சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக! விடுதலை - 7.8.1965.

Rate this item
(0 votes)

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப்படவே இல்லை. இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத்தையும் உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.

எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது.

மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியேகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான். அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட் டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.

அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்? நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.

1925லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும். சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன். சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

10.7.1965 அன்று முதுகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.

விடுதலை - 7.8.1965.

Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.