மக்களைப் பகுத்தறிவாளர்களாக்குவதே எமது குறி! விடுதலை - 21.7.1962

Rate this item
(0 votes)

எவன் வரவுக்கு மேல் செலவு செய்கிறானோ அது விபசாரத்திற்கொப்பாகும். நம்முடைய வாழ்க்கையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடக் கொள்கைகளுக்கு இடமளிக் கக் கூடாது. கோவிலுக்குச் சென்று கும்பிட்டு அழுக்குத் தண்ணீரில் முழுகுவதையும், குழவிக் கல்லைச் சுற்றுவதையும் சினிமாவுக்குப் போகும் பழக்கத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். காட்சிக்காக சொல்ல வேண்டுமானால், பம்பாய், கல்கத்தா, மலேயா போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள இயற்கை வனப்பைப் பார்த்து பொது அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பிள்ளை பெறுவதைக் கூடுமான வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால், பள்ளியில் ஒன்று படிக்கிறது, கையில் ஒன்று இருக்கிறது, வயிற்றில் ஒன்று இருக்கிறதைப் பார்க்கிறோம். இப்படி இருப்பதால், பெற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆசையிருக்கலாம். இதனால் பொது உணர்ச்சி இருக்காது. இதன்மூலம் மனிதனுடைய ஒழுக்கமும், நேர்மைக் குணமும் நாளுக்கு நாள் குறையும். கடன் உண்டாகும். அதன்மூலம் கவலைகள் ஏற்படும். இவ்வளவுக் கும் காரணம் இந்தக் குழந்தைகள்தான். இதனால் தொல்லைபடுவதைவிட கர்ப்பத் தடை செய்து கொள்ளலாம். சர்க்கார் கர்ப்பத்தடை செய்துக் கொள்கிறவர்களுக்கு முப்பது ரூபாய் வீதம் தருகிறார்கள்.

அதை நல்ல முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு குழந்தைகள் இருந்தால் போதும். அதை நன்றாக வளர்த்து ஒழுக்கமுடையதாக ஆக்க வேண்டும்.

இது ஆனி மாதம். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்டு பங்குனி மாதம் முடிந்த பிறகு நான்கு மாதமாகியும் இன்னும் குழந்தைப் பிறக்கும் அறிகுறி தெரியவில்லையே என்று கவலைப்பட்டு ராமேஸ்வரம் அழைத்துப் போய் குழவிக் கல்லை சுற்ற வைப்பார்கள். குழந்தை பிறப்பதற்கும் ராமேஸ் வரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திப்பதே இல்லை. நம்முடைய சமுதாயத்தைத் திருத்துவதற்கென்று துணிந்து நிற்பவர்கள் நாங்கள். மனிதனுடைய அறிவைக் கெடுத்து அடிமைத் தனத்தை உண்டாக்குகின்ற சாஸ்திரம், வேதம், புராணங்களை ஒழிக்க வேண்டும். கடவுள் தன்மை களை அழித்து ஒழிக்க வேண்டும். ஜாதி, மதப் பூச்சாண்டியை நாட்டை விட்டே துரத்த வேண்டுமென்று முதன்முதல் சொன்னபோது இந்த நாட்டில் எங்களுக்குக் கிடைத்தது சாணி அடி, முட்டையில் மலத்தை ஊற்றி அடிப்பான். இதை எல்லாம் அனுபவித்தவர்கள் நாங்கள். எதற்காக இவ்வளவு தொல்லைக்கும் பாடுபட்டு வருகிறோம்? எனக்குப் புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. இருப்பதை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாம். அரசியல் கட்சிக்காரன் புரட்டுக்கும் பார்ப்பானுடைய வசைவுக்கும் மதவாதிகளுடைய எதிர்ப்பிற்கும் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு தொல்லை களுக்கும் சளைக்காமல் பாடுபடுவது யாருக்காக என்பதை நீங்கள் நன்கு உணர வேண்டும்.

நம்முடைய சமுதாய நிலைக்கு அதன் கேடுகளை உணர்ந்து காரியம் செய்யக் கூடியவர்கள் ஒருவரும் கிடைக்கவில்லை. இப்பொழுது அரசியலில் காமராசர் வந்ததும் ஓரளவு நன்மை செய்கிறார். அதைக் கண்டு இந்தப் பார்ப்பனர்கள் கச்சைக் கட்டிக் கொண்டு ஒழிக்கப் பார்க்கிறார்கள். அவரும், அவருக்கிருக்கும் எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு நமக்கு ஓரளவு நன்மை செய்கிறார். காரணம் என்ன? காமராசருக்கு குடும்பம் இல்லை. புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. தனி மரம். அதனால்தான் எதையுமே இலட்சியம் செய்யாமல் துணிந்து காரியம் செய்ய முடிகிறது.

ஒரு மனிதன் தனக்காக பிறக்கவில்லை. தன்னால் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல் புரிவதுதான் மனிதத் தன்மை ஆகும்.

நம்முடைய நாட்டில் பொது வாழ்க்கை என்பது பொறுக்கித் தின்பது என்று ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, மதம், அரசியல், கடவுள், வேதம் என்று இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றி கிடைத்தவரையில் சுரண்டி வாழ்வதற்காக ஆகும். இதை விளக்கி எவ்வளவுதான் சொன்னாலும் கவலை எடுத்து சிந்திப்பதில்லை. சிந்தித்துப் பார்த்து எந்த காரியத்தையும் செய்தால்தான் தெளிவு ஏற்படும். ஆகவே, என் அபிப்பிராயத்தை இந்த திருமணத்தின் மூலம் சொன்னேன். அவற்றை அப்படியே நம்பி விடாதீர்கள். நீங்கள் மனிதர்கள், உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது. அதிலே இதை ஆராயுங்கள். அதன் முடிவை பாருங்கள். தப்பு என்று பட்டால் விட்டு விடுங்கள். சரி என்று பட்டால் பகுத்தறிவுள்ள மனிதர்களாவதற்கு முன்வாருங்கள் என்று கூறினார்.

 

9.7.1962 அன்று சோழபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை.

விடுதலை - 21.7.1962

 
Read 54 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.