ஆரியர் கற்பும் - திராவிடர் கற்பும். குடிஅரசு- 9.7.1943

Rate this item
(0 votes)

கற்பு பெண்களுக்கே உரியது. ஆண்கள் கற்பாய் இருப்பதற்குத் தமிழில் வார்த்தைகளே கிடையாது. ஏன் ஆரியத்திலும் வார்த்தைகளே கிடையாது.

அதுமாத்திரமா? உலகில் வேறு எந்த மொழியிலும் வார்த்தைகள் இருப்பதாகக் காணப்படுவதில்லை. என்றாலும் இருக்குமோ என்னமோ தெரியாது. நம் நாட்டு ஆண்கள் கற்பாய் இருக்கவேண்டும் என்பதற்கு மதக் கட்டளை இருப்பதாகக்கூடத் தெரியவில்லை. கடவுள்களாவது கற்பாக இருந்தார்களா என்றால் அதையும் காணமுடியவில்லை.

ஆரியர் கற்பும் - தமிழர் கற்பும்

அது எப்படியோ போகட்டும். பெண்கற்பு தமிழர்களுக்குத்தான் தொல்லையாக முடிந்ததே தவிர ஆரியர்க்கு அதில் எவ்விதத் தொல்லையுமில்லை. ஆரியர் கற்புக்கும் தமிழர் கற்புக்கும் தத்துவத்திலேயே (டெபனிஷனிலேயே) அதிக வித்தியாசமிருக்கிறது.

ஆரியர் கற்புக் கு வியாக்கியானம் அதாவது யோக்கியதாம்சம் வெகு சுலபமானது.

எப்படி என்றால் கற்புக்கும் பிற புருஷரைக் கூடுவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப்போனால் அருந்ததி, திரவுபதை, சீதை, அகலியை, தாரை, பிருந்தை முதலியவர்கள் தலை சிறந்த கற்புக்கரசிகள். இவர்களை நினைத்தாலே சகல பாபமும் நாசமாகிவிடும் என்பதோடு இவர்கள் கடவுள்களாகவும் விளங்குகிறார்கள்.

அருந்ததியின் கற்பு

இவர்களுள், அருந்ததியானவள் பெண்களுக்கு விபசாரித்தனம் செய்ய லைசென்சு கொடுத்தவள். உலகத்தில் ஒழிந்த இடமும் ஆண்பிள்ளைகளும் இருக்கிறவரை பெண்கள் கற்பாக இருக்க முடியாது என்று சொன்னவள். அதாவது இயற்கையாக யாரும் கற்பாக இருக்க முடியாது என்பது ஆகச் சொன்னவள். அப்படி இருக்க விபசாரித்தனத்துக்குத் தண்டனை இருக்கவும் நியாயமிருக்காது. திரவுபதையின் கற்புநெறி திரவுபதை அதை நடத்தையில் காட்டினவள். அய்ந்து பேருடன் நான் கலவி செய்து வந்தும், ஆறாவது புருஷன் மீது எனக்குக் காதல் இருந்து வந்தது. என் இருதயம் இவைகளை விபசாரித்தனம் என்று கருதவே இல்லை. ஏனெனில் ஆண் பிள்ளைகள் உலகத்தில் இருக்கும்போது பெண்கள் எப்படிக் கற்பாயிருக்க முடியும் என்பதாகக் கூறிவிட்டாள்.

உடற்சம்பந்தத்தால் கற்பு கெடாது

சீதை என் மனம் ஒருவரிடமும் விருப்பம் கொள்ளவில்லை. என் உடலைப் பற்றி நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓங்கி அடித்து விட்டாள். ஆதலால் உடல் சம்பந்தத்தால் கற்பு கெடுவதில்லை என்று சீதை ஒரு விலக்கு விதி ஏற்படுத்திவிட்டாள்.

