ஈரோடு முனிசிபாலிட்டி. குடி அரசு - கட்டுரை - 14.03.1926

Rate this item
(0 votes)

ஈரோடு முனிசிபாலிட்டியின் சேர்மன் நடத்தையைப்பற்றி கவுன்சிலர்கள் அடிக்கடி கோர்ட்டுகளுக்குப் போக ஏற்பட்டதைப் பற்றியும், அரசாங்கத்தாருக்கு அடிக்கடி புகார்கள் போய்க்கொண்டிருப்பது பற்றியும் இதற்கு முன் பலதடவைகளில் குறிப்பிட்டிருக்கின்றோம். இவற்றில் சிங்காரவன விஷயமாக நிறைவேறின ஓர் ஒழுங்கான தீர்மானத்தை விட்டுவிட்டு, நிறைவேறாத ஓர் தீர்மானத்தை நிறைவேறியதாக கெட்ட எண்ணங்கொண்டு பொய்யாகவும் அக்கிரமமாகவும் நடவடிக்கைப் புத்தகத்தில் பதிந்துகொண்டார் என்கிற காரணம் கொண்டு ஸ்ரீமான்கள் கே.ஏ.ஷேக் தாவூத் சாயபு, மு.ச. முத்துக்கருப்பன் செட்டியார் முதலியவர்கள் இத்தீர்மானம் நிறைவேற்றவொட்டாதபடி தற்கால தடை உத்திரவு பெற்றிருந்த விஷயம் நேயர்களறிந்திருக்கலாம். அதன் பிறகு இதே சேர்மன் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச முதலியார் முனிசிபல் பண விஷயங்களில் நாணயமாய் நடந்துக் கொள்ளவில்லையென்பதாக பல புகார்கள் அதிகாரிகளுக்கு எட்டியிருப்பதன் பலனாய், சிவில் கோர்ட்டு விவகாரங்களை ராஜி செய்துகொள்ள வேண்டியது சேர்மனுக்கு அவசியமாய்ப்போய்விட்டது. அதை முன்னிட்டே தற்காலம் கோர்ட்டிலிருக்கும் பொய்த்தீர்மான விவகாரம், ராஜி செய்துகொள்ள ஏற்பாடாகி, விவகாரத்துக்கு ஆதாரமாயிருந்த தீர்மானத்தை நடவடிக்கைப் புஸ்தகங்களிலிருந்து எடுத்துவிடுவதற்காக ஓர் கூட்டம் கூடி, அந்தக்கூட்டத்தில் எடுபட தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அத்தீர்மானமாவது:-

“2-11-25-ந் தேதி முனிசிபல் மீட்டிங்கில் நிறைவேறியதாகச் சொல்லப்படும் ஓர் தீர்மானமானது அது உண்மையிலேயே நிறைவேறவில்லையென்கிற காரணத்தால், சில கவுன்சிலர்களுக்குள்ளாகவே உரசல் ஏற்பட்டதோடு, முக்கியமாய் முனிசிபல் நிர்வாகத்திற்குக் கேடாய் இருப்பதால் நடவடிக்கைப் புஸ்தகத்திலுள்ள தீர்மானத்தை மறைந்து போகும்படி அடித்து விடவேண்டியது” என்று முனிசிபாலிட்டியிலுள்ள பூராகவுன்சிலர்களும் ஆஜராகி ஏகமனதாய்த் தீர்மானிக்கப்பட்டது!

சேர்மன் அவர்கள் இத்தீர்மானத்தின் வாசகம் ரொம்பக்கடுமையாயும், தனது நாணயத்தைப் பாதிக்கக் கூடியதாகவும் இருக்கிறதென்று எவ்வளவோ சொல்லியும், கவுன்சிலர்கள் அதுதான் உண்மையென்று ஒரே பிடிவாதமாய் அப்படியே நிறைவேற்றினார்கள். இதன் பலனாய் முனிசீப் கோர்ட்டில் இப்போது நடைபெற்று வரும் விவகாரம் பின்வாங்கிக்கொள்ளப்படும்.

இப்பணப்புழக்கமான விஷயங்களைப் பற்றிப் பின்னர் விரிவாயெழுதுவோம்.

நமது நாட்டில் முனிசிபல் நிர்வாகமானது சிற்சில இடங்களில் மிகக்கேவலமாயும், நாணயக்குறைவாயும் நடைபெறும் விஷயங்கள் அரசாங்கத்தாருக்குத் தெரிந்திருந்தும் அலக்ஷியமாயிருந்து வருவதினால் முனிசிபல் நிர்வாகிகள் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள். சர்க்காரார் சிறு விஷயங்களையே கவனித்துத்தகுந்தபடி எச்சரிக்கை செய்திருப்பார்களானால் அநேக பெரிய குற்றங்கள் நேரிடுவதற்கே வழியில்லாமற்போயிருக்கும். முனிசிபல் இலாகாவுக்கும் கெட்டபெயர் ஏற்படவும், குற்றம் சொல்லவும் இடமில்லாமலிருந்திருக்கும். இனியாவது மந்திரிகள் கவனித்துதக்கது செய்வார்களென்று நினைக்கிறோம். இவ்விஷயம் மந்திரிகள் ஞாபகத்திற்குக் கொண்டுபோகவேண்டுமென்று நாள் இதுவரையில் நினைக்கவேயில்லை. ஆனால், நிலைமை நாளுக்கு நாம் ரொம்பவும் கேவலப்பட்டு வருவதோடு வெறுவாயைமென்றுகொண்டிருக்கும் நமது மந்திரிகளின் எதிரிகளுக்கு அவல் கிடைத்தது போலாகுமென்றே இதைக்குறிப்பிடுகிறோம்.

குடி அரசு - கட்டுரை - 14.03.1926

Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.