சமதர்மமும் நாஸ்திகமும். விடுதலை - 3.12.1967

Rate this item
(0 votes)

என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள், நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ, அந்த அர்த்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.

நாஸ்திகத்துக்குப் பயந்தவனானால், எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும் சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால், நாஸ்திகனால்தான் முடியும். நாஸ்திகம் என்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் தான் ரஷ்யாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.

பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால்தான், நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரம் அல்ல, சமுதாயத்தைச் சீர்திருத்த ஏதாவது பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும் ஏன் எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்று தான் சமுதாயப் பிரியர்கள் (பழைமையை மாற்ற விரும்பாதவர்கள்) சொல்லித் திரிவார்கள்.

எங்கெங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ - சமத்துவத்துக்கு இடமில்லையோ அங்கெல்லாமிருந்து தான் நாஸ்திகம் முளைக்கின்றது.

கிறித்துவையும், முகம்மது நபியையும்கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கு, அவர்களது சமதர்மப் போக்கும், சீர்திருத்தமுமே காரணமாகும். துருக்கியில் கமால் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம்.

ஏனென்றால் இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளைகள் என்றேதான் சமயப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள்.

ஆகவே, நாம் இப்போது எதை எதை மாற்ற வேண்டுமென்கிறோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறினதாக அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.

உதாரணமாக, மக்களில் நான்கு ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதென சொல்லப்படுகையில், மேற்படி ஜாதிகள் ஒழிய வேண்டுமானால், அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆக வேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவு ளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தி யாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன். அந்தந்தக் கடவுள்களை கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களை அலட்சியம் செய்தவனேயாகின்றான். அதனால்தான், கிறித்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகம்மதியரல்லாதவர் காபர் என்றும் இந்து அல்லாவர் மிலேச்சர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.



அன்றியும் கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்து மதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும் போது ஜாதியையும், வர்ண தர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்ல மாட்டார்கள்.

ஜாதி உயர்வு - தாழ்வு; செல்வம் - தரித்திரம்; எஜமான் - அடிமை ஆகியவைகளுக்கு கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும், முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது?

கடவுளையும், கர்மத்தையும் (விதிச் செயல்) ஒழித்தால் ஒழிய, அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்? மேடும், பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமே யாகும். மனிதன் முகத்தில் தலையில் மயிர் வளருவது கடவுள் செயலானால், அதை சவரம் செய்து ஒழிப்பது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும், அதாவது, ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் அது வளர்வதை அறிந்தும் மீண்டும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதுகூட நாஸ்திகன் தானே! ஏனெனில், கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்துக்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போட்டு அவன் பட்டினியை மாற்றுவது கடவுளுக்கு விரோதமான செயல் தானே? அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டே போனால் உலகத்தில் ஒரு ஆஸ்திகனும் இருக்க முடியாது!

ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல்களை விரும்புவதால் அவை கடைசியாக நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும், சாஸ்திர விரோதமும், தர்மத்துக்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. பொதுவாக நமது நாட்டில் உள்ள தரித்திரம் போக வேண்டுமானால், வேற்றுமைகளைப் போக்க முயற்சிக்கும் சமதர்வாதிகளை (வெள்ளையரை) வைவது மாத்திரம் போதாது, நாஸ்திகம் என்ற சொல்லுக்கு அஞ்சினாலும் முடியாது.

நமது நாட்டினரே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு இருப்பதால், தினமும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து, நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல, மக்களின் முட்டாள்தனமேதான் காரணமாகும்.

ஆதலால், நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யா தீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக் கிரமங்களை பாமர மக்கள் அறிந்து உணரக் கூடும். அப் போது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆகவேண்டும். இந்த நாட்டில் ஒருபுறம் ஏழைகள் பட்டினி கிடக்க, மற்றோர்புறம் ஒரு சிலர் கோடீ சுவரர்களாக இருந்து கொழுத்துக் கொண்டு டம்பாச்சாரியாய் வாழ்க்கை நடத்துவதும் கடவுள் செயல் என்று தானே சொல்ல வேண்டும்?

ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும் கூட ஒரு சமயத்துக்கும் மற்றொரு சமயத்துக்கும் மாறுபட வேண்டியதேயாகும்.

ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமெனக் கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது அரசர்கள் கொள் ளைக்காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாக இருக்கிறார்கள்.

இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சக பகற் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்கள் பிடுங்கிக் கொள்ளப்படும்.

உதாரணமாக, மனுதர்மத்தில் சூத்திரனிடம் பொருள் சேர்த்து வைத்திருப்பதை பிராமணன் பலாத்காரத்தினால் பறித்துக் கொள் ளலாம் என்று இருக்கின்றதை இன்னமும் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் போனால் இதுமாமறி பார்ப்பான் பணம் வைத்திருந்தால் மற்றவர் பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏற்படக் கூடும். அப்படி இருப்பது முன்னைய வழக்கத்துக்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப் போக நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டியதில்லை என்றும் அப்படி யிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பது போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியம் முன்பேயொழிய இப்போது இருப்பது போல் உழுகின்றவன் தன் வயிற்றுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு பூமிக்குடையவனுக்கு பெரும் பாகம் கொடுப்பது என்கிற வழக்கம் அடியோடு அடிபட்டு போகலாம்.

இதுபோல் இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் கோயிலை இடித்து, விக்கிரகங் களை உதைத்து, பள்ளிகளும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்து வது தர்மம் என்றாகலாம். இதுபோல் அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளை அதர்மமாக தலை கீழாக மாறக்கூடும். அப்படிப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுளையே மறுக்கத் துணிந்தவனாக வேண்டும்.

கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்துக்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பது உறுதி. இந்நிலையில் சமதர்மம் எப்படிக் கொண்டு வரமுடியும்?

அரசியல், சமூக இயல், பொருளாதார இயல்களில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத் தனமான வஞ்சகச் சூழ்ச்சியுமான எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச காரணங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே செய்யப்பட்டு ஏற்பட்டதாகும். ஆகையால்தான், இந்தக் கடவுள் நம்பிக்கை ஒழியாமல் சமதர்மம் கொண்டு வரமுடியாது என்று நான் அவ்வளவு உறுதியாகக் கூறுகிறேன்.

திருச்சியில் சமதர்மமும் நாத்திகமும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய அறிவுரை.

விடுதலை - 3.12.1967

Read 36 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.