செத்த பாம்பாட்டம். குடி அரசு துணைத் தலையங்கம் - 10.01.1926

Rate this item
(0 votes)

தேசீய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும், தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள பிராமணப்பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக்கொண்டு வந்திருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள பிராமணரல்லாதார் பத்திரிகைகளும், பிராமணரல்லாதார் தலைவர்களும் எவ்வளவோ உதவி செய்ததின் பலனாய் முடிவில் வெற்றி கிடைத்ததோடு தமிழ் நாட்டிற்கே ஓர் புதிய உணர்ச்சியையும் உண்டாக்கி வைத்து சேரன்மாதேவி குருகுலமும் கலைந்து போய்விட்டது என்பது உலகமே அறியும். அப்படியிருக்க, செத்த பாம்பை எடுத்து ஆட்டுவது போல் குருகுலத்தால் வயிறு வளர்த்த சில பிராமணர்கள், குறிப்பாய் ஸ்ரீமான் தி.ரா. மகாதேவய்யர் கொஞ்ச காலத்திற்கு முன்பு பத்திரிகைகளுக்கு ஒரு விளம் பரம் அனுப்பியிருக்கிறார். அதில் குருகுலம் ஒழுங்காய் நடந்து வருகிற பாவனையாகவும், தானே அதில் ஆச்சாரியாராய் இருக்கிறது போலும், சுயராஜ்யக்கட்சியாரின் தேசீயத் திட்டம் போல கல்விக்கு ஏதோ பல திட்டங்கள் வைத்திருப்பதுபோலும், பாசாங்கு செய்து பிள்ளைகளை அனுப்பும்படி பெற்றோர்களைக் கேட்கிறார். பிராமணரல்லாத பெற்றோர்கள் இம்மோச விளம்பரத்தை நம்பி தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொடுத்து ஏமாந்து போகாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

குருகுலம் அங்கு நன்றாய் நடந்து கொண்டிருப்பதாய், ஸ்ரீமான் வ.வெ.சு. ஐயர் சொல்லிக்கொண்ட காலத்திலேயே நாம் அங்கு போயிருந்த சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் நடத்தப்படும் முறையையும் பார்த்தோம். ஸ்ரீமான். மகாதேவய்யர் என்று சொல்லப்படுகிறவரும், அவர் குழந்தைகளும் கூனி முறை என்பதாகப்பேர் வைத்துக்கொண்டு தாங்கள் பழங்களும், தேங்காயும், வெல்லமும், கரும்பும், மாம்பழமும், முந்திரிகைப் பருப்பும், பேரீச்சம்பழமும், சாரப்பருப்பும் போன்றவைகளைச் சாப்பிட்டுக்கொண்டு ஆஸ்ரமத்தில் படிக்க வந்த மற்ற பிள்ளைகளுக்கு பிள்ளை ஒன்றுக்கு ஒன்றுக்கு ரூ.13 வரையிலும் பெற்றுக்கொண்டு மாதம் ஒன்றுக்கு 4 ரூபாய் கூடப் பெறாத மாதிரியில் கஞ்சி சாதமும், அரிசிக் களியும், உப்பு காரமில்லாத அரிசி உப்புமாவும், புளியில்லாத குழம்பும் இம்மாதிரி பதார்த்தங்கள், ஜெயிலைவிட மோசமான கவலையற்ற நிலையில் பக்குவஞ்செய்து போட்டுக்கொண்டு இருந்ததை நாமும் நம்முடன் வந்த மற்றும் சில நண்பர்களும் நேரிலேயே பார்த்தோம்.

ஆதலால், சுயராஜ்யம் என்கிற பெயரினால், ஜனங்கள் ஏமாந்து போய் அதற்குள்ளிருக்கும் தந்திரங்களை அறியாமல் சுயராஜ்யக்கட்சிக்குள் விழுவது போல் குருகுலம், ஆசிரமம் என்கிற பெயர்களினால், பெற்றோர்கள் ஏமாந்துபோய் அதன் ரகசியத்தை அறியாமல் தங்கள் பிள்ளைகளை அநுப்பி பலிகொடுக்காதிருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

பொது ஜனங்களின் நன்மையை உத்தேசித்து மனதார அறிந்ததையும், நேரில் பார்த்ததையும்தான் இங்கு எழுதியிருக்கிறோமே தவிர, மற்றபடி வேறு எந்தக் காரணத்தையும் உத்தேசித்தல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 10.01.1926

 
Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.