பிறப்புரிமை சுயராஜ்யமா? சுயமரியாதையா? குடி அரசு தலையங்கம் - 24.01.1926

Rate this item
(0 votes)

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமைச்செய்து வருவதின் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச்செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப்பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையை விட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும்.

நமது நாட்டில் சில வேஷக்காரர்கள் சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும், வாழ்க்கையை உத்தேசித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப்படாமல் காலங்கழிக்கப் பார்க்கின்றார்களேயல்லாமல், அதற்காகச் செய்ய வேண்டிய காரியங்களில் தங்களுக்குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டாலும் வேறு யாராவது செய்தாலும் தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமேயென்கிற பயத்தால் அதற்கு வேண்டிய முட்டுக் கட்டைகளைப் போட்டு தாங்களே முன்னணியிலிருக்க வேண்டிய மாதிரியில் ராஜீயவாதிகளென்னும் பேரால் வாழ்ந்து வருகின்றார்கள். நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா? சுயமரியாதையா?

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அநேகர், சுயராஜ்யம் இன்னதென்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்களல்ல. அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள். மகாத்மா காந்தி அவர்கள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம் ஓர் கூட்டத்தில் பேசும் போது, “என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால், நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமே இல்லை”யென்று சொல்லியிருக்கிறார். மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளுவதுதான் பிறப்புரிமையேயல்லாமல், அரசியலான ராஜீயமென்னும் சுயராஜ்யம் ஒருக்காலும் பிறப்புரிமை ஆகமாட்டாது.

ராஜீய பாரமானது ஒரு தொண்டு. வீதி கூட்டுவதும், விளக்கு போடுவதும், காவல் காப்பதும் எப்படி சேவையாயிருக்கின்றதோ, அதுபோலவே, ராஜீய பாரமென்பதும் ஒரு சேவைதான். தேசத்தில் அவனவனது வாழ்க்கைக்கும் அல்லது பொதுநன்மைக்கும் எப்படி பல தொழில்கள் இருக்கின்றனவோ, அதுபோல ராஜீய பாரமென்பதும் ஒரு தொழில்தான். இத்தொழிலை இன்னார்தான் செய்ய வேண்டுமென்றாவது, இன்னார்க்குத் தான் உரிமை என்றாவது “கடவுள்” யாருக்கும் பிரித்துக்கொடுக்கவே இல்லை. மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் ஊமை, கூன், குருடு, செவிடு உட்பட இதற்கு அருகர்கள்தான். ஆதலால், இவ்வுரிமையை எல்லோரும் சமமாய் அடைய வேண்டியதுதான். ஆனபோதிலும், மனித ஜென்மத்திற்கு இக்கேவல ஆட்சி பிறப்புரிமை என்று சொல்ல முடியாது. மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும் பரோபகார மென்பதுமேதான்.

சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்கு சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும் கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதை அற்றவனைப் பிணமென்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது நமது தேசத்தில் சுயமரியாதை அற்று பூச்சி புழுக்கள் போலும், நாய்கள் பன்றிகள் போலும், பிசாசுகள் அரக்கர்கள் போலும் வாழும் ஜனங்கள் கோடிக்கணக்காய் இருக்கின்றனர். லக்ஷக்கணக்காய் தினம் பிறக்கின்றனர். இச்சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு?

உதாரணமாக, மனித உடல் தாங்கிய ஒருவன் அவனுடைய தெய்வத்தைக் காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதையுள்ளவனாவான். அந்த சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யமிருந்தால்தான் அவர்களுக்கு கவலையென்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரை சுயமரியாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு ராட்சஸ சமூகத்தார் சுயராஜ்யமடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோ மானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாதபடியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்து இருப்பதற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா?

அந்நிய ராஜ்யம் நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவேயில்லை. எந்தக்காரணத்தைக் கொண்டோ அந்நிய ராஜீயபாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமலிருக்குமேயானால், இந்த சுயமரியாதை இன்னதென்று உணர்வதற்குக் கூட நமக்குச் சௌகரியம் கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமா யிருப்பது, நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத்தினாலேயல்லாமல், அந்நிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினாலல்ல. ஆனால், நமது நாட்டில் பெரும்பா லோர் சுயமரியாதை அற்றிருக்கும் தன்மை, அந்நிய அரசாங்கத்தாருக்கு அநுகூலமாயிருப்பதினால் இக்கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக்கவலையில்லை.

ஆனபோதிலும், அவர்களுடைய தத்துவம் ஒரு நாளும் இவ்வித சுயமரியாதைக்கேடுக்கு அநுகூலமாய் இருப்பதில்லை. ஒரு தேசம் சுதந்திரமடைய வேண்டும் என்ற உண்மையான கவலை இருக்குமானால், அக்கவலைக்கு அவர்கள் அருகர்களா? இல்லைய வென்பதை பரீக்ஷிக்க வேண்டுமானால், அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களா? இல்லையா வென்பதிலிருந்துதான் அவர்களுடைய அருகதை வெளிப்படும். அஃதில்லாமல் சுதந்திரத்திற்காக செய்யப்படும் எவ்வித முயற்சிகளும் தனிப்பட்டவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலத்திற்கும், சுயமரியாதை இல்லாத நிலைமையை பலப்படுத்தவும்தான் ஆகுமேயல்லாமல் வேறொன்றுக்கும் உதவாது. அதை உத்தேசித்தேதான் மகாத்மா காந்தியும், சுதந்திரம் பெறுவதற்காக ஏற்பட்ட திட்டங்களே சுயமரியாதை அடைவதற்கான திட்டங்களாகப் போட்டுவிட்டார்.

தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதும் கதர் அணிய வேண்டும் என்று சொல்லுவதும் நம் நாட்டு மக்களின் சுயமரியாதையின் ஜீவ நாடிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தெருவில் நடக்கவும், பக்கத்தில் வரவும், கண்ணில் தென்படவும், அவனது தெய்வத்தைக் கண்டு தரிசிக்கவும் முடியாமற்படி வைத்திருக்கிற வரையில் சுயமரியாதை இல்லையென்றும், அப்படிப்பட்டவனுக்கு சுதந்திரமென்பது ஒரு மனிதன் தன் உடலிற்போதிய சக்தியிருந்தாலும், ஜீவனத்துக்கு வேண்டிய அளவு தொழிலில்லாமல் வைத்திருப்பதானால், அவன் எவ்விதத்திலும் சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும், ஜீவனத்திற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கத்தான் நேரிடுமென்றும் கருதியே, பெரும்பான்மையான ஏழைகளுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும் வற்புறுத்தி வந்தார்.

மற்றவர்களை அடிமைப்படுத்தி வைப்பதினாலேயே வாழ முடியும் என்கிற நிலைமை யடைந்து நமது நாட்டில் உள்ள ஒரு சமூகத்தார், இத்திட்டத்தை அடியோடு ஒழிக்க பழையபடி தங்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்திக்கொள்ளத் தகுந்த மாதிரியில் ஜெயம் பெற்று வருகிறார்கள்.

இந்நிலைமையில் “சுதந்திரம்” “சுயராஜ்யம்” “உரிமை” என்கிற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும் கொடுமைக்கும் ஆதாரமானதுதான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடைய பாடுபட வேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக்காகத்தான் முதலில் பாடுபடவேண்டும்.

குடி அரசு தலையங்கம் - 24.01.1926

 
Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.