நீங்கள் பார்ப்பனர்களின் தாசர்களா? குடிஅரசு - தலையங்கம் - 20.10.1940

Rate this item
(0 votes)

தீபாவளி நெருங்கி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் பார்ப்பானின் அடிமை, நான் பிராமணியத்தின் தாசானுதாசன், நான் திராவிடர்களின் தொன்று தொட்டு விரோதியான அய்யர்மார்களின் பாதுகாவலன், நான் எனது திரேகத்தில் ஓடும் வீரதிராவிட இரத்தம் சுண்ட காரணபூதனான ஒரு துரோகி என்று பெயரெடுக்கப் போகிறீர்களா? அல்லது நான் வீரத் திராவிடனே; நான், என் சமுகத்தின் நீண்ட நாளைய முட்டாள்தனத்தை மீண்டும் புதுப்பித்து முழுமுட்டாளாக மாட்டேன்; நான், பிராமணிய விஷம் எனது சமுகத்தை அரிக்கக் காரண பூதனாக இருக்கமாட்டேன்; நான் இனியும் திராவிட சாம்ராஜ்யம் உண்டாவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கமாட்டேன் என்று பெயர் எடுக்கப்போகிறீர்களா? என்று தெரிந்து கொள்வதற்காகவே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் தீபாவளிக்கு என்று கேட்க ஆசைப் பட்டோம்.

இத்திராவிட நாட்டில் நமது முன்னோர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வந்த காலத்தில் ஆரியர் குடியேறினர். அவர்களின் தீய பழக்க வழக்கங்கள் திராவிட சமுகத்திற்கு வந்துவிடாது இருக்க அக்கால திராவிட மன்னர்கள் ஆரியரை விரட்டினார்கள்.

அக்காலத்தில் ஆரியர்கள் நமது திராவிடர்களிலேயே சிலரைப் பிடித்து ஏமாற்றி, அவர்கள் மனம் தங்களிடம் ஆசையாக இருக்கும்படிச் செய்யவேண்டியதை எல்லாம் செய்து தம் கையாளாக்கிக் கொண்டு, தங்களை எதிர்த்த திராவிடர்களை ஆரிய சூழ்ச்சியையும், ஏன் திராவி டர்களின் பலத்தையும் ஒன்றாகச் சேர்த்து, எதிர்த்து நமது திராவிட மன்னர்களைக் கொன்றார்கள். இது ஆரியர்கள் எழுதி வைத்த சரித்திரங்களிலேயே இருக்கிறது.

ஆரிய நஞ்சிலிருந்து தன் சமுகத்தைக் காப்பாற்றப் பாடுபட்ட ஒரே குற்றத்துக் காகத்தான் அக்காலத் திராவிட வீரர்கள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர். இதற்காகப் பிராமண சமுகத்தை நாம் கடிந்துகொள்வதில் பிரயோஜனமில்லை. நமது திராவிடர்களில் பலர், புன்சிரிப்புக்கும், புடவை பொன்னாபரணங்களுக்கும் ஏமாந்து போனார்கள்.

ஆனால், நமது முன்னோர்களில் நல்லவர்கள் தீயவர்களால் நயவஞ்சகமாய் அழிக்கப்பட்ட நாள் இது என்றால் இந்நாளை ஆரியர்கள் கொண்டாட வேண்டுமா? திராவிடர்களான நாம் கொண்டாடுவதா? என்பதை எந்தப் படித்தவனும் தன்னை அறிவாளி என்று எண்ணிய எவனும், தன்னை பண்டிதன் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் கொஞ்சமும் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

இதுவரையில் நாம் ஏமாந்து இருந்த நாள் சரி, இன்னும் நாம் கொண்டாடினால் உண்மையில் நம்மைவிடக் கோழைகள், மானத்தை மதிக்காதவர்கள், எவரும் உண்டு என்று சொல்வதற்கில்லை. பதினெட்டாண்டாக இந்நாட்டில், எப்படிப் பிராமணியம் நம்மை அடிமைப்படுத்தியது என்று பேசியாய் விட்டது; எழுதியாய் விட்டது. பிராமணியக் கொடுமையை, ஆரிய அகந்தையை, எடுத்துச் சொன்ன காரணத்துக்காகவும் பிராமணியப் படுமோசத்தை எழுதிய காரணத்திற்காகவும் சிறைப்பட்டும் ஆய்விட்டது.

நீங்களும் பத்தாயிரக்கணக்கான கூட்டத்தில் அய்ம்பதினாயிரக்கணக்கான கூட்டத்தில் ஏன், இரண்டு லட்சம் மக்கள் உள்ள கூட்டத்திலும், நம்மவர்கள் பிராமணிய நயவஞ்சகத்தை எடுத்துச் சொல்லும்போது, கைதட்டி ஆரவாரம் செய்தீர்கள். ஆனால், ஆரியர் அடிமைக் கட்டை நாம் அறுத்தெறிய வேண்டிய தினங்களில் ஏமாந்து போகிறீர்கள்.

சென்ற ஆண்டு இரண்டாயிரம் பெயர்களுக்கு அதிகம் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று எழுதினார்கள்.

இந்தத் தடவை அந்த எண்ணிக்கை பதின் மடங்காக வேண்டும். இல்லாவிட்டால் பணக்காரனானாலும், பட்டதாரியானாலும் பார்ப்பானின் அடிமை என்பதில் சிறிதும் சந்தேகமற்றவர்களாகவே எதிர் காலத் திராவிட உலகம் உங்களைக் கருதும் என்பதை இன்றே எச்சரிக்கை செய்கிறோம்.

தந்தை பெரியார்.

குடிஅரசு - தலையங்கம் - 20.10.1940

Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.