கோயிலைத் திறப்பதால் இன இழிவு நீங்காது. விடுதலை-23.07.1947

Rate this item
(0 votes)

இங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள். எவ்வித மூடச்சடங்குகளும் இங்கு இல்லை. சடங்குகள் தேவையில்லை, அச்சடங்குகளால்தான் நாம் இன்னும் இழிவான ஜாதியினர்களாக இருக்கிறோம். சடங்குகள் இல்லையென்று மனக்குறையுடைய மக்களுக்கு விளக்கம் கூறுவதற்காகத்தான் இக்காரியங்களில் கலந்து கொள்ளுகின்றோமேயொழிய நாங்கள் வந்துதான் இக்காரியங்கள் நடத்தப்பட வேண்டுமென்னும் கருத்துடனல்ல.

ஆணும் பெண்ணும் சமம் என்றும், ஆண் உயர்வு, பெண் அடிமை என்பதில்லாமல் ஒருவருக்கொருவர் சிநேகிதர்கள், என்னும் தத்துவத்தின் மீதுதான், இந்த வாழ்க்கை யொப்பந்தம் நடந்தேறியது. வைதீகத் திருமணம் என்பது இக்கருத்துக்கு நேர் மாறானது என்பதை முதலில் பெண்கள் உணரவேண்டும். ஏனென்றால் வைதீகத் திருமணம் ஆண் வேசி வீட்டுக்குப் போவதைக் கட்டுப்படுத்தாது. வைதீகத் திருமணத்தில் பெண்ணை ஆண் அடிமையாக்கி விடுகிறான். சுயமரியாதைத் திருமணம் அத்தகையதல்ல. சம நட்பு, சம உரிமையுடைய மாறுதலுள்ளது. காலப்போக்கில் இதற்கு அனுசுரணையாகச் சட்டமும் செய்யப்பட்டு வருகின்றது.

திருமண முறைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு வகையையும் சூத்திரர்கள் என்போர் வேறு வகையையும் பின்பற்றுகிறார்கள். சூத்திரர் என்போர்கள் பார்ப்பானை அழைத்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதமாகச் செய்கின்றார்கள். இது மிகவும் கேவலம். சினேக முறையில் மற்றவர்களைப் போல் வேண்டுமென்றால் பார்ப்பனத் தோழர்கள் வரட்டும். ஆனால் சடங்கு செய்ய என்பதற்கு வேண்டாமென்றுதான் சொல்லுகிறேன். ஏனெனில் அவன் நம்மை தாழ்ந்த ஜாதி என்று கருதுகின்றான். இதில் உங்களுக்கு ரோஷம் வேண்டாமா என்று தான் கேட்கிறேன். சட்டம், சாத்திரம், சாமிகள் பேரால் நம்மைப் பறையன், பஞ்சமன், சூத்திரன் என்று ஒதுக்கி வைத்திருக்கும் பார்ப்பனீயத்தை அறிவுள்ளவர் புறக்கணிக்க வேண்டாமா? இத்தகைய இழிவுகளும் நாம் இந்துவாக இருப்பதனால்தான் என்பதை உணரவேண்டும். நம்மை நாம் திராவிடர்கள் என்றுணர்ந்தால் இவ்விழிவுகள் நம்மை விட்டு ஓடிவிடுகின்றன. விட்டுக்கொடுக்கும் தன்மை முஸ்லீமிடம் கிடையாது. இந்துவைப் போல, கிருஸ்தவப் பாதிரியார் கூட, கிருஸ்தவப் பறையன், கிருஸ்தவப் பார்ப்பனன், கிருஸ்தவ முதலியார் என்பதில் கவலையற்றிருப்பார். ஆனால் முஸ்லீமில் முஸ்ஸிம் பார்ப்பான், முஸ்லிம் பறையன் என்றிருக்க மாட்டான். அதுபோல நாமும் ஒரே திராவிடராக மட்டும் இருக்க வேண்டும்.

