பூணூலும் வேண்டும், ஜாதியும் ஒழிய வேண்டும் என்பது ஏய்க்கும் வித்தையே! விடுதலை-17.1.1956

Rate this item
(0 votes)

வைதீகத் திருமணங்கள் மூலம் பார்ப்பனர்கள் ஜாதி வேறுபாடுகளை நிலை நாட்ட ஒரு பிரசார முறையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சடங்கு முறைகள் என்பவை ஜாதிகளை நிலை நாட்டவே ஏற்பட்டனவாகும். அவரவர்கள் நான் இன்ன ஜாதி, என்னுடைய குல ஆசாரம் இப்படித்தான் என்று ஒரு பெருமையாகக்கூடப் பேசிக் கொண்டு ஒவ்வொரு முறையைக் கையாளுகின்றனர். இதன் மூலம் அவரவர்கள் அடிக்கடி தன் ஜாதியை நினைவூட்டி அதை மறந்துவிடாமல் உரிமை கொண்டாடி நிலைத்திருக்கச் செய்யும் வழியேயாகும்.

மேலும், இன்றைக்கு நடைபெறும் திருமணம் கலப்புத் திருமணம் என்ற பேரால் நடைபெறுகிறது. ஆனால், இதுவரை இதுபோன்ற கலப்புத் திருமண முறைகளுக்குப் பெரும் எதிர்ப்புகள் இருந்து வந்தன. இப்போது சாதாரணமாக எங்கிலும் இம்முறை நடைபெறுவதற்கு ஆரம்பித்துவிட்டன. ஆனால், இனிமேல் உண்மையில் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டுமானால், பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். ஜாதிகளுக்குள் மிக உன்னதஜாதி என்றும், கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து உள்ள ஜாதி என்றும் கூறப்படும் பார்ப்பனர் ஜாதிதான் தலைதூக்கி நிற்கிறது. அதற்கும் பார்ப்பனர் அல்லாத ஜாதிக்கும்தான் அதிக வேற்றுமை கூறப்படுகிறது. இதையன்றி பார்ப்பனர் அல்லாத சூத்திரஜாதி என்று கூறப்படுகிற ஜாதிதான் சமுதாயத்தில் மிகவும் கீழானது என்றும், சமுதாயத்தில் கடை ஜாதி என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த வேற்றுமை ஒழிய வேண்டும். இவ்விரண்டு ஜாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத்தான் கலப்புத் திருமணம் என்று கூறலாம்.

இப்போதுகூட மந்திரிகளும் அரசாங்கத் தலைவர்களும் ஜாதியைப் பற்றிக் கண்டித்துப் பேசி வருகிறார்கள். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் கூறுவதைச் செய்கையில் நடத்திக் காண்பிக்கப் போதிய திறன் இல்லாவிடினும் நாம் கூறுகிறதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளும் அளவுக்கு வந்துள்ளார்கள். மேலும், அவர்கள் கூறுவதை நம்புவதற்கும் முடியவில்லை. ஏனெனில் தேர்தல் நெருங்குதற்கு ஆரம்பிக்கவும், தேர்தலில் மக்களை வசப்படுத்தும் வழியில் ஈடுபட தந்திரமாகலாம். இதுவும் தேர்தல் பிரசார முறைகளில் ஒன்று என்றுதான் கருத வேண்டியதாக இருக்கிறது.

ஏனெனில், அவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற உண்மை நோக்கத்துடன் கூறுவார்களானால் மதம், சாஸ்திர, புராணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். கடவுள்களை அழிக்க வேண்டும். கோயில்களை இடிக்கவேண்டும். ஆனால், இவர்களோ சாஸ்திர புராணங்களையும், கோயில்களையும், கடவுள்களையும் வைத்துக் கொண்டு எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?

எவற்றின் பேரால் ஜாதி உண்டாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனவோ அந்த மூலகாரணத்தை அழிக்காமல் அவற்றை வைத்துக் கொண்டு, ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் மட்டும் சொல்லிவிட்டால், ஜாதி ஒழிந்துவிடுமா? எனவே, அப்படிக் கூறுகிற வார்த்தை வீண் வாய் ஜால ஏமாற்று வித்தைக்கான வார்த்தைகள் என்றுதான் கருத வேண்டும்.