விபசாரித்தனத்துக்கு இலக்கியம்

தாரையின் கற்பு சங்கதி விபசாரித்தனத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் இலக்கியக் கலையாகும். விபசாரித்தனம்தான் பெண் ஜென்மத்துக்கு இன்பமளிக்கக் கூடிய சாதனம் என்பதாக விளக்கியவள் தாரையே.

அகலிகை கற்பு சங்கதி

நல்ல பெண்களைக் கண்டால் எப்படிப் பட்டவனானாலும் ஆசைப்படுவது இயற்கை யென்றும், கவுரவமும் பெருமையும் உள்ள மனிதன் ஆசைப்பட்டால் பெண்கள் மனம் இளகுவது இயற்கைதான் என்றும், இதனால் தப்பிதம் ஒன்றும் இல்லை யென்றும், புருஷனுக்குக் கோபம் வருவதும் அந்தச் சமயத்தில் இயற்கையென்றும், பிறகு அது மாறிப்போகும் என்றும், அனுபவித்த இன்பம் எந்நாளும் மனத்தில் நிலைத்திருக்கும் என்றும் எடுத்துக்காட்டினவள்.

ஆரியர்களில் இந்தத் தெய்வீகப் பெண்களின் கற்பு இப்படி இருக்குமானால் மற்றச் சாதாரணப் பெண்களின் கற்பைப் பற்றிப் பேசுவது நேரத்தைக் கொலை செய்வதாகும். ஆரியர்களின் கற்பு இந்த விதமான யோக்கியதாம்சங்கள் கொண்டிருப்பதால் அவர்கள் மேலோர்களாகவும் உண்மையான மேன்மையான வாழ்வு வாழ்கின்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

தமிழர்களின் கற்பு தமிழன் கதியைப்பார்த்தால் பரிதாபகரமாய் இருக்கிறது. கண்ணகி கற்பு அவர்கள் வாழ்வையே கெடுத்துவிட்டது. அவ்வளவுதானா? அவர்கள் அரசர்களையும் கெடுத்தது; அவர்கள் நாட்டையும் கெடுத்தது; ஒரு முலையும் திருகி எடுக்கப்பட்டது. இவ்வளவோடு போகாமல் நிரபராதிகள் எல்லாம் வெந்து சாம்பலானார்கள். அது மாத்திரமா? நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறமாதிரி பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் வெந்து சாம்பலானார்கள்.

இது தமிழ்க் கற்புக்கரசியின் கண்ணகியின் கட்டளையாம். இப்படிக் கட்டளை இட்டவளுக்குக் கோவிலாம், கொண்டாட்டமாம். இவள் பாண்டிய நாடு பூராவையும் எரித்துச் சாம்பலாக்கி இருந்தால் இன்னும் பெரிய கடவுளாக ஆயிருப்பாள் போலும். ஆகவே ஆரியர்கள் கற்பு முறை அவர்களுக்கு எவ்வளவு இலாபத்தைக் கொடுக்கிறது என்பதும் அவர்களைப் பார்த்துக் காப்பி அடிக்கும் தமிழர்கள் கற்பு முறை நமக்கு எவ்வளவு தொல்லையையும் கேட்டையும் கொடுமையையும் கொடுக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

கற்பு மக்களுக்கு வேண்டும், கட்டாயம் வேண்டும் ஆனால் ஆண்களை அயோக்கியர்களாக ஆக்கும் கற்பு அயோக்கியர்களாக ஆவதற்கு வசதி அளிக்கும் கற்பு, தூண்டும் கற்பு, குடும்பத்தை, வாழ்க்கையை, பெண் உரிமையைக் கெடுக்கும் கற்பு, மனித சமுதாயத்து ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும், குழந்தை, குட்டி, பெற்றோர், உற்றார் ஆகியவர்களுக்காகிலும் எவ்விதப் பயனும் அளிக்காது. அளிக்காது என்பதோடு அதற்கு ஒரு மோக்ஷமுண்டு என்பது மகா அயோக்கியத்தனம் என்றே சொல்லுவேன்.

தந்தை பெரியார் “குடிஅரசு” 9-7-1943

 
Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.