நாம் இந்து மதப் பெயர்களை வைக்கக்கூடாது இந்து வேஷங்கள், குறிகள் இவைகள் நமக்குப் புறம்பானவை. சூத்திரப் பட்டம், வேசி மகன், பறையன், பஞ்சமன் என்ற இழிவுகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று எந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள் அவதாரபுருஷர்கள் மகாத்மாக்களாவது சொன்னதுண்டா? அவ்வேலைகளை இன்று சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் தான் செய்துவருகின்றன. என்னதான் நம்மவர்கள் உயர்பதவிகளுக்குப் போனாலும், சூத்திர மந்திரி, பாப்பார மந்திரி என்ற ஈனப் பெயர்கள் போய்விட்டதா?

மதம், ஆத்மார்த்தம், கடவுள் விஷயங்களிலும், துணி, நகைகளிலும் கவனம் செலுத்துவது போன்றும், நமது சொந்தவாழ்வு காரியங்களில் ஏன் பகுத்தறிவை உபயோகிக்கக் கூடாது? மலத்தைத் தொட்டால் பார்ப்பனன், குளிக்காமல் கையைக் கழுவி விடுகின்றான். ஆனால் பஞ்சமனைத் தொட்டால் குளிக்க வேண்டுமென்கிறான்!

கோவிலைத் திறந்து விட்டால் இந்தப் பைத்தியகாரன் நம்பிவிடுவானென்று அந்த பைத்தியக்காரன் நினைக்கிறான். அந்த ஏமாற்று வித்தை இனிச் செல்லாது. கோவில் திறப்பில், பஞ்சமனும் சூத்திரனும் ஒன்றாகிவிட்டிருக்கலாம் ஆனால், பார்ப்பனன் இன்னும் விடவில்லை. அவன் வாங்குகிற உண்டியல் காசில் இன்னும் நமக்குப் பங்கு இல்லை. கொடுமை தாளமுடியாத தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் முஸ்லீமாகிக் கொண்டுவருகின்றனர். இச்செய்தியைப் பார்ப்பனப் பத்திரிகைகள் இருட்டிப்புச் செய்கின்றன.

நம்மை நாம் உணர வேண்டும். "ஏனப்பா? கறுப்புச் சட்டை?" என்று யாரும் கேட்டால் அதற்குப் பதில், "நான் ஈன ஜாதியானாக இருக்கிறேன். தோல்பதனிடும் நாற்றம் பிடித்த வேலை எனக்கு. பார்ப்பனனுக்குப் போலீஸ் சூப்பிரிண்டெண்டு வேலை. நான் பறையனாம். உழைக்காத சோம்பேறிப் பார்ப்பான் உயர் ஜாதியாம். இதற்காக நான் வருத்தப்படுகின்றேன், ஆத்திரப்படுகின்றேன். இதை ஞாபகமூட்டிக் கொண்டு இந்த இழி நிலையிலிருந்து மீளுவதற்காகத்தான் கறுப்புச் சட்டை அணிந்துள்ளேன்," என்று சொல்லுங்கள்.

பெரியார் வாழ்க என்ற கித்தாப் எனக்கு வழங்கினால் நான் நிம்மதியடைய முடியாது. நமது இழிவு பூர்ணமாக நீங்க வேண்டும். அன்றுதான் நான் நிம்மதி அடைவேன். நமது ஈனம் ஒழிய உயிர் கொடுத்தேனும் புரட்சி செய்ய வேண்டும். ஆகவே, தோழர்களே நீங்கள் கீழான நிலையில் இருப்பதற்கு எது காரணம் என்பதைத் தெரிந்து அதற்குப் பரிகாரம் தேடுங்கள். இம்மக்களைப் பின்பற்றி மணமாகாதவர்கள் நடந்து கொள்ளுங்கள். நான் கூறியவைகளைப் பகுத்திறவைக் கொண்டு ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வாருங்கள்," என்று கூறி, மணமக்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் சுமார் 2 மணிநேரம் பேசினார்.

 

21.07.1947 மாதவரம் திருமணத்தில் பெரியார் சொற்பொழிவு.

விடுதலை-23.07.1947

 
Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.