பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்! விடுதலை - 31.8.1951

Rate this item
(0 votes)

உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் - பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஒரு அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. இந்த அறிவை மனிதன் மனிதனிடம் நடந்து கொள்ளும் அன்புக்கும், உதவிக்கும் பயன்படுத்தாமல், இன்னொருவனுக்குக் கேடு செய்வதிலும், திருடுவதிலும், வஞ்சிப்பதிலும் செலுத்தக் கூடாது என்றுதான் சொல்லுகிறோம். ஏன், மேலும் மேலும் வற்புறுத்துகிறோம் என்றால் மனிதன் இந்தக் கேவலமான நிலைமையிலிருந்து மீண்டு மனித சமுதாயத்திலே மனிதனாக மனிதனுக்கு மனிதன் தோழனாக வாழ வேண்டுமென்றே ஆசைப்படுகிறதனால்தான். ஆகையால் நாங்கள் சொல்வது எல்லாம் பழைய மூடப் பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டொழியுங்கள். தங்கள் தங்கள் புத்தியைக் கொண்டு, அறிவைக் கொண்டு சுதந்திரமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கூறுகிறோம். எந்தக் கடவுளாலும், எந்த சாஸ்திரத்தினாலும், எந்த மதத்தினாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கமும், நேர்மையும் தானாக வந்துவிடாது. நான் அவற்றைக் குறை கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே அவை எல்லாம் நம் சமுதாயத்திற்கோ, நம் மக்களுக்கோ உயர்ந்ததில்லை. அவ்வளவும் புரட்டும், பித்தலாட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அதைப் பின்பற்றக்கூடியவர்கள் எப்படி ஒழுங்காக வாழ முடியும்?

இதைப்போல்தான் இன்றைய அரசாங்கமும் இருக்கிறது. சும்மா சொல்லவில்லை.

எனக்கு வயது 72.

என்னுடைய 60 வருட அனுபவத்தைக் கொண்டு தான் சொல்லுகிறேன். ஆகவே, இன்றைய நிலைமையில் எந்த மனிதனும் யோக்கியமாக நடந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த ஸ்தானத்திலும், எந்தப் பதவியிலும் எவன் இருந்தாலும் லஞ்சம் வாங்கித்தான் தீரவேண்டு மென்ற மனப்பான்மை பரவி விட்டது. இன்றைய நிலையில் நான் கூட ஒரு பதவியில் இருந்தால் வாங்கித்தான் ஆக வேண்டும். என் வரைக்கும் 100, 1,000 கணக்குக்கு ஆசையிருக்காது. காரணம்? இது எனக்கு மட்டமானது. ஆனால், லட்சக்கணக்கில் ரூபாய் வருமானால் நானும் ஒரு கை பார்க்கத்தான் செய்வேன். ஏன்? இதுதான் இன்றைய தின மக்கள் இயற்கை நிலைமை, மூடக் கொள்கை. ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், சர்க்காருக்காக, பாவ புண்ணியத்துக்காக நடந்து கொள்ள வேண்டும், சமுதாயத்திற்காக நடந்து கொள்ள வேண்டுமென்பதும் இனிமேல் முடியாத காரியம். நாம், இன்னொருவனுக்கு மோசம் செய்தால் அவனுடைய வயிறு எரிகிற மாதிரிதான், நமக்கும் இன்னொருவன் மோசம் செய்தால் வயிறு எரியும் என்று நினைக்க வேண்டும். ஆகவே, நாளுக்கு நாள் திருந்தி ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமானால் நாம் நல்ல காரியங்கள் செய்யாவிட்டாலும், கெட்ட காரியங்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற தன்மை ஏற்படத்தக்க காரியங்கள் கண்டு பிடித்து அதற்கேற்ற காரியம் செய்ய வேண்டும். அதுதான் இனி மனிதத் தொண்டாக மாற வேண்டும். ஆகவே, இனியும் மக்கள் தொட்டதற்கெல்லாம் சட்டம் மீறுவதோ, இல்லாமல் அதிகாரிகளையும் சர்க்காரையும் எதற்கும் மீறும் உணர்ச்சி இல்லாமல், வரவேண்டுமென்று சொல்லுகிறேன். எதற்கும் பயந்து அல்ல! இதுதான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் அமைதிக்கும், நல்லாட்சிக்கும் பயனளிப்பதாகும்.

24.8.1951 அன்று கள்ளக்குறிச்சி அருகே கிராமம் என்னும் ஊரில் (வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போர் தோழர்களுக்கு பாராட்டு) தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை 

விடுதலை - 31.8.1951

 
Read 57 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.