கோவை ஜில்லா செங்குந்தர் மகாநாடு. குடி அரசு சொற்பொழிவு - 10.01.1926

Rate this item
(0 votes)

நமது நாட்டில் செங்குந்தர் குலமானது தக்க பெருமையுடனும், செல்வாக்குடனும் இருந்து வருகிறது. ஆனாலும், அதில் பெண்களை கோவில்களின் பேரால் பொட்டுக்கட்டி தாசி வேசித்தொழில் செய்ய அநுமதிப்பதால் அக்குலத்திற்கு ஒரு இழிவு இருக்கிறது என்பது மறைக்க முடியாத காரியமானாலும், இச்சங்கம் ஏற்பட்ட சென்ற 10 வருஷங்களுக் குள்ளாக எவ்வளவோ சீர்திருத்தமடைந்துவிட்டது. இவ்வளவு தூரம் முன் னேற்றமடையும்படியான காரியம் வேறு எந்த குல சங்கமும் செய்யவேயில்லை. இக்குல முன்னேற்றத்திற்கு இச்சங்கத்தின் மூலமாய் பல குலாபிமானிகள் உண்மையில் பாடுபட்டதனால்தான் இந்த யோக்கியதைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இது மாத்திரம் போதாது. இக் குலத்தின் சில ஆண்களிடமும் உள்ள சில குறைவுகளையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

 அதாவது, நமது நாட்டில் இக்குலத்தாரில் சிலர் மேளம் வாசிக்கும் தொழிலை ஜீவனமாய்க் கொண்டிருப்பதால் ஒரு குறைவான பெயர் இருந்து வருகிறது. இத்தொழில் காரணமாகவே ஆண்கள் சுயமரியாதையைக் கவனிக்காமல் தங்களுக்குள்ளாகவே சிலர் தங்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதிக கொண்டு மிகவும் ஒடுங்கியும் பதுங்கியும் நடந்து கொள்கிறார்கள் என்றும், மணி ஒன்றுக்கு 100 ரூ. பெறக்கூடிய நாகசுர வித்துவானும் சபைகளில் சங்கீத ஞானமே இல்லாத ஒரு தற்குறியைக் கண்டாலும் அனுமார் போல் ஒடுங்குவதும் கும்பிடுவதும் தனது குலதர்மம் என்று எண்ணுகிறார் என்றும், தேவக் கோட்டையில் ஒரு ஊர்வலத்தில் 350 ரூ. பேசி நாகசுரம் வாசிக்க வந்த ஒரு நாகசுரக்காரர் வேர்வையைத் துடைக்க தனது தோளின் மேல் ஒரு சிறு துணியை போட்டுக்கொண்டு வாசித்ததில், அந்த மேல் துணியை எடுக்காமல் வாசிக்கக் கூடாது என்று அவ்வூரில் சிலர் சொன் னார்கள் என்றும், சங்கீதம் கேழ்க்க 350 ரூபாயும் 2-வது வகுப்பு படியும் கொடுத்த ஒரு வித்துவானை தோளில் துண்டு போட்டுக்கொண்டுகூட வாசிக்கக் கூடாது என்று சொல்லும்போது நமது பிரபுக்கள் சங்கீதத்தை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பது தெரிகிறதென்றும், ஆதலால் அத்தொழிலை விட்டுவிட வேண்டுமென்றும், சங்கீதத்திற்கு யோக்கியதை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும், நமது ஜனங்களுக்கு இன்னமும் பகுத்தறிவு கிடையாது என்றும், உதாரணமாக ஒரு பிராமணன் ஒத்து ஊதினாலும், ஒரு தாசிக்கு பின்னின்று கொண்டு ஆர்மோனியம் மீட்டினாலும், நட்டுவாங்கம் செய்தாலும், அத்தாசிக்கு ஒரு நாயகனைப் பிடித்து கொடுப்பதற்கு தூது நடந்தாலும் அவனைப் பார்த்து சுவாமி என்றுதான் கூப்பிடுகிறார்கள்.

தூதுக் கடிதம் வாங்கும் போதே எழுந்து நின்றுதான் வாங்குகிறார்கள் என்றும், ஆதலால் இவ்வறியாமை நிலைமையிலுள்ள ஜனங்கள் முன்னிலையில் வித்துவானாயிருந்து மேளக்காரன் என்கிற பெயர் வாங்குவதைவிட வீதியில் கல் உடைத்தோ, தெருக் கூட்டியோ முதலியாராய் வாழ்வது மேலென்றும், அல்லாமலும் சுபாவத்திலேயே நமக்கு ஆண்மைத்தனம் வேண்டுமென்றும், அனாவசியமாய் நாம் தாழ்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டு ஒருவரைக் கும்பிடக்கூடாது என்றும், பிராமணர்கள் முதலியவர்கள் நமக்கு மேலான ஜாதி என்று எண்ணுவதே பெரிய நரகமென்றும், பிராமணனுக்குப் பணம் கொடுப்பதால் நமது பாவம் போய்விடுமென்பதும், பிராமணனுக்குப் பணம் கொடுப்பதால் தமது பெற்றோர்கள் மோக்ஷத்திற்குப் போவார்களென்பதும் அவர்கள் படுக்கை விரித்தால்தான் நல்ல சந்தானம் உண்டாகுமென்பதுமாகிய எண்ணங்கள்தான் நமது சுயமரியாதையைக் கெடுத்துவிடுகிறதென்றும், அதோடு நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம் என்றும், நமக்குக் கீழ் ஒருவரில்லை என்று உண்மையாய் நினைப்போமானால் நமக்கு மேலாக ஒருவன் இருக்கவேமாட்டான் என்றும், நாம் அவற்றைக் கவனியாமல் நமக்கு உதவி செய்பவர்களையும், பல வழிகளிலும் நன்மை செய்கிறவர்களையும், நம்மை பரிசுத்தமான காற்றை சுவாசிக்கும்படி செய்பவர்களையும், சாதுக்களையும் நமக்குக் கீழானவர்கள் என்று எண்ணின குற்றத்தின் கருமபலன் தத்துவத்தில் நம்மைவிட ஒரு விதத்திலும் மேலான யோக்கியரல்லாதவர்களும், கீழ் மக்களும் நமது இரத்தத்தை உறிஞ்சியே ஜீவனம் செய்ய வேண்டியவர்களும், நமக்கு மேலான ஜாதியாரென்றும் அவர்களை வணங்க வேண்டியது நமது மோக்ஷ சாதனமென்றும் நினைக்கும்படி செய்துவிட்டது. இக்குறைகள் நீங்கின நிலைதான் சமத்துவமென்பதும், சமூக முன்னேற்றமென்பதும் என்பதாக நான் நினைக்கிறேன்.


குறிப்பு : 27, 28.12.1925 இருநாள் அவிநாசியில் நடைபெற்ற கோவை மாவட்ட செங்குந்தர் மாநாட்டில் சொற்பொழிவு.


குடி அரசு சொற்பொழிவு - 10.01.1926

 
Read 42 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.