நன்றி பாராட்டுதல். குடி அரசு தலையங்கம் - 07.02.1926

Rate this item
(0 votes)

உண்மைச் சகோதரர்களே!

“குடி அரசு” 34 -வது இதழ் (27-12-25) ஒன்பதாவது பக்கத்தில் “குடி அரசு”க்குப் புது ஆண்டு சன்மானம் என்பதாக ஒரு சிறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவ்வேண்டுகோளைச் சகோதரர்கள் மதித்துக் கனப்படுத்தியதற்கு அதாவது 1-1-26 - ந் தேதியிலிருந்து 31-1-26 - ந்தேதி முடிய ஜனவரி த்தில் 307 சந்தாதாரர்கள் வேண்டுகோளை உத்தேசித்துத் தாங்களாகவும், தங்கள் நண்பர்கள் மூலமாகவும் சந்தாதாரர்களாகச் சேர்ந்தும், இரண்டொருவர் சிறுதொகை உதவியும் கனப்படுத்தியதோடு கொழும்பு, மதுரை, திருச்சி, நாகை, கோவை முதலிய ஊர்களில் “குடி அரசி”ன் அபிமான ஏஜண்டுகள், தங்கள் சில்லரை விற்பனையை ஜனவரி மாதத்தில் ஒன்று இரண்டாய், மூன்றாய்ப் பெருக்கியும், “குடி அரசி”ன் முன்னேற்றத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டதற்கும் குடிஅரசின் சார்பாகவும், பிராமணரல்லாதார் பாமர மக்கள் - தீண்டப்படாத மக்கள் சார்பாகவும் நாம் நெஞ்சார நன்றி பாராட்டுகிறோம்.

“குடி அரசு” வாரம் இருமுறை - மும்முறை - தினப்பதிப்பு ஆகியவைகளாக மாறவேண்டும் என்பதாக ஆசைபட்டு, அதற்குற்ற வழிகளைச் சொன்னவர்களுக்கும் பலவிதங்களில் உதவி செய்வதாகச் சொன்னவர்களுக்கும், மற்றும் “குடி அரசி”னிடம் தங்களுக்குப் பூரண நம்பிக்கையிருப்பதாகச் சொல்லி நமக்கு ஊக்கமூட்டியவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். தவிர “குடி அரசை” வாரப் பதிப்பிலிருந்து இது சமயம் எவ்விதமாகவும் மாற்ற சக்தியற்றவராய் இருக்கிறோம். ஏனெனில்,

1. நமது “குடி அரசு” வியாபாரப் பத்திரிகையாயில்லாமல் பிரசாரப்பத்திரிகை என்பதை உத்தேசித்து குறைந்த சந்தா வைத்திருப்பதால் நஷ்டமடைய நேரிட்டிருப்பதோடு அதிக நஷ்டமடையவும் இதுசமயம் சௌகரியமில்லாதிருக்கிறது.

2. அன்றியும், அதன் பத்திராதிபரான ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் ஒவ்வொரு வாரமும் 2 அல்லது 3 நாள் பிரசாரத்திற்கு வெளியூர்களுக்குப் போக வேண்டியதாயுமிருக்கிறது.

3. கதர் வேலைக்கும் காலத்தைச் செலவிட வேண்டியிருக்கிறதோடு இன்னும் பல காரணங்களாலும் இது சமயம் மாற்ற முடியாமலிருப்பதற்கு மன்னிக்கவும்.

வேண்டுமானால் வேறு கனவான்கள் யாராவது ஏற்றுக்கொண்டு நடத்துவதாய் இருந்தால், அவர்களிடம் சர்வசுதந்திரத்துடன் “குடி அரசு” பத்திரிகையை ஒப்புக் கொடுத்துவிட்டு “குடி அரசு”க்கு ஊதியமில்லாத உதவியைச் செய்வதில் யாதொரு ஆக்ஷபனையும் இல்லை என்பதையும் உண்மையாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு தலையங்கம் - 07.02.1926

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.