கடவுளை நம்பும் முட்டாள்களே! உண்மை தலையங்கம்-14.7.1970

Rate this item
(0 votes)

கடவுளை நம்பும் முட்டாள்களே!அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்; அவரன்றி ஓர் அணுவும் அசையாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார். என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!

கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடி களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்? பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?

இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடிவில்லையே. ஏன்?

கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ்போடா மலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லை, ஏன்? மனிதன் எதனால் கெட்ட காரியங்களைச் செய்கின்றான்?

ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?

கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?

மனிதரிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?

ஒரு மனிதனுக்கு அவன் கெட்ட காரியம் செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் கெட்ட காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?

கெட்ட காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்த வனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?

மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம், துக்கம், திருப்தி, அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும், இருந்தும் வரவேண்டும்?

மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரி யாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திரு விளையாடலா?

நரகத்தைப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனையாகச் சிருஷ்டித்த கடவுளை விட அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?

இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?

ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்தாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.

ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.

உண்மை தலையங்கம்-14.7.1970  

 
Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.