தெருவில் நடத்தலும் சர்க்காரின் மனப்பான்மையும். குடி அரசு கட்டுரை - 07.03.1926

Rate this item
(0 votes)

கோயமுத்தூர் ஜில்லா உடுமலைப்பேட்டை தாலூக்கா குமரலிங்கம் என்னும் கிராம அக்கிரஹாரத்தில் ஒரு சர்க்கார் பொது தபாலாபீஸ் இருந்துவந்தது. அவ்வூர் அக்கிரஹாரவாசிகளாகிய பிராமணர்கள் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படும் ஆதி திராவிடர்களை தீண்டாதார் என்னும் காரணத்தால் அந்தத் தபால் ஆபீஸுக்குச் செல்லவும் அவ்வீதியில் நடக்கவும் விடுவதில்லை. அதைப்பற்றி ஸ்ரீமான் சு.வீரய்யன் சட்டசபையில் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, 1924 ´ செப்டம்பர் - 25- சகல பொதுத் தெருக்களிலும் சகல ஜாதி மனிதர்களும் நடக்கலாம் யாரும் ஆக்ஷபிக்கக் கூடாது என்ற 2660 - ம் நெம்பர் அரசாங்க உத்தரவு குமரலிங்கம் பிராமணர்களுக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் ஆதிதிராவிடர்களை தெருவில் நடக்கவிடாமல் தடுக்கிறார்களே; இதைப்பற்றி கேள்வியில்லையா என்று கேட்டார். அதற்கு சர்க்கார் மெம்பர் பதிலளித்ததாவது:- இது விஷயத்தைப் பற்றி போஸ்ட் மாஸ்டர் ஜனரலுக்கு எழுதியிருக்கிறது; அவரும் தபாலா பீஸை வேறு வீதிக்கு “மாற்றிவிட்டார்” என்று பதிலளித்தாராம். இந்தப் பதிலைப் பார்த்தால், சாத்தூருக்கு தடம் எது என்று ஒருவர் கேட்டால், சாராயம் திராம் அஞ்சணா என்று பதில் சொல்லுவது போலிருக்கிறது.

 2660 நெ. சர்க்கார் உத்தரவுப்படி வீதியில் மனிதர் நடக்கும் உரிமையைப் பிராமணர் பிடுங்கிக் கொள்ளுகிறார்களே என்று கேட்டால் போஸ்டாபீசு வேறு வீதிக்கு மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்லும் பதில் கேள்விக்கு சமாதானமாகுமா? ஸ்ரீமான் வீரய்யனுக்கும் நமக்கும் போஸ்ட்டாபீஸைப் பற்றியா அதிக கவலை? இவ் விஷயங்களைக் கவனிக்கும்போது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலிருக்கிறது. இது போலவே பாலக்காட்டிலும், கல்பாத்தி தெருவு பொதுத் தெருவு அங்கு யாரும் நடக்கலாம் என்று சொல்லிவிட்டு, இவர்கள் வார்த்தையை நம்பி நடந்தவர்கள் அங்குள்ளவர்களால் அடிபட்ட பிறகு, இப்படி அடித்து விட்டார்களே என்று சொன்னால் நீ ஏன் அங்கு போனாய் என்று கேட்டு விட்டார்கள். மறுபடியும் ஒரு தடவை அங்கு நடந்ததற்காக கேஸ் ஏற்பட்டு மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டின் மூலம், நடந்தது குற்றமில்லை என்று விடுதலையாகியும்கூட, மறுபடியும் நடக்கும்போது வழி மறித்து அடித்துப் பயப்படுத்தி நடந்தவரிடமிருந்து அந்த வீதிக்கு புண்யார்ச்சனை செய்ய 10 ரூபாய்க்கு பாண்டு எழுதி வாங்கிக்கொண்டார்களாம். இதைப்பற்றி கேஸ் நடப்பதாகவும் தெரிகிறது. இம்மாதிரியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்ல சர்க்காருக்கு அழகாகுமா?

நல்ல அரசு என்பது தன்னால் - தன் பரிசனத்தால், திருடரால், அயோக்கியர் முதலியவர்களால், தன் குடி ஜனங்களுக்குத் தீங்குவராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? அதை விட்டுவிட்டு ஒருவனைப் பார்த்து நீ நட, வந்ததுக்கு நானாச்சுது என்பதும், மற்றவனைப் பார்த்து நீ விடாதே, வந்ததுக்கு நானாச்சுது என்பதும், இரண்டு பேரும் உதைபோட்டுக் கொண்டும் வக்கீலுக்கும், போலீஸாருக்கும் அதிகாரிகளுக்கும் பணங்கொடுத்து வாயுங்கையுமாய் அலைவதைப்பார்த்து, இப்படியும் நம்ம ஆள்களுக்கு ஒரு வரும்படி ஆச்சுதே என்றும் ஒருவருக்கொருவர் சுலபமாய் உதை போட்டுக்கொள்ளும்படி செய்துவிட்டோமே என்றும் சிரித்துக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பதை நல்ல சர்க்கார் என்று சொல்லமுடியுமா? ஸ்ரீமான் வீரைய்யன் இம்மாதிரி பித்தலாட்டமான சட்டசபையைக் கட்டி அழுவதைவிட, மகாத்மா சொல்படி சத்தியாக்கிரகம் செய்து குறைந்தது ஒரு ஆயிரம் தொண்டர்களையாவது ஜெயிலுக்கு அனுப்பவோ, அவசியமானால் உயிரைக் கொடுக்கச் செய்யவோ தயாராயிருப்பாரானால், நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஆதி திராவிட மக்களை நரகத்திலிருந்து விடுதலை செய்தவராவார்.

குடி அரசு கட்டுரை - 07.03.1926

Read 39 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.