இந்து மதத்திற்கு சரித்திர சம்பந்தப்பட்ட ஆதாரம் கிடையாது! விடுதலை - 20.2.1955

Rate this item
(0 votes)

மதம் என்பதற்கு என்ன அடிப்படைத் தத்துவமென்று பார்க்கும்போது யாரோ ஒருவர் கூறியதை, அது புத்திக்கு ஏற்றதா? இல்லையா? என்று சிந்திக்காமல் அவரிடம் இருக்கும் பக்தியைக் கொண்டு நம்பிவிட வேண்டும் என்பது தான். இதன்றி, கூறியதை ஆராய்ந்து, ஏன்? எப்படி? என்ன? எதற்காக? என்று அதில் கண்டவற்றுக்கு விவரம் கேட்டால் அப்படிக் கேட்பவன் மதத் துரோகி. இதுதான், அதாவது வெறும் நம்பிக்கை வைப்பதுதான் மதம் என்பதன் உட்கருத்து.

பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்ப தாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட மானிடன் அல்லன் என்றும் கூறி இருக்கிறார். எனவே, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பது பவுத்தம். அதுபோலவே, பகவான், ரிஷிகள், அவர், இவர், சிவன், பிரம்மா, விஷ்ணு, கிருஷ்ணன் - வேதத்தில், சாஸ்திரத்தில், கீதையில்.. கூறினார்கள். ஆதலால், அதை அப்படியே நம்பி ஆகவேண்டும். அந்தப்படி நடந்தாக வேண்டும் என்பது (இந்து) மதம். ஆகவே, (இந்து) மதத்தின் அடிப்படைத் தத்துவத்துக்கும் (பவுத்தம்) கொள்கை என்பதன் அடிப்படைத் தத்துவத்துக்கும் காணப்படும் பேதம் இதுதான். இதை அடிப்படையாகக் கொண்டுதான் நான் சொல்லுகிறேன் - புத்தக் கொள்கைகளைப் புத்த மதம் என்று கூறுவது முற்றிலும் பிசகு என்பதாக.

அன்றியும், பவுத்தத்திற்கு அநேக உண்மை ஆதாரங்கள் உண்டு. புத்தர் பிறந்தார் என்பதற்கும் அவர் என்ன கூறினார் என்பதற்கும் சரித்திர ஆதாரம் உண்டு. வருடம், மாதம், தேதி முதல் சரித்திர வாயிலாகக் காண முடியும்.

ஆனால், இந்து மதத்திற்கு அப்படிப்பட்ட சரித்திர சம்பந்தப்பட்ட ஆதாரம் ஒன்றுகூடக் கிடையாது. அது ஏற்பட்டது யாரால்? எப்பொழுது? என்பதற்கு ஒருவித ஆதாரமும் கிடையாது. அப்படி ஏதாவது யாரும் கூறுவார்களேயானால், அவை ஏதோ போதையில் உளறிய அல்லது கூறிய அர்த்தமற்ற வார்த்தைத் தொகுப்புகளைத்தான் கூறக்கூடும். அவர்கள் இந்து மதக்காரர்கள் கூறுகிறபடி, இந்து மதத்துக்கு வயது கிடையாது. எண்ணிக்கையற்ற பலப்பல சதுர்யுகங்களும் கோடி கோடி வருஷங்களுக்கு முன்பாக ஏற்பட்டது என்பதும், அது மனிதனால் ஏற்பட்டதல்ல என்பதும், கடவுள் கூறினார், தேவரால், ரிஷிகளால் எழுதப்பட்டது என்ற ஆதாரமற்ற அறிவுக்கொவ்வாத அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசுவர். இவ்வித முறையில் இந்து மதம் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இந்தக் கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள் என்பவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஒழுக்க வழக்கங்கள் என்ன? என்பதைப் பார்த்தால் அவை மிக மிக ஆபாசமாக, யோக்கியமற்றதாகவே பெரிதும் காணப்படும்.

பவுத்தத்திற்கு அதில் காணப்படுபவர்களுக்கு இப்படிப்பட்ட ஆபாசம், அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளுள் யோக்கியமற்ற தன்மைகள் தென்பட மாட்டாது. இரண்டையும் ஆய்ந்து பார்த்தால் பவுத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு.

