கல்விக்கூடம். 9.3.1956

Rate this item
(0 votes)

 

இப்போதுள்ள கல்விக்கூடம் எதற்காக இருக்கிறது? மக்கள் அறிவு பெறவேண்டும், ஒழுக்கமுடையவர்களாக இருக்கவேண்டும், என்பதற்காக கல்வி கற்கவில்லை; கல்வித் திட்டமும் இவைகளைப் போதிப்பதாக இல்லை; அவர்கள் படிப்பதெல்லாம் பிழைப்பதற்கு, மண்வெட்டி எடுக்காமல் பேனா பிடித்தெழுதிச் சம்பாதிக்கும்படியான வழியைத் தேடுவதற்கேயாகும். இந்த வழியை அடையத் தாமதம் ஏற்படவே, பொதுவாழ்வில் புகுவதற்கு ஆரம்பிக்கின்றனர். அதில் இறங்கி அதன்மூலம் எப்படியாவது மேலே போய்விட முயற்சிக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைக் கல்வி கற்க வைப்பதன் காரணம், தன்பிள்ளை புத்திசாலி ஆகவேண்டும், அறிவாளியாக வேண்டும் என்று வெளியில் மட்டும் கூறுகிறார்களே தவிர, உம்நோக்கமெல்லாம் பையன் உத்தியோகத்திற்குப் போய்ச் சம்பாதித்தால் நம் வாழ்க்கையைக் கஷ்டமின்றிக் கழிக்கலாம் என்பதற்காகத்தான். பையன் படித்து முடித்தவுடன் உத்தியோகத்தில் அமர்ந்தால் அவன் தன் பகுத்தறிவுக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள முடியாது.

பாதிரி வேலையில் அமர்ந்தால் எப்பொழுதும் கடவுளின் பெருமையைப் பரப்புவதிலே இருக்கவேண்டும். போலீஸ்காரனாக அமர்ந்தால், அவன் சாத்வீகனாக இருந்தாலும், அதிலும் ஆத்திரத்துடன் தயவு, தாட்சண்யமின்றிப் பிறரைக் கண்டிப்பவனாக இருக்கவேண்டும் - அதைப் போன்றே, வேலையைப் பொறுத்து அவன் ஒழுக்கம் அமைகிறது. யோக்கியன் நாணயஸ்தனாக இருப்பவன் குறைந்த சம்பளம் வரும் உத்தியோகத்திற்கு வந்தால், அதைக் கொண்டு அவனுடைய குடும்ப ஜீவனம் நடப்பதற்கு வழிஇல்லை. ஆகவே, பகவான் இவ்வளவு கொடுத்தார் என்று சும்மா இருப்பானா? இவன் சும்மா இருந்தாலும் இவன் பெண் பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? அடிக்கடி ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பர். இவன் அத்தொல்லை பொறுக்காமல் முதலாளியிடம் போனஸ் கொடுக்கும்படி கேட்பான். அதிகச் சம்பளம் கொடுத்தால் நல்லதுதான் என்பான். இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்து அதுவும் போதவில்லையென்றால் எங்கே கிடைக்கிறதோ அங்கங்கே கைநீட்டி வாங்குவதற்கு ஆரம்பித்துவிடுகிறான். பிறகு அவன் வாழ்க்கை லஞ்சத்திலேயே கழிகிறது.

இந்த நாட்டில் யோக்கியன், நாணயஸ்தன் இருப்பதாகக் காண முடியவில்லை. படிப்பாளி என்று கூறப்படும் இத்தனைபேரும் அறிவாளி என்று கூறமுடியுமா? அவர்கள் எல்லாம் பெரிய உத்தியோகத்தில் அமர்ந்திருக்கலாம்; அதிகச் சம்பளம் வாங்கலாம்; கொழுத்த பணக்காரர்களாகவே இருக்கலாமேயன்றி அறிவில் சிறந்தவர்கள் என்று கூறமுடியுமா? எனவே, கல்வியென்பது மனிதனைப் பெரிய உத்தியோகஸ்தனாக்கவும், பணம் சம்பாதிக்க ஒரு வழியாகவும் மட்டும் தான் உள்ளது; ஆனால் அறிவாளியாக்கப் போதியதாக இல்லை. மனிதனுக்கு கல்வி அவன் அறிவாளியாகும் இலட்சியத்திற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

9.3.1956 அன்று திராவிட மாணவர் கழக சார்பில் அண்ணாமலை நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை

Read 51 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.