ஸ்ரீமான் சு. வீரய்யன் கிராமப் பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம். குடி அரசு பத்திராதிபர் குறிப்பு - 10.01.1926

Rate this item
(0 votes)

தீண்டாதார் வகுப்புப் பிரதிநிதியாய் சர்க்காரால் நியமிக்கப்பட்ட சட்டசபை மெம்பரான ஸ்ரீமான் ஆர்.வீரய்யன் அவர்கள் சென்னை கிராமப பஞ்சாயத்து சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்போவதாக சட்டசபைக்கு ஒரு முன்னறிக்கை அனுப்பியிருக்கிறார். அதாவது, அச்சட்டத்தின் ஒரு பாகத்தில் கிராமப்பஞ்சாயத்து மெம்பர்கள் ஸ்தானத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பாரிலிருந்து சில பிரதிநிதிகளை சர்க்கார் நியமிக்க வேண்டும் என்கிற வாக்கியத்தைச் சேர்த்துக்கொள்ளும்படி அதில் எழுதியிருக்கிறார்.

அதற்கு அவர் காரணம் சொல்லுகையில் தேர்தல்கள் மூலமாக தீண்டாதார் என்போர்கள் ஸ்தானம் பெறமுடியாமலிருக்கிறபடியால் முனிசிபாலிட்டி, ஜில்லா, தாலூகா போர்டுகள் போல் கிராமப் பஞ்சாயத்து சபைக்கும் தீண்டாதாருக்கும் சர்க்கார் நியமனம் கிடைத்தால் அல்லாமல் ஸ்தானம் பெறமுடியாதாதலால் சட்டத்தில் இவ்வித திருத்தம் இருக்க வேண்டியது உடன் அவசியமாகிறது என்று எழுதுகிறார்.

நமது குறிப்பு:-

இவற்றை நாம் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். புருஷன் பெண் ஜாதியாய் வாழுகின்றவர்களே புருஷன் சரியானபடி பெண் ஜாதியை ஆதரிக்காவிட்டால் சர்க்காருக்கு போவதையும், தகப்பன் பிள்ளை சர்க்காருக்கு போவதையும், அண்ணன் தம்பி சர்க்காருக்கு போவதையும் நாம் தினம் அனுபவத்தில் பார்க்கிறோம்.

அதற்காக வேண்டித்தான் , மனிதர்களுக்கு சர்க்கார் என்பது கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது. நமது துர்அதிர்ஷ்டவசமாய் தற்காலம் நமக்கு இருக்கும் சர்க்கார் நமது நன்மைகளைவிட தங்கள் நன்மையே பிரதானமாகக் கருதுகிற ஒரு வியாபாரக் கூட்டத்தாராய் போய்விட்டபடியால், தொட்டதற்கெல்லாம் இம்மாதிரி சர்க்காரிடம் போகலாமா என்கிற ஒரு ஞானம் சிற்சில சமயங்களில் தோன்றுகிறது. ஆனாலும் மகாத்மாவே இனி கொஞ்ச காலத்திற்கு தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அலுத்துப்போன பிறகு தற்கால நிலைமையில் ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும், பலக் குறைவுள்ளவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சர்க்கார் தவிர வேறு கதி என்ன இருக்கிறது?

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் போன்றவர்களுக்கு தற்சமயம் சர்க்கார் தயவுவேண்டியதில்லை. ஏனென்றால் கொஞ்ச நாளைக்கு முன்பாக சர்க்காருக்கு அனுகூலமாய் இருந்து, மகாத்மா காந்தியைக் கூட ஜெயிலுக்கு பிடிக்கும்படி யோசனை சொல்லி, சர்க்கார் தயவு பெற்று உயர் பதவியும், உத்தியோகமும், பணமும், ஆள்களும் நிறைய சம்பாதித்துக் கொண்டாய்விட்டது. தங்கள் பதவி குறையாமல் இருப்பதற்கு அநுகூலமாய், தீண்டாதார் முன்னேற்றமடைய கேள்க்கும் வகுப்புவாரி உரிமையை எதிர்க்க ஸ்ரீமான் ஜயவேலு போன்றவர்களையும், கிருஸ்தவர்கள் வகுப்புவாரி உரிமைக் கேட்பதை எதிர்க்க ஸ்ரீமான் குழந்தை போன்றவர் களையும், மகமதியர் வகுப்புவாரி உரிமைகள் கேட்பதை எதிர்க்க ஜனாப்கள் ஷாபி மகமது, அமீத்கான் போன்றவர்களையும், பிராமணரல்லாத இந்துக்கள் வகுப்புவாரி உரிமைக் கேட்பதை எதிர்க்க ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களையும் அடைந்திருப்பதால் அவருக்குக் கவலையில்லை. ஆனாலும், இந்நான்கு வகுப்பார்கள் தங்கள் தங்கள் வகுப்புக்கென்று கூட்டும் வகுப்பு மகாநாடுகளில் தங்கள் சுதந்திரங்களைக் காக்க சர்க்கார் தயவைத்தான் நாடுகிறார்கள்.

தீண்டாதார் வகுப்பு மகாநாட்டிலும், மகமதியர்கள் மகாநாட்டிலும், மற்றும் பிராமணரல்லாதார் மகாநாட்டிலும் உரிமை தனித் தேர்தல் மூலமானாலும், ஒதுக்கி வைப்பதன் மூலமானாலும் பெறவேண்டுமென்று கேட்பதெல்லாம் சர்க்காரிடம்தானே ஒழிய வேறு ஒருவரையுமல்ல. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும், வேண்டாம் என்பதும் அந்தந்த வகுப்பு மகாநாடுகளுக்குத்தான் பாத்தியப்பட்டதே தவிர, ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரால் சுவாதீனப்படுத்திக்கொண்ட தனிப்பட்ட ஒரு சிலர்களுக்கு அல்ல. ஆதலால், ஸ்ரீமான் வீரய்யன் கேட்கும் உரிமை மிகவும் நியாயமானதென்றும், அதுதான் அவ்வகுப்பாரின் அபிப்ராயமே தவிர காங்கிரஸிலிருக்கும் ஸ்ரீமான் ஜயவேலு போன்றவர்கள் அபிப்ராயம் அவ்வகுப்பார் உடையது அல்லவென்றும், ஆதலால் சட்டசபையில் இருக்கும் பிராமணரல்லாதார் யாவரும் இதை ஆதரித்து அவ் வகுப்புக்குண்டான நியாயமான உரிமையை அளிக்க தாங்கள் தயாராயிருப்பதாகவும் தெரிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். இம்மாதிரி நாம் ஒவ்வொரு வகுப்பாரின் உரிமைகளையும் அவர்களுக்கு அளித்து எல்லோரும் சமம் என்கிற தத்துவத்தை முதலில் நிலைநிறுத்திவிட்டோமானால், நமது சர்க்கார் கூட தமது வியாபாரத்தந்திரத்தை விட்டு விட்டு யோக்கியமாய் நடந்து கொண்டாலொழிய இந்தியாவில் வாழ முடியாது என்று நினைக்கும்படியான நிலைமையை ஏற்படுத்தி விடலாம்.

குடி அரசு பத்திராதிபர் குறிப்பு - 10.01.1926

 
Read 23 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.