அதாவது, பவுத்தத்திலும் கடவுள் கிடையாது. இந்து மதத்திலும் கடவுள் கிடையாது. பவுத்தத்தில் கடவுள் என்பதாக ஒன்று இருக்க முடியாது; அது தேவை இல்லை. சர்வம் புத்தமயம் என்றே தோன்றும். அப்படியே புத்தர் கூறினார்.
அதுபோலவே இந்து மத ஆதாரமான வேதம் என்பதிலும் கடவுள் கிடையாது. அதில் எங்கும் நிறைந்த எல்லாமுமாய் இருக்கிற சர்வ சக்தியும் சர்வ நடப்புக்குக் காரணமாகவும் இருக்கிற உருவமற்ற ஒரு கடவுள் உண்டு என்பதான, ஒரு கடவுள் எங்கும் காணப்படுவதில்லை.

வேதத்தில் பல தேவர்கள் உண்டு. அவர்களுக்கு உருவம், தனித்தனி தொழில், அதிகாரம் உண்டு. மனைவி மக்கள் உண்டு. ஒழுக்க ஈனமான பல காரியங்களைச் செய்தவர்கள், செய்கிறவர்கள் என்பதாகத்தான் பெரிதும் காணப்படும்.

இப்படிப்பட்ட தேவர்கள்தான் அவதார மெடுப்பதாகவும் பிள்ளை குட்டிகளைப் பெறுவதாகவும் காணப்படுகின்றனவே ஒழிய, மற்றபடி கடவுள் தன்மைக்கு உரிய தத்துவத்தோடு கடவுள் என்பதாக ஒன்று இல்லை.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வேதத்தில் தேவர்கள் என்பதாக 30 அல்லது 38 பெயருடைய தேவர்கள்தான் உண்டு. அவர்கள் வேதகால மக்களுடைய ஆசாபாசங் களுக்கு ஏற்ற வண்ணம் குணங்களைக் கொடுத்து அவர்களை ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு அதிகார தேவனாக ஆக்கி அவர்களை தங்கள் இச்சைக்கு ஏற்ப பயனளிக்கும்படி வேண்டி பிரார்த்தனை செய்திருக்கிறதாகவேதான் காணப்படுகிறது.

அந்த 33 பேர்களில் (ஒவ்)வொருவர் தான் இந்திரன், வருணன், வாயு, அக்கினி, ருத்திரன், சூரியன், பிரம்மா, சந்திரன், விஷ்ணுமித்திரன், சாவித்திரி, புஷன் உஷை, அரியமான், அஸ்வினி தேவன், மின்னல் தேவர், பிரசண்ட மாருதத்திற்குத் தேவனான மாருதர் தேவர் என்பவர்களும் மற்றும் இவர்கள் போன்ற இன்னும் சிலரையும் சேர்த்து 33 தேவர்களையே வேதத்தில் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

அவர்களில் சிலரை கடவுள்களாகவும், சிலரை தேவதைகளாகவும்தான் இன்றைக்கும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனவே ஒழிய, நமக்கு வேதத்தின்படியோ, சாஸ்திரங் களின்படியோ இந்து மதம் மூலம் எவ்வித கடவுளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.

ஆகவேதான், இந்த அடிப்படையைக் கொண்டு பவுத்தத்திலும் கடவுள் இல்லை; இந்து மதத்திலும் கடவுள் இல்லை என்று சொன்னேன்.

அடுத்து புத்தர் கூறி இருப்பதில் இந்து மதம் என்பதில் மனித உடலுக்குள் ஆத்மா என்பதாக ஒன்று உண்டு என்று சொல்லப்படுவதை மறுத்து அப்படியாக ஒன்று கிடையாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மற்றும் பவுத்தம் அனீச்சுவரம் (கர்த்தா இல்லை), அனாத்மம் (ஆத்மா இல்லை), அநித்தியம் (நித்திய வஸ்து என்பதாக எதுவும் இல்லை. எல்லாம் மறையக் கூடியதே) என்பதான இவற்றை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.


14.2.1955 அன்று சீரங்கம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை .

விடுதலை - 20.2.1955

Read 58 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.