பகுத்தறிவும் புரட்சியும். விடுதலை-29.1.1955

Rate this item
(0 votes)

இன்றைய சமுதாய மக்கள் இரண்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது ஒன்று பகுத்தறிவையும், மற் றொன்று புரட்சி என்ற இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்கள்.

ஆனால், நான் முதன்முதலில் 1925இல் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தியபொழுது அதிக எதிர்ப்புகள் இருந்து வந்தன. கூட்டங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் கற்களை வீசியும் கலகம் செய்தும் தொல்லைகள் பல கொடுத்து வந்தனர். அப்படி இருந்தும் இன்றைய தினம் அப்பொழுது எவைகளை எடுத்துக் கூறினேனோ, அதை எடுத்துரைக்கும் சமயத்தில் மக்கள் யாவரும் அங்கீகரிக்கின்றனர். இதன் காரணம், மக்களிடம் உள்ள பகுத்தறிவைத்தான் கூறவேண்டும். நாளடைவிலேயே மக்களிடம் எதையும் பகுத்தறியும் மனப்பான்மை ஏற்பட்டு நான் கூறுகின்ற ஆதாரபூர்வமானதும், அனுபவ முறையிலுமுள்ள கொள்கைகளை ஆராய்ந்தறிந்து அங்கீகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

இதுவன்றியும், மனிதன் உபயோகித்த சிக்கிமுக்கிக் கற்கள் மாறி தீப்பெட்டிகள் கண்டுபிடித்தும், மற்றும் அநேக முறைகளில் பகுத்தறிவை உபயோகித்து வருகின்றனர். மணிக்கு இரண்டு மைல்கள் செல்லும் கட்டை வண்டி மாறி, படிப் படியாக உயர்ந்து இன்றைய விஞ்ஞான உலகத்தில் மணிக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் செல்லும் ஆகாய விமான சாதனங்களையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

வானொலி சாதனங்களையும், பயங்கர அணு குண்டு ஆயுதங்களையும் கண்டுபிடித்துள்ள இக்காலத் திலும் கூட ஓரிரு பண்டாரங்களும், கடவுள், மதம் முதலியவற்றைக் கட்டிக் கொண்டு வாழும் அநாகரிக கூட்டங்களும் தன் மூளையைச் சரியான முறையில் உபயோகிக்காது, பகுத்தறிவின் பயனை அனுபவிக் காது இருந்து வருகிறதை எண்ணும்பொழுது பரிதாபப் படத்தக்க வகையிலும், ஆத்திரப் படத்தக்க வகையிலும் இருக்கிறது. உண்மையிலேயே பகுத்தறியும் குணமுள்ள எவரும் இதுவரை என் கொள்கைகளை எதிர்த்ததும் கிடையாது, பகிஷ்காரம் செய்ததும் கிடையாது.

இவ்வித மனப்பான்மை ஏற்படக் காரணங்களில் ஒன்றாக வெள்ளையன் நம்மை ஆட்சி செய்ததையும் கூறலாம். ஏதோ அவன் நம் தேசத்தை ஆளும் படி யாகவும், அதனால் இங்கே விஞ்ஞானத்தின் மேன்மை யையும், பலனையும் அறிந்தவர்களாகி, பகுத்தறிவு கொண்ட மக்களாக வாழும் வாய்ப்பு ஏற்பட்டது. இல்லையேல், நாமும் மூடப் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவும், பார்ப்பானுக்கு அடிமை களாகவும் ஆகி, நாளுக்கு நாள் கீழ்த்தரமான முறையில் தள்ளப்பட்டிருப்போம்.

இவ்வித முறையில் பகுத்தறிவு பயன்பட்டு, அடுத்தபடியாக புரட்சியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளோம்.

இக்காலம் மனிதன் சிந்திக்க முடியாத அவ்வளவு அரிய காரியங்களைக்கூட சாதிக்க முடியும் படியான காலம். சாதாரணமாக எந்த புராணத்தையோ, நாட்டு சரித்திரத்தையோ எடுத்துக் கொண்டால், அரசன் ஒருவன் ஆண்டான் என்பதில் தொடங்குமேயல்லாது, ராஜா இல்லாத கதையே கிடையாது. நம் நாட்டு சரித்திரங்களின் மூலம் ராஜாக்கள் பலரும், சிற்ற ரசர்கள் பலரும் நம்மை ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது.

வெள்ளையர் நம்மை ஆண்டது வரை சக்கர வர்த்திகளும், ராஜாக்களும் அடக்கி ஆண்டன ரென்றாலும், இப்போது அந்த ராஜாக்களும், சக்கர வர்த்திகளும் எங்கே? சக்கர வர்த்தியையே நேரில் ஏன் எங்களுக்கு சக்கரவர்த்தி என்று கேட்டு விட்டனர். நீ எங்களை ஆட்சி புரிந்தது போதும். வந்த வழியே சென்று விடு என்று கூறி உரிமை கொண்டாடி னார்கள். இப் பொழுது ராஜா வேண்டும் என்று கூறுகிற ஒருவராவது கிடையாது. அப்படிக் கூறுகிறவர் தேசத் துரோகியாகி விட்டார்.

