தலைவன் என்பவன் யார்? குடிஅரசு - 25.08.1945

Rate this item
(0 votes)

நான் யாரையும் எந்தக் காரியத்தையும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் இடம் விட்டுவிடுவது வழக்கம். பொறுப்பு ஏற்காமல் அதிகாரம் செய்பவர்களை அலட்சியமாய் விட்டுவிடுவதும் வழக்கம். நம் இயக்கங்கள் தொண்டாற்றித் தொல்லை ஏற்றுக்கொண்டு அவதிப்பட வேண்டிய இயக்கமாகும். இதில் வெறும் அதிகாரக்காரருக்கு இடம் கொடுத்தால் தொண்டாற்றுகிறவர்கள் சலிப்படைந்து விடுவார்கள். ஒரு தலைவன் வேண்டும். அவன் நடத்துபவனாய் இருக்கவேண்டுமே ஒழிய, நடத்தப்படுபவனாய் இருக்கக்கூடாது. அடுத்தாற்போல் பின்பற்றுபவர்கள் இருக்க வேண்டும், அவர்கள் தலைவர் அபிப்பிராயத்துக்கு ஒத்துக்கொண்டு (ஒத்து) உழைக்கிறவர்களாக இருக்கவேண்டும்.

அதற்குத்தான் ஒத்துழைப்பு என்று பேர். அதிகாரம் செய்துகொண்டு தலைவரை டைரி கேட்பவர்களாக இருக்கக்கூடாது. பலபேர் அதிகாரம் செய்தாலும் காரியம் கெட்டுப்போகும்.

சிலருக்குப் பின்பற்றுவது அவமானமாய் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு வேறுபல கட்சி அமைத்துக் கொள்ளப் பல வசதியும் வேறு காரியங்களும் அப்படிப்பட்ட தொண்டர்களை ஆதரிக்கப் பல தலைவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் நம் கட்சிகள் அப்படிப்பட்டவை அல்ல. பின்பற்றி தொல்லைப்பட வேண்டியது, சிறைவாசம், குடும்பநஷ்டம், வாழ்வுகேடு, பாமர மக்களிடம் அவமதிப்பு, சர்க்காரிடம் வெறுப்பு முதலியவை அடையவேண்டிய சங்கடமான காரியத்தில் பட்டதாகும். இதற்கு அப்படிப்பட்ட காரியங்களில் நம்பிக்கையும் அவற்றிற்குத் தயாராகும் தகுதியும் உள்ளவர்களுக்கே இடம் இருக்க முடியும். இல்லாதவர்கள் வீண் மனச் சங்கடமும், கட்சிப் போக்கைத் தடைப்படுத்தி முட்டுக்கட்டை போடும் வேலையுமே செய்ய வேண்டி இருக்கும். இந்த முட்டுக்கட்டைக்காரரிடம் எனக்கு காங்கிரசில் இருந்த காலம் முதல் அனுபவம் உண்டு. அவசியம் இல்லாத காலம்வரை தெரியாதவன்போல் இணங்கி இருப்பேன். அவசியம் ஏற்பட்டதும் யாரையும் உதறித் தள்ளிவிட்டு என் காரியத்தைச் சாதிக்க முனைந்துவிடுவேன். அப்படிச் செய்தால்தான் உண்மையாகப் பாடுபடுவதாய் கருதிக் கொண்டிருப்பவனுக்குத் திருப்தி ஏற்படும். இது இயற்கை. ஆதலால் சர்வாதிகாரம் என்பதைக் குறை கூறாதீர்கள்.

ஜனநாயகம் என்பதே பித்தலாட்டமான காரியம். அதிலும் நமக்கு அது பித்தலாட்டமும் முட்டாள்தனமானதுமான காரியம். நீங்கள் பெரிதும் இந்த இயக்கத்தில் தொண்டாற்றுவதை என்னிடம் நம்பிக்கை உள்ளவரை என் காரியத்திற்கு உதவி செய்வதாய்க் கருதுங்கள். நம்பிக்கை அற்றபோது என்னைத் தள்ளி விடுங்கள் அல்லது என் தலைமையை உதறித் தள்ளி விட்டுப் போய் ஒரு கட்சி அமைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதிரியாக இருந்தால்தான் சுயநலமற்ற தொண்டு, பொறுப்புள்ள கவலையுள்ள தொண்டு செய்ய முடிகிறது. இதை 25 வருஷமாய்ச் சொல்லி வருகிறேன். குடிஅரசைப் பாருங்கள், என் பல பேச்சைப் படியுங்கள், மரியாதையும், செல்வாக்கும் ஏற்படுகிறவரை இவற்றைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும், கூடவே இருந்து பெரியார் கூறுகிறபடி நடப்பதாகப் பொய்ச் சத்தியம் செய்வதும், உறுதி கூறுவதும், தங்களுக்குத் தனி செல்வாக்கு ஏற்பட்டதாக நினைத்த உடன் அல்லது அசவுகரியம் ஏற்பட்டவுடன் பெரியார் சர்வாதிகாரம் என்று கூறுவது, நாணயமான காரியமாகாது.

நமக்கு வேண்டியது நம் இழிவும், நம் அடிமைத் தன்மையும் நீங்க வேண்டியது. இதற்கு என் வழி தனி வழி, சுயேச்சை வழி இதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இது தவிர தனிவழி, சுயேச்சை வழி உள்ளவர்கள் தனியாய், சுயேச்சையாய் நடத்துங்கள். என்மீது கோபியாதீர்கள். முட்டுக்கட்டை போடாதீர்கள். சில தோழர்கள் பேசுவதுபோல் முட்டாள்களாய் இருக்கும்வரை என்கூட இருந்ததாகவும் இப்போது அறிவு ஏற்பட்ட உடன் விலகி கெட்டிக்காரர்களாக உஷார்காரர்களாக ஆகிவிட்டதாகவும் கூறிப் பெருமை அடைவதுபோல், மற்றவர்களும் ஒவ்வொருவரும் முட்டாள்களா அறிவாளிகளா என்று இப்போதே சிந்தித்துப் பார்த்துத் தொண்டில் இறங்குங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் சமீபத்தில் உங்களுக்குப் பெரிய கஷ்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும். அப்போது மற்றவர்கள் போல் என்னை சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டி மற்றவர்கள்போல் கைவிட்டு ஓடிவிடாதீர்கள், தொல்லை கொடுக்காதீர்கள்.

 

23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹால் மண்டபத்தில் ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை மாகாண மாநாட்டுக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...


குடிஅரசு - 25.08.1945

 
Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.