அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் விலக்கப்பட வேண்டும். விடுதலை-28.7.1962

Rate this item
(0 votes)

பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, நண்பர் நட்சத்திரம் அவர்களே!

நாம் இங்கு கூடி இருப்பது நண்பர் திரு. நட்சத்திரம் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு குழுமி இருக்கின்றோம். இப்படி புதுமனை புகுவது எல்லோரும் செய்கின்றார்கள். மற்றவர்கள் செய்வதற்கும் நண்பர் நட்சத்திரம் செய்வதற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது.

சாதாரணமாக ஒரு புதுமனையில் வாசம் செய்ய முற்படுபவர்கள் இது மற்றவர்களுக்குத் தெரியும்படி செய்ய வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி இல்லாமல் இருந்தால் ஜனங்கள், இவர் பழைய வீட்டில் இருப்பதாகத்தான் எண்ணுவார்கள். திருமணம் கூட இப்படித்தான். இன்னார் இதுவரை தனியாக இருந்தார்கள். இதுமுதல் இருப்பவரும் சேர்ந்து வசிக்கின்றார்கள் என்பதை மற்றவருக்கு உணர்த்தவே யாகும். ஒருவர் புதுக் கடை வைத்தால் கூட விளம்பரப்படுத்தி அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து திறப்பது விளம்பரத்துக்காகவே தான் இது மிகவும் அவசியமாகும்.

இம்மாதிரி காரியங்களுக்கு ஏராளமாக செலவு செய்வதைக் கூட நான் கண்டித்து வருகின்றேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சியைக் கூட மதத்தோடு புகுத்திப் பிணைத்து விட்டார்கள். இப்படி வீடு அமைக்க நிலை இப்படி இருக்க வேண்டும். மனை இப்படி இருக்க வேண்டும், ஜன்னல் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி இதற்காக மனை சாஸ்திரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்கள். நம்முடைய சாஸ்திரம் கிறிஸ்துவனுக்கு, முஸ்லிமுக்குப் பொருந்தாது. அவன் சாஸ்திரம் நமக்குப் பொருந்தாது என்பார்கள். எல்லோருக்கும் வாழக் கூடியதாக ஒன்றை நிர்ணயிக்கும் போது ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனம்.

நாள், நட்சத்திரம் பார்த்து அஸ்திவாரம் போடுவது, முகூர்த்தம் பார்த்து நிலை வைப்பது இப்படி எல்லாம் செய்கின்றனர். நான் 40, 50க்கு மேல் வீடுகள், கட்டிடங்கள் கட்டி இருப்பேன். இன்னும் கட்டிடம் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஒன்றுகூட நாள், நட்சத்திரம், முகூர்த்தம் பார்த்து கட்டவே இல்லை. எல்லா வீடுகளும் எல்லாமும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆனால், நாள், நட்சத்திரம் பார்த்து கட்டிய எங்கள் சொந்தக்காரர்கள் வீடுகள் இன்று கடனுக்குப் போனதையும் காண்கின்றேன். எனவே, இப்படிப்பட்ட செய்கைகள் எல்லாம் மிக மிக முட்டாள்தனமானதாகும்.

எங்கள் இயக்கம் சொல்லுவது எல்லாம் மனிதன் பகுத்தறிவுப்படி நடக்கணும். முட்டாள்தனமாக அர்த்தமற்ற சடங்குகள் செய்யக் கூடாது என்பது தான். இப்படிப்பட்ட சடங்குகள் செய்து முட்டா ளாக, ஓட்டாண்டியாக ஆனவர்கள்; எல்லாம் நாம்தான் இதனால் பலன் அடைந்து வருபவன் எல்லாம் பார்ப்பானேயாகும். அரசாங்கம் கூட முட்டாள்தனமாக கப்பல் கட்டிவிட வேண்டுமானால் கூட நாள், நட்சத்திரம் பார்த்து தேங்காய் உடைத்து விடுகின்றான். பார்ப்பான் ஆதிக்கம் இருப்பதால் இப்படி செய்கின்றார்கள்.

தோழர்களே, இப்படி பகுத்தறிவுப்படி இந்த விழாவை ஏற்படுத்திய நண்பர் நட்சத்திரம் அவர்களை நாம் பாராட்டி யாக வேண்டும். இந்த புதுமனையில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்துள்ளார். இது மிகவும் புத்திசாலித்தனமான செய்கையாகும். இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட படம் இல்லாமல் சிவன் படம், விஷ்ணு படம், காளி படம் போன்றவைகளை வைத்தால் என்ன பிரயோசனம்? வீடுகளை அலங்கரிக்க படங்கள் வைக்க வேண்டும் என்று கருதினால் அறிவுக்குப் பொருத்தமான இதுபோன்ற படங்களை வைக்க வேண்டும்.

எங்களுக்கு வாழ்த்தில் நம்பிக்கையில்லை. வாழ்த்தில் நம்பிக்கை வைத்து வாழ்த்து கண்டு சந்தோஷப்பட்டால் வசவு கண்டு, விசனப்படவும் வேண்டுமே. நாங்கள் ஆசைப்படுவதெல்லாம், நண்பர் நட்சத்திரம் அவர்கள் எப்படி மூட நம்பிக்கையை ஒழித்து இப்படி அறிவுக்குப் பொருத்தமான காரியத்தை செய்துள்ளாரோ, அதுபோலவே மேலும் மேலும் நடந்து பொதுத் தொண்டுக்கும் உதவ வேண்டும் என்பதே என்று கூறி முடித்தார்.

 

18.7.1962 அன்று வள்ளியூர் ஸ்டார் இல்லத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை.

விடுதலை-28.7.1962

Read 47 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.