எவ்வளவோ பட்டாளங்களும், சேனா சைன்யங்கள் இருந்தும், போ வெளியே என்றவுடன் சந்தடி ஏதுமின்றி சென்று விட்டான். அதனால், இந்நாட்டு மக்கள்; வீரர்கள் என்று கருத வேண்டாம். படை பலம் கொண்டு துரத்தியதாக எண்ண வேண்டாம்; வீரன் என்று தன்னைக் கூறிக் கொண்டு முன்னே சென்றவுடன் எவனாவது இரண்டே இரண்டு உதை கொடுத்தால், அதையும் வாங்கிக் கொண்டு அரகரசிவா என்று கன்னத்தில் அடித்துக் கொண்டு அஹிம்சையைக் கொண்டவன் நான் என்று கூறிக் கொண்டு தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ளும் கோழை மனம் கொண்ட வனிடம் வீரம் என்பது மருந்துக்குமேது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க சகல சக்தியும் கொண்ட அரசன் போய் விட்டான் என்றால் அறிவுக் காலம் என்பதன்றி வேறு என்ன?

மற்றும் இங்கிருந்த சுமார் 630 ராஜாக்கள் எங்கே போனார்கள்? எல்லா ராஜாக்களும் இஸ்பேட் ராஜாவாகி திரிந்து கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு ராஜபிரமுகர் என்று பட்டம் கொடுத்து கவர்னர் வேலையும் கொடுத்திருக்கின் றனர். அதுவும் இன்னும் கொஞ்ச நாளில் போய் அவதியுறும் காலமும் வந்து விடும். இவர்கள் மட்டுமா? ஜமீன்தார்களின் சுகபோக வாழ்க்கை எங்கே? அவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு என்ற பெயரால் கொடுக்கப்பட்ட செல்வங்கள் எத்தனை காலத்திற்கு உதவும்? மற்றும் இன்றுள்ள நிலப்பிரபுக்கள், கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள் இவர்களுக்கு எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கை? இவ்விதமான முறையில் அதி தீவிரமாக முன்னேற்ற மடைந்து புரட்சி தாண்டவமாடும் காலத்தில் கூட சில அன்னக் காவடிகளும், ஆண்டிப்பட்டாளங்களும் கைக்கூலிக்கு ஜே போட்டுக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கூத்தாடுகின்றனர். மதுரை கலவரத்திற்குக் காரணம், இவர்களேயன்றி வேறு பகுத்தறிவு கொண்ட ஒருவராவது இருந்ததாகக் கூற முடியாது.

ஒரு பெரிய தனவந்தருடைய வீட்டில் தன் சொத்துகள் களவு போகாவண்ணம் காப்பாற்றுவதற் காகக் காவல் காக்கும் பொருட்டு நாய் ஒன்று வளர்ப்பதுண்டு. அதைப் போன்று இவர்கள் எல்லாம் புராணக் குப்பைகளையும், மதம், கடவுள் என்ற ஆபாசங்களையும் காப்பாற்றுகிறார்கள். ஆனால், எவ்வளவோ புதுப்புது விதமாகப் புரட்சிகள் உண்டாகிக் கொண்டே வருகிற இக்காலத்திலும் இவர்கள் இந்த நிலைமையிலா இருக்க வேண்டும் என்று கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் இந்த எதிர்ப்புக்களுக்கெல்லாம் மக்கள் துணிந்து விட்டனர். எதற்கும் அஞ்சாதவர்களாக ஆகி விட்டனர்.

மேல்நாடுகளிலெல்லாம் மக்கள் எதையும் ஆராயும் குணமுள்ளவர்களாதலால் எந்தப் புரட்சி யையும் சுலபத்தில் எதிர்ப்பின்றி விரைவில் கொண்டு வந்தனர். ஆனால், இங்கு நம் மக்கள் எதையும் நல்லது கெட்டது என்பதை சுலபத்தில் அறிய முடியாதவர் களாதலால் சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் காண வேண்டும். அதன்றியும், இன்றைய அரசாங்கம் நம் பார்ப்பன அரசாங்கமாக இருப்பதாலும் எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பும், அவர்களுக்கென்ற சட்டங்கள் கொண்டு வருவதுமாக இருந்து கொண்டு கஷ்டத்தைக் கொடுக்கிறது. இதைப் போன்ற அரசாங்க சட்ட திட்டங்கள் எந்த நாட்டிலும் கிடையாது.

பர்மா, மலேயா நாடுகளில் ஜாதி வேற்றுமைகள் இருக்க வேண்டிய அவசியமில்லாததாகவே இருக்கும் நிலைமையாகி விட்டது. ஒருவன் ஜாதியின் பெயரைச் சொல்லிக் கொண்டு நான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று கூறிக் கொள்வதால் அதனால் ஒரு விதத்திலும் வரும் படியடைய முடியாது. எனவேதான், மலேயா நாட்டில் இத்தொல்லைகள் நீக்கி விடுகின்றனர். இவ்விதமான ஒவ்வொன்றையும் கவனித்து வர வேண்டும் என்றே நான் வெளி நாட்டிற்குப் பிரயாணம் செய்ய வேண்டிய தாயிற்று.

21.1.1955 அன்று ஈரோடு, பெரியார் நகர மண்டபத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

விடுதலை-29.1.1955

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.