ஸ்ரீமான் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம். குடி அரசு கடிதம் - 17.01.1926

Rate this item
(0 votes)

ஐயா, தாங்கள் தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருப்பது பற்றி மிகவும் சந்தோஷமே. ஆனால், அதில் தாங்கள் இருந்து கொண்டு செய்கிற வேலைகள் ஒன்றும் புதிதாயாவது, முக்கியமானதாகவாவது தெரியவில்லை.

அதாவது, கக்கூஸ் ரிப்பேர் செய்வதும், வண்டியில் சிற்றுண்டி வழங்குவதும், வண்டியின் நேரங்களை மாற்றுவதுமான காரியங்கள் ஆகிய எதுவும் பொது ஜனங்களுக்கு விசேஷ நன்மை எதுவும் செய்துவிடாது. தங்கள் காலத்தில் ஏதாவது ஒரு நிரந்தரமான நன்மை செய்ததாயிருக்க வேண்டுமானால் - பெரும்பான்மையான ஜனங்களின் உணர்ச்சிகளைத் தாங்கள் மதித்தவர்களாயிருக்க வேண்டுமானால் - ஒரு காரியம் செய்தால் போதும். அதைச்செய்துவிட்டு தங்கள் வேலையை ராஜீநாமா செய்துவிட்டாலும் சரி அல்லது அந்தப்படி செய்ய தாங்கள் பிரயத்தனப்பட்டு முடியாமல் போனால், தாங்கள் ராஜீநாமா கொடுத்துவிட்டு வந்துவிட்டாலும் சரி.

அதாவது, தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல் வகையறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளை வாங்கி ஓட்டல் வைத்திருக்கும் பிராமணர்கள் சரிபகுதி இடத்தை ஒதுக்கி பிராமணர்களுக்கு மாத்திரம் என்று போர்டு போட்டு விட்டு, மற்ற பகுதியில் எச்சிலை போடவும், கை கழுவவும் இடம் செய்வதோடு, அந்த இடம் பிராமணரல்லாதாருக்கு என்றும், சில இடங்களில் சூத்திரர்களுக்கு என்றும் போர்டு போட்டுவிடுகிறார்கள். இது நியாயமா? 100-க்கு 3 1/2 பேர் உள்ள பிராமணர் களுக்கு பாதி இடம் 100-க்கு 96 1/2 பேர் உள்ள பல வகுப்பாரடங்கிய பிராமண ரல்லாதாருக்கு பாதி இடம் என்றாய்ப் பிரிப்பது ஒழுங்கானதாகுமா? எதற்காக பொது ஸ்தலத்தில் ஒரு வகுப்பாருக்கு மாத்திரம், அதுவும் 100-ல் 3 1/2 பேருக்கு தனி இடம் ஏற்படுத்த வேண்டும்?

வெள்ளைக்காரர் தமக்கு மாத்திரம் தனி வண்டி ஏற்படுத்திக்கொள்வதற்கு நாம் எவ்வளவு ஆக்ஷபணை செய்கி றோம். அல்லாமலும் அது நமக்கு எவ்வளவு அவமானமாயிருக்கிறது. அப்படியிருக்க இது ஏன் தங்களுக்குத் தோன்றுவதில்லை? பிராமணர்கள் தனியாய்ச் சாப்பிடுவதால் நமக்குக் கவலையில்லை. அந்தப்படி அவர்கள் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதும், அதற்காக பிராமணருக்கு மாத்திரம் என்று போர்டு போடுவதும் எதை உத்தேசித்து? நம்மை தாழ்ந்த ஜாதியார் என்று எண்ணியல்லவா? இது நமது ஜாதி இழிவைக் குறிக்கும் ஒரு நிரந்தரமான அடையாளமும் ஆதாரமுமல்லவா? இவ்வித பிரிவினைகளும் போர்டுகளும் இருப்பது சுயமரியாதை உள்ள ஒருவன் இம்மாதிரியான போர்டுகளைப் பார்க்கிறபோது அவனுடைய இரத்தம் துடிக்குமா? துடிக்காதா? மனம் பதறுமா? பதறாதா? இதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆதலால், தயவு செய்து அடுத்த ஆலோசனை சபைக்கூட்டத்தில் இதைப் பற்றி ஒரு பிரேரேபனை கொண்டு போக வேணுமாய்க் கோருகிறேன். அதாவது:-

“தென்இந்திய ரெயில்வே ஸ்டேஷன்களில் உள்ள ஒவ்வொரு போஜன சாலைகளிலும் பிராமணர்க்கு மட்டும் என்றும், பிராமணரல்லாதாருக்கு என்றும் இடங்களை பாகுபடுத்தி போர்டு போடுவது, பிராமணரல்லாதார் பிறவியிலேயே தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்கு ஏற்பட்ட அறிகுறிபோல் இருப்பதோடு பிராமணரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாய் இருப்பதாலும் அதைப்பார்க்கும் போதெல்லாம் பிராமணரல்லாதார் மனம் புண்படுவதாலும் இந்த பாகுபாட்டை ஒழித்து சமமாய் நடத்தும்படி ஏற்பாடு செய்யவேண்டும்.”

- சித்திரபுத்திரன்

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது)

குடி அரசு கடிதம் - 17.01.1926 

 
Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.