பிராமணரல்லாதார் காங்கிரஸ். குடி அரசு துணைத் தலையங்கம் - 03.01.1926

Rate this item
(0 votes)

சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணரல்லாதார் இயக்கம், தமிழ்நாட்டுப் பிராமணர்களால் சென்சார் வைத்து, வெளி மாகாணங்களுக்குப் போகாமலிருக்கும்படி தடுத்து வந்த பலத்த சூட்சிகளையும் தாண்டிக்கொண்டு இப்போது இந்தியா முழுவதுமே பரவி வருகிறது. அகில இந்தியா பிராமணரல்லாத காங்கிரசுக்கு இது இரண்டாவது வருஷம்.

தேசீயக் காங்கிரஸ் ஆதியில் கூட்டப்பட்ட காலத்தில் அதற்கு இந்தியா முழுவதுக்குமாக 75 பேர்கள்தான் பிரதிநிதிகளாக வந்திருந்தார்கள். அது நாளுக்கு நாள் அடைய வேண்டிய வளர்ச்சியை அடைந்து மகாத்மா காலத்தில் 5000-கணக்கான பிரதிநிதிகளை அடைந்து, எவ்வளவு மேல் போகவேண்டுமோ அவ்வளவும் போய் இப்போது இறங்கு முகத்தில் இருக்கிறது.

இது இவ்விதமிருக்க, இந்தியா முழுவதுக்குமே பிராமணரல்லாதார் மகாநாடு ஆரம்பித்து இரண்டு வருஷம்தான் ஆகிறது. ஆரம்ப முதல் வருஷத்தில், ஆதி தேசீயக் காங்கிரஸ் போல் பத்துக்கணக்காய் பிரதிநிதிகள் இல்லாமல், நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பெல்காமில் கூடினார்கள். இரண்டாம் வருஷத்தில் அம்ரோடி என்னும் அமராவதியில் 5000 பிரதிநிதிகள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். பதினாயிரக்கணக்கான ஜனங்கள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும், நாளாக ஆக அது