பகுத்தறிவே முக்கியம்! விடுதலை - 6.9.1960

Rate this item
(0 votes)

தந்தை பெரியார் அவர்கள் தமது அறிவுரையில் பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. அவர்களும் மனித ஜீவன்கள் என்றும் அவர் களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டவே இம்மாதிரியான திருமணமாகும். எங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வேலை இல்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் காரணங்கள் தேவைகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லவே யாகும்.

இந்த நாட்டில் படித்தவன் பணக்காரன் என்பவன் எல்லாம் பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள். படிப்பாளிகள், அறிவாளிகள் என்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகப் படித்தவர்களேயாவர். இந்த நாட்டு மக்களின் சமுதாய இழிவுகள் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. எனவே தான் நாங்கள் தான் எங்கள் கழகந்தான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைக்கின்றோம். எங்கள் கருத்தில் மக்கள் மானமற்ற வர்களாக மனிதத் தன்மையற்ற காட்டு மிராண்டிகளாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள மக்களைச் சீர்திருத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் குறிக்கோளாகும்.

தோழர்களே, மனிதன் என்றால் ஓர் பெண் துணையும் பெண் என்றால் ஓர் ஆண் துணையும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. இது மிருகங்கள், புழு பூச்சிகள், மரங்கள், பூ பிஞ்சுகள் எல்லாவற்றிலும் ஆண், பெண் இருக்கின்றன. இது இயற்கை.

இதுவரை நம்மில் ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதற்காக நடத்தப்பட்ட கலியாணம் என்னும் நிகழ்ச்சி மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தே சில மாறுதல்கள் ஏற்படுத்த இம்மாதிரி காரியம் செய்கின்றோம்.

இதுவரையில் இருந்து வந்த கருத்து ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தால் அல்ல, ஓர் ஆணுக்கு ஓர் பெண் சம்பளமில்லாத வெறும் சோற்றுக்காக வேலை செய்யும் அடிமை என்ற கருத்தில்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. நாங்கள்தான் இப்போது அந்தக் கருத்தை மாற்றி ஆணும், பெண்ணும் சரிசமம் உடையவர்கள் என்ற கருத்தில் மாற்றியிருக்கின்றோம். ஆண், பெண் சம உரிமையுடையவர்கள், பகுத்தறிவு உடையவர்கள், மானம் உடையவர்கள் என்பதை உணர்த்தவேயாகும். மனிதன் என்ற சொல்லே மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுந் திருக்க வேண்டும்.

கலியாணம் என்ற பெயரால் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனிதன் மடையனாக கீழ்ஜாதியாக, சூத்திரனாக, இழிபிறவியாக, காட்டுமிராண்டி யாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. எவனுக்கு நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, ராஜா வாகவோ, பிரபுக்களாகவோ, படிப்பாளியாகவோ யாராய் இருந்தாலும் இந்த அடிப்படையில்தான் இருந்து வந்திருக்கின்றது. இந்த சீர்திருத்த முறையில் மடைமைக்கோ, காட்டுமிராண்டித் தனத்துக்கோ, இழிவுக்கோ வகை இல்லை. நாம் மானமற்ற இழிபிறவிகள் என்பதன் அறிகுறியாகவே பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துவது ஆகும். நாம் கூப்பிடுவதே அவனை பெரிய ஜாதி என்ற கருத்தில்தான் ஆகும். அதன் காரணமாக அவன் உயர்ந்தவன் நம் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதற்கு அறிகுறியாகவே அவனுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை பச்சையாகவே மூட்டை கட்டி அவன் வீட்டில் கொண்டுபோய் வைக்கின்றோம். நாம் நம் அறிவைப் பயன்படுத்தாமல் அவன் மேல் ஜாதி என்று ஒத்துக் கொண்டு அதன்மூலம் நாம் இழிமக்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றோம் என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆதியில் பார்ப்பானைக் கூப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமையெனக் கருதி சமீபகாலமாக பார்ப்பானைக் கூப்பிட ஆரம்பித்து இருக்கிறான். ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழும் உரிமை, சாஸ்திரத்தில் சூத்திரர்களாகிய நமக்கில்லை. நாளாவட்டத்தில் பார்ப்பானுடைய முறையானது எல்லா வகுப்பாரிடையேயும் வந்துவிட்டது. இதன் காரணமாக நாம் அறிவு, மானம் இல்லாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக, இழி மக்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.

எங்களுடைய முயற்சியால் இப்படி நடைபெறும் திருமண முறையால் நாங்கள் மட்டும் பயன் அடைய வில்லை. நாங்கள் மட்டும் செய்யவில்லை - ஆனால், எங்களின் எதிரிகளான காங்கிரஸ், கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிக்காரர்கள் கூட செய்து வருகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், கடவுள், மதம், ஜாதி ஆகியவை நீக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி அறிவுரையாற்றினார்.

தந்தை பெரியார்

விடுதலை-6.9.1960

 
Read 33 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.