திராவிடர்கள் இந்துக்களா? குடிஅரசு கட்டுரை - 30-.10.-1943

Rate this item
(0 votes)

திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது முடிவாகும். இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகா நாட்டில் திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்ல என்றும், மக்கள் எண்ணிக்கையைக் கணக்கு எடுக்கும் சென்சஸ் ரிபோர்ட்டில் நாம் ஒவ்வொருவரும் திராவிடர் என்ற பெயர் கொடுக்க வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக்கிறோம். ஆனால் இத்தீர்மானத்தை அனேக ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் லட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. அரசியல் பதவிகளில் இருக்கிற லட்சியத்தில் பதினாறில் ஒரு பாகத்தைக்கூட நம்மவர்களில் அனேகர் சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கவேண்டிய பதவிகளைப் பற்றியோ தங்களது இழி நிலையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. இந்தக் காரணமே திராவிடர்களின் இழிநிலைக்கு முதன்மையானதாக இருந்து வருகிறது. எவ்வளவோ பெரும் படிப்பும், ஆராய்ச்சி அறிவும் மேல்நாட்டு நாகரிகமும் தாராளமாய்க் கொண்ட மக்கள் கூட தாங்கள் அனுபவித்து வரும் சமுதாய இழிவு விஷயத்தில் போதிய கவலைப்படாமலே இருந்துவருகிறார்கள். இவர்கள் சிறிது கவலை எடுத்துக் கொண்டி ருந்தாலும் மாபெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கும் என்பதோடு திராவிட நாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் இருந்து இந்து மதம் பறந்து ஓடி இருக்கும்.

இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, கடுகளவு அறிவு உள்ளவர்களும் உணரக்கூடிய காரியமேயாகும். இந்துமதம் என்பது திராவிடர் களை இழிவுபடுத்தி, கீழ்மைப் படுத்தி அவர்கள் முன்னேறுவதற்கு இல்லாமல் ஒடுக்கி வைத்திருக்கிறதற்கே ஏற்படுத்தப்பட்டது என்பதல்லாமல் - அதற்காகவே இந்து மதம் என்பதாக ஒரு போலி வார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்பதல்லாமல், மற்றபடி வேறு கொள்கையுடனோ குறிப்புகளுடனோ அது (இந்து மதம்) இருக்கவில்லை. உண்மையில் இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்பதற்கு ஆரியர்கள் சொல்லும் சொற்களே போதிய சான்றாகும். 1940 வருஷம் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி யில், சென்னைத் திருவல்லிக்கேணி மணி அய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மகாநாடு என்பதில் தலைமை வகித்த திவான் பகதூர் வி.பாஷியம் அய்யங்கார் அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

நாம் அனைவரும் ஆரிய மதத்தைச் சேர்ந்தவர்களாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் கிடையாது. இந்து என்கின்ற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததேயாகும். நாம் ஆரியர்கள். ஆரியப் பழக்கவழக்கத்தை அனுசரிக்கிறவர்கள் ஆரியர்களே யாவார்கள். கண்டவர்களை ஆரிய மதத்தில் சேர்த்துக் கொண்ட தானது ஆரிய மதத்தின் பலவீனமே யாகும் என்பதாகப் பேசி இருக்கிறார். இந்தப் பேச்சு 10-12-1940 இந்து, மெயில், சுதேசமித்திரன், தினமணி, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து இருப்பதோடு விடுதலையில் இதைப் பற்றி அதே தேதியில் தலையங்கமும் எழுதப்பட்டிருக்கிறது. மற்றும் திவான் பகதூர் பாஷியம் அய்யங்கார் அவர்கள் அதே பேச்சில் இந்து மதத்திற்கு ஆதாரம் வேதங்களேயாகும் வேதத்தை ஒப்புக் கொளளாதவர் இந்துவல்ல என்றும் பேசி இருக் கிறார். எனவே இந்து மதம் என்பதோ அல்லது ஆரியமதம் என்பதோ ஆரியர்களுடைய ஆரியர்களின் நன்மைக்கேற்ற கொள்கைகளைக் கொண்ட மதம் எனபதும், அது வேத மதம் என்பதும் இப்போதாவது திராவிடர்களுக்கு விளங்குகிறதா என்று கேட்கிறேன்.

அதோடு கூடவே சைவர்களையும், சைவப் பண்டிதர்களையும், தங்களைத் திராவிடர் (தமிழர்) என்று சொல்லிக் கொள்ளுபவர்களையும், திராவிடர்கள் வேறு ஆரியர்கள் வேறு ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என்பவர் களையும், தென்னாட்டுச் சிவனே போற்றி என்பவர் களையும், அய்யா நீங்கள் இனியும் இந்து மதத்தையும், வேதத்தையும், வேதசாரங்களான புராண இதி காசங்களையும், வேதக் கடவுள் களையும், வேத ஆகமங்களையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கின்றேன். பொது வாகத் தமிழ் மக்களையும், சிறப்பாகத் தங்களைப் பார்ப் பனரல்லாதார் என்றும்,ஆரியர் அல்லாதார் என்றும், சொல்லிக் கொள்ளுகிறவர்களையும் இனியும் தங்களை இந்துக்கள் என்றும் இந்து மதத்தைப், பின்பற்றுகிறவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஆரிய வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கலாமா என்றும் கேட் கின்றேன். ஒருவன் தனக்கு இந்து மதத்தைக் கைவிட தைரிய மில்லை ஆனால், தன்னை சூத் திரன் அல்ல என்றும், ஆரியன் அல்ல என்றும் எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?

மதத்தினாலும், இனத்தினாலும், நாட்டினாலும் ஆரியரில் இருந்து பிரிந்து இருக்கிற தமிழர்கள் தங்கள் நாட்டில் 100-க்கு 90 பேர்களாக அவ்வளவு கூடுதல் எண்ணிக்கை உள்ளவர் களாக இருந்து கொண்டு சகல துறைகளிலும் ஆரியர்கள் மேலாகவும், தமிழர்கள் தாழ்வாகவும், இழிமக்களாகவும் இருப்பது உலகத்தில் 8-ஆவது அதிசயமல்லவா என்று கேட்கிறேன். இதற்கு தமிழ்ப் பெரியார்கள், பண்டிதர்கள், கலைவாணர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முடிவாக நான் ஒன்று சொல்லுகிறேன். தமிழன் எவ்வளவு தூரம் இந்து மதத் தையும் இந்துமத கலை, ஆச்சாரம், கடவுள், கோவில், பண்டிகை, சடங்கு, வேஷம், குறி,உடை, நடை முதலியவைகளை வெறுத்துத் தள்ளுகிறானோ அவ்வளவு தூரம்தான் அவனுக்குச் சுயமரியாதையும் மனிதத் தன்மையும் வரப்போகிறது என்றும் அவ்வளவு தூரம்தான் அவன் உண் மையான தமிழனாய் இருக்க முடியும் என்றும் வலிமையாய் கூறுகிறேன்.

குடிஅரசு கட்டுரை - 30-.10.-1943

 
Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.