நாகராஜன் நமது கழகத் தோழர். நமது கொள்கையில் தீவிரமானவர். முதலாவது இவரைப் பாராட்ட வேண்டும். சம்பிரதாயப் பாராட்டு அல்ல, இப்படி பல்லாயிரக்கணக்கான பிரமுகர்களையும், பொதுமக்களையும் கூட்டி இப்படி அறிவு சம்பந்தமான பிரச்சாரம் நிகழ்த்தச் செய்த பயனுள்ள காரியத்துக்காகவே பாராட்ட வேண்டும் என்கின்றேன். செலவு சிக்கனமாகச் செய்து இருக்கலாம். அது அவரால் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்களைப் போல இதற்கு விலக்காக முடியவில்லை.

இப்படிப்பட்ட காரியங்களுக்கு எதற்காக ஆடம்பரமான செலவு? பெரிய விருந்து போடுவது இதனால் திருமண வீட்டாருக்கோ, சாப்பிட்டவர்களுக்கோ கால்துட்டாவது பலன் உண்டா? திருமணத்துக்கு வந்துள்ளவர்கள் தங்கள் வேலை வெட்டிகளை விட்டு மானங்கெட்டு வந்து உள்ளார்கள்.

இவர்கள் சாப்பாட்டுக்காக இங்கு காத்துக் கிடப்பதில் எவ்வளவு அவர்களுக்கு அசவுகரியம்? அவர்கள் வீட்டில் ஆகும் சாப்பாட்டுச் செலவு அவர்கள் இங்கு சாப்பிடுவதினால் குறைந்து விடவாப் போகின்றது? இல்லை, ஏழைகளுக்கு என்பீர்கள். சோம்பேறிகள் ஆக்குகின்றீர் என்பதுதான் பொருள்.

பிச்சைக்காரர்களுக்கு உதவி என்று கூறினால் சோம்பேறிகளை நாட்டில் வளர்க்கின்றீர்கள் என்பதுதானே அர்த்தம்? திருமண வீட்டாரும், மற்றவர் தம்மை பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடனை வாங்கிச் செலவு செய்தால், கடனை பிறகு யார் கட்ட வேண்டும்?

இதனால்தான் நான் எங்கள் தோழர்களுக்கு கூறுவதுண்டு. திருமணத்தை மாலையில் 5 மணிக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். சிக்கனமாகும். சாப்பாட்டுச் செலவு ஆகாது. திருமணம் முடிந்து வெத்திலை, பாக்கு எடுத்துக் கொண்டதுடன் போய் விடுவார்கள்.

இன்னும் தீவிரமாகக் கூட எங்கள் தோழர்கள் செய்துள்ளார்கள். தங்கள் குடும்பத்தார் முன்னிலையிலோ, ரிஜிஸ்டர் ஆபிசிலோ திருமணம் முடித்துக் கொண்டு இதனை அறிவிக்க 5 ரூபாய் கொடுத்து நாங்கள் இருவரும் இந்த தேதி முதல் திருமணம் செய்து கொண்டு கணவன் - மனைவியாக ஆகி விட்டோம் என்பதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என்று விளம்பரம் போட்டு விடுவார்கள். எனது காலஞ்சென்ற நண்பர் சி.டி. நாயகம் அவர்களே இப்படிச் செய்தார்.

அர்த்தமற்ற சடங்குகளால் நாம் மடையர்களாக ஆவதோடு நாமே இழிந்த ஜாதி மக்கள் என்கின்ற தன்மையை ஒத்துக் கொள்ளுவதாகவும் ஆகும் தன்மைகள் பற்றியும், சோதிடம், நாள், நட்சத்திரம் பார்ப்பதில் உள்ள முட்டாள்தனம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசி, மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும், மக்கள் பேற்றிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

22.7.1962 அன்று பாபநாசத்தில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.

விடுதலை-1.8.1962

Read 82 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.