மகாத்மாவின் ஓய்வு. குடி அரசு கட்டுரை - 14.02.1926

Rate this item
(0 votes)

மகாத்மா ஓய்வு எடுத்துக்கொண்டார் என்பது உலகுக்கே தெரியும். ஆனால், அவர் ஓய்வெடுத்துக் கொண்டாலும் அவரின் பொல்லாத வேளை என்பது அவரை ஓயவிடுவதில்லை. அவரது நண்பர்கள் என்போர்கள் அவரை மறுபடியும் வழுக்கலில் சறுக்கி விட்டுக் கொண்டே வருகிறார்கள். சட்டசபையில் நம்பிக்கையில்லாததால் சுயராஜ்யக் கட்சியைத் தான் ஒப்புக்கொள்ளமுடியாது என்று சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டவரை மறுபடி மறுபடியும் தொந்தரவு செய்து அவர் காலைப்பிடித்து சாணியை மிதிக்க வைக்கிறார்கள். இருந்தாலும் மகாத்மா தடியும் முறியாமல் பாம்பும் சாகாமல் அடிக்கிறார். அதை விளம்பர சவுகரியக்காரர் தங்கள் சவுகரியத்திற்குத் தக்கபடி மாற்றி விளம்பரப்படுத்தி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்.

மகாத்மா இவ்வாரம் “யங் இந்தியாவில்” சுயராஜ்யக் கட்சியார் மதுபானத்தை விலக்குவதற்கு முயற்சி செய்வதைத் தங்களுடைய வேலைத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டது பற்றி ஏழைகளின் நண்பர்கள் பாராட்ட வேண்டும் என்றும், குடியினால் கெடுதி ஏழைகளுக்குத்தான் அதிகமென்றும், ஆனால் இதை சுயராஜ்யக் கட்சியாரே செய்யவேண்டு மென்பதில்லை; இதர கட்சியாரும் செய்ய வேண்டியது என்றும் எழுதிவிட்டு ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் சாமர்த்தியமாய் மதுவிலக்கைப் பற்றி எழுதியிருக்கிறார் என்றும், மதுவிலக்கு விஷயம் ஜனங்களுக்கு ராஜீய விஷயத்தை உண்டுபண்ண ஒரு வழி என்றும் எழுதியிருக்கிறார். இவ்வளவும் மற்றொருவருடைய கட்டாயத்திற்காக எழுதப்பட்டதாகவே தோன்றுகிறதேயல்லாமல், தானாக எழுதினதாக அதில் ஒரு வரிகூடத் தென்படவில்லை. அப்படி இருக்குமானால் , இம்மாதிரி அவர் சொல்லுகிறார்; இவர் செய்கிறார்; அதற்குதவும்; இதற்குதவும் என்கிற வழ வழ எழுத்தே எழுதியிருக்கமாட்டார். அல்லாமலும், மதுபான விலக்கை சட்டசபையின் மூலம் நிறுத்தி விடலாம் என்கிற எண்ணமாவது மதுவிலக்குக்கு சட்டசபையில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணமாவது அதனிடத்தில் தொனிக்காதபடி ஜாக்கிரதையாகவே எழுதியிருக்கிறார். இவைகளில் மகாத்மாவுக்கு நம்பிக்கையிருக்குமானால், அவர் தன் பழைய கதையை எழுதப் புறப்படுவாரா?

மனிதன் ஓய்ந்து போய் மேலால் ஒன்றும் செய்ய முடியாதபோதுதான் உட்கார்ந்து பழைய கதை பேசுவது மற்றும் லார்ட் மார்லி போன்ற பெரிய ராஜீய தந்திரிகள் எல்லாம் தாங்கள் ஓய்ந்து போன பிறகுதான் தங்கள் தங்கள் பழைய கதையை எழுத ஆரம்பித்தார்கள். ஆதலால், நமது மகாத்மா அவர்கள், தான் செய்யவேண்டியது செய்தாய்விட்டது என்றும், இனி இவர்களிடத்தில் மேலாக ஒன்றும் செய்ய முடியாது என்றும் தீர்மானித்துக் கொண்டுதான் ஓய்வெடுத்ததாகச் சொல்லி தன் பழைய கதையை எழுதுகிறேன் என்று உட்கார்ந்து விட்டார்.

ஆனாலும், நமது நாட்டு பிராமணர்கள் இந்த நல்ல பேருடன் ஓய்வெடுக்க விடக்கூடாது; விட்டால் அவர் காலத்திற்குப் பிறகு அவருக்குப் பெருமை நிலைத்து விடும்; ஆதலால் அவர் இருக்கும் போதே அவர் பெருமையையும் உறுதியான எண்ணத்தையும் எப்படியாவது ஒழித்துவிட வேண்டும்; ஒரு பிராமணரல்லாத பெரியார் நம் நாட்டில் பூஜிக்கத்தகுந்தவர், புகழத்தகுந்தவர் என்று இருக்கக்கூடாது என்கிற கெட்ட எண்ணம் வைத்து, மகாத்மாவுக்கு இவர்கள் செய்த நன்றிக்கு கூலி வாங்குவது போல், நினைத்தபடியெல்லாம் அவரிடம் வேலை வாங்கி அவருடைய பரிசுத்த தன்மையை கெடுக்கப் பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதாலும் கடைசியாய் இந்தியாவில் கஷ்டப்படும் ஏழை மக்களான பிராமணரல்லாதார் இதை நம்பி ஏமாறுவதாலும், அவர்கள் தலையில்தான் போய் விழுகிறது! நமக்குப் புத்தி யில்லாவிட்டால் யார் என்ன செய்வார்கள்?

குடி அரசு கட்டுரை - 14.02.1926

 
Read 29 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.