பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம். விடுதலை-20.10.1967

Rate this item
(0 votes)

கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.

கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே ஒழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்று என்ன வேலை கொடுக்கிறார்கள்? கடவுள் சக்தி என்று எதைச் சொல்லுகிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயவம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அதுபோலவே கடவுள் இல்லை; கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதுவும் இல்லை என்று அறிந்தும் கூட, பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக்காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள். இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.

கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போல் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைக் காரன் என்றுதான் நினைத்துக் கொள் கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக் கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை.

தனக்கோ, தன் பிள்ளைக்குட்டி, தாய் தந்தைக்கோ சிறு நோய் வந்தா லும் உடனே, டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்று கருதுவ தில்லை. அது வேறு விஷயம்; இது வேறு விஷயம் என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்!

மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோவில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஒரு ஊர் கோவிலை பெரியதாகவும், மற்ற ஊர் கோவிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும், ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்தப் பேதம் சமுத்திரத்தில் கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.

150 கோடி மக்களால் மதிக்கப்படும் யேசு கிறிஸ்து, கோவில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்குமிடம் என்று சொன்னார்! அது மாத்திரமல்லாமல், சுமார் 40 கோடி மக்களால மகாத்மா என்று கருதப்படும் காந்தி கோவில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரர்களில் யார் இதை நம்புகிறார்கள்? அனுசரிக்கிறார்கள்?

கக்கூசு எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டு மிராண்டித்தனமாய் இருக்கிறது?

50 கோடி மக்கள் வாழும் நமது இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோவில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத் தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்!

எவ்வளவு சொத்து பண விரயம் - நேர விரயம் - முயற்சி விரயம். படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட் டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு - ஆபாசம் இருந்து வருகின்றன!

இதற்குப் பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரேயடியாக கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள் (நாத்திகர்கள்) என்று பிள்ளை களுக்குப் பிரச்சாரங்களில், காலட்சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும், எவ்வளவு பகுத்தறிவு வாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக் கூடாது; சேர்க்கக் கூடாது.

இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!

 

பெரியார் எழுதிய தலையங்கம்.

விடுதலை-20.10.1967

Read 56 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.