ஆனால், நாங்களோ ஜாதியை ஏற்படுத்திய மதம் ஒழிய வேண்டும். மதத்தை நிலைநாட்டும் கடவுள்கள், சாஸ்திர, புராணங்கள் ஒழிய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். ஆகவே, ஜாதி மட்டுமல்ல, அதன் அடிப்படைகள் அத்தனையும் அழிக்கப் படவேண்டும். அடியுடன் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும். குப்பையில் போட்டு கொளுத்தப்பட வேண்டும். மூலைக்கு மூலை போட்டு உடைத்துத் தூளாக்கப்பட வேண்டும் - என்று முயற்சித்து வருகிறோம்.


9.1.1956 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை -

விடுதலை, 18.1.1956

 


இன்றைக்கு மந்திரிகள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதுவரை ஜாதியைப் பற்றிக் கவலைப்படா தவர்கள் எல்லாம் இப்போதுதான் ஜாதியின் கொடுமைகளைத் தெரிந்திருக்கிறார்கள். இவர்கள் கூறுவதில் எவ்வளவு உண்மையாக இருக்கிறார்கள் என்று பார்த்தோமானால் மிகக் கேவலம்.

ஏனெனில் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு மக்களை வசப்படுத்தப் பாடுகின்ற பாட்டு என்று தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் நேரு ஜாதி ஒழியவேண்டும் என்கிறார். ராஜேந்திரப் பிரசாத்தும் ஜாதி ஒழிய வேண்டும் என்கிறார். ஆச்சாரியாரும் சாடையாக ஜாதியை எதிர்க்கிறார். இவர்கள் எல்லாம் உண்மையில் எதிர்ப்பவர்களா? இவர்களிடம் ஜாதி வேறுபாட்டை வைத்துக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்றால், அது பெரும் பித்தலாட்டம் என்றுதானே நினைக்க வேண்டியதாக இருக்கிறது. தன் நெற்றியிலேயே பார்ப்பனன் என்று எழுதி ஒட்டிக் கொண்டு, ஜாதி ஒழிய வேண்டும் என்றால், எவ்வளவு முட்டாள்தனமோ அப்படித்தான் இருக்கிறது.

இவர்கள் எல்லாம் முதலில் தங்களிடமுள்ள பூணூலை அறுத்து எறிந்துவிட்டு, ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், ஒருவாறு உண்மையான சொல் என்று கூறலாம். பூணூலையும் அணிந்து கொண்டு, பூணூலும் வேண்டும், ஜாதியும் ஒழிய வேண்டும் என்றால், ஏய்க்கும் வித்தை என்றுதானே கொள்ள வேண்டும்? இவர்களைப் பூணூல் எதற்கு என்று கேட்டால் ஜாதியைக் குறிப்பிடுவதற்கு என்று கூறாமல் வேறு என்ன கூறுவார்கள்? அரிப்பு எடுத்த பொழுது முதுகைச் சொறிந்து கொள்ள இருக்கிறது என்றா கூறுவார்கள்? மேலும் கோயில்களும் சாமிகளும் எதற்கு? சாஸ்திரங்களும் புராணங்களும் எதற்கு? இவை ஜாதியை நிலைநாட்டத்தானே இருக்கின்றன?

எனவே, இவர்கள் எல்லாம் உண்மையில் ஜாதி ஒழிய வேண்டும் என்று விரும்புவார்களானால், கோயில்களை இடிக்கவும், கடவுள்களைப் போட்டு உடைக்கவும், சாஸ்திர புராணங்களைப் போட்டுக் கொளுத்தவும் இவர்கள் முற்படவேண்டும். ஆனால், இவற்றையும் வைத்துக் கொண்டு கூறுகின்ற வார்த்தைகள் ஏமாற்றும் வித்தைதானேயன்றி வேறில்லை.

8.1.1956 இல் மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -

விடுதலை-17.1.1956

 
Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.