ஈழவர்களின் கோயிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி

Rate this item
(0 votes)

கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களில் சென்ற சில வருடங்களாக கவர்ன்மெண்டாரது பரிபாலனத்துக்கு உட்பட்டிருக்கும் ஆலயங்களுக்கும் சென்று தொழ தங்களுக்கு அநுமதியளிக்க வேண்டுமென்று ஈழவர்கள் கிளர்ச்சி செய்து வந்த விஷயத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. எனினும், இவர்களுக்குச் சொந்தமான கோயில்கள் கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்களிலிருந்தபோதிலும், இவர்கள் தங்களிலும் கீழ்ப்பட்டவர்களாகக் கருதப்படும் புலையர்களை அவற்றுள் அநுமதிக்கிறார்களா என்கிற சந்தேகம் பொதுஜனங்களுக்கு இருந்து வந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளுவதற்காக அவர்கள் தங்களுடைய எல்லா கோவில்களுக்குள்ளும் புலையர் முதலிய தாழ்ந்த ஜாதியார் என்போரை விட முயற்சி செய்து வருகின்றார்கள். அல்லாமலும் ஏற்கனவே சில கோயில்களுக்குள் புலையர்கள் செல்ல அநுமதி யளித்துவிட்டனர். மற்ற கோயில்களிலும் இதே மாதிரி புலையர்களை அநுமதிக்கும்படி வைதீக கோஷ்டியாரைத் தூண்ட சீர்திருத்தக் கோஷ்டியார் சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார்கள்

பல்லுருத்தி பவானீஸ்வர கோவிலுக்குத் தெற்கே, ஸ்ரீமான் கே. நாராணனுக்குச் சொந்தமான ஈழவக் கோயிலுக்குள் செல்ல புலையர்களுக்கு முதல் முதலாக அநுமதியளிக்கப்பட்டது. ஸ்ரீ நாராணகுருவின் பிரதம சீடரான சுவாமி போதானந்தர் தானே புலையர்களைக் கோயிலுக்குள் பிரதட்சணமாக அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கினார். சுவாமி சத்திய விரதன் என்பவரும் ஸ்ரீமான் கே. ஐயப்பனும் தங்களுக்கும், கீழ் நிலைமையிலுள்ளவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் போக்கிக் கொள்ளக்கூடிய அவசியத்தைப் பற்றிப் பேசுகையில் சமீபத்தில் பல்லுருத்தியில் புலையருடன் சமபந்தி போஜனம் செய்ததற்காக ஈழவர்களுக்கு ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்களைத் தாங்கள் போக்கி விட்டதாகவும் கூறினார்.

கும்ப மாதத்தில் தங்கள் தோட்டத்தில் பறிக்கும் எல்லா தேங்காய்களையும் இவ்வூரிலுள்ள (கொச்சி) ஈழவர்கள் பள்ளிக்கூடங்கட்கு செலவிற்கு நிதி சேர்ப்பதற்காக கொடுத்துவிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல் எட்டியிருக்கிறது.

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.