இந்து மகாசபையின் உண்மை நிறம்! சிரத்தானந்தரே அறிந்து விலகிக் கொண்டார். குடி அரசு கட்டுரை - 07.03.1926

Rate this item
(0 votes)

நமது நாட்டில் இந்து மகாசபை என்னும் பேரால் ஒரு பிராமண வர்ணாஸ்ரம சபை ஏற்பட்டிருப்பதைப்பற்றி நாம் பல முறை - அது, இந்தியாவை அந்நியருக்கு காட்டிக் கொடுப்பதற்கு ஆதரவாயிருந்த - இருக்கிற பிராமண வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தவும், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட முடியாதபடி மத்தியில் ஒரு தடைக்கல்லாயிருக்கவும் (ஏனென்றால் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாய் விட்டால் சர்க்காரை விட வர்ணாஸ்ரமிகளுக்கு பெரிய ஆபத்து) ஏற்பட்டதென்றும்; பிராமண சூழ்ச்சிகள் பலவற்றில் இதொன்று எனவும் பேசியும், எழுதியும் வந்திருக்கிறோம். அதற்கு ஆதாரமாகவும் தமிழ்நாட்டிலுள்ள இந்து மகாசபைக்கு வடிகட்டின வர்ணாஸ்ரமியான ஸ்ரீமான் கூ.சு. ராமச்சந்திரய்யர் அக்கிராசனராயிருப்பதும்; ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக்குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினிக் கிடப்பேன் என்று சொன்ன ஸ்ரீமான் ஆ.மு. ஆச்சாரியார் முதலியோர் முக்கியஸ்தர்களாகவும் இருப்பதோடல்லாமல், தமிழ் நாட்டிலுள்ள கிளை இந்து மகாசபைகள் இரண் டொன்றில் தீண்டாமையை ஒழிப்பது தப்பு என்றும், இது விஷயத்தில் பிராமணர்கள் முயற்சியாயிருந்து அதை எதிர்க்க வேண்டும் என்றும், தீர்மானித்திருப்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம்.

அல்லாமலும் அதன் அதிமுக்கியஸ்தர்களில் முக்கியஸ்தரான ஸ்ரீமான் பண்டித மாளவியா அவர்கள் இந்து மகாசபையில் பேசும்போது, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பேசுவதும், வர்ணாஸ்ரம பரிபாலன சபையிலிருக்கும் போது தீண்டாமையை ஒழிக்கக்கூடாது என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றுவதுமாயிருக்கிற தந்திரங்களையும், தீண்டாதாருக்கு மிக உருக்கமாய்ப் பரிந்து பேசுவது போல் சிற்சில சமயங்களில் மாய்மாலக் கண்ணீர் விடுவதையும் எடுத்துக் காட்டியிருக்கிறோம். இந்து மகாசபையின் தந்திரத்தை அறிய இவ்வளவும் போதாது என்று சொல்லுகிறவர்களுக்கு மறுபடியும் ஆதாரங்கள் காட்டவும், பண்டித மாளவியா அவர்களின் உள்கருத்தையும், உண்மை நிறத்தையும், ஆசார திருத்தத்தில் அவருக்குள்ள கவலையின் நிலைமையையும் வெளியார் அறிய சமீபத்தில் மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அதாவது, இந்து மகாசபையின் ஒரு கூட்டத்தில் விதவைகள் புனர்விவாகம் செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு தீர்மானம் ஏகமானதாய் ஒரு பெரிய விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேறிற்றாம்.

இது விஷயத்தைப் பண்டித மாளவியா கேள்விப்பட்டதும் இவ்விஷயம் மகாநாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் மகாநாட்டுப் பந்தலைக்கூட நான் எட்டிப் பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இதை அறிந்த சுவாமி சிரத்தாநந்தர் உடனே இந்து மகாசபை நிர்வாகத்திலிருந்து விலகிக்கொண்டார். ஆதலால், இந்து மகாசபை வர்ணாஸ்ரமசபை என்பதற்கும், ஆசார திருத்தக்காரர்களை ஏமாற்ற ஏற்பட்டதென்பதற்கும் இவற்றை விட இன்னும் என்ன ஆதாரங்கள் வேண்டுமோ நமக்குத் தெரியவில்லை. இவ்வளவையும் அறிந்து நம்மவரில் சிலர் வேண்டுமென்றே இந்து மகாசபை, இந்துக்கள் என்போர்கள் எல்லோருக்கும் பொதுவானது, பொதுவானது; என்று சொல்லுவார்களானால் அதற்கு நாம் என்ன செய்யலாம்? உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்பலாம்; ஞாபகத்துடனேயே வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டு தூங்குவது போல் படுத்திருப்பவர்களை எப்படி எழுப்புவது? தடி கொண்டுதான் தட்ட வேண்டும்.

குடி அரசு கட்டுரை - 07.03.1926

Read 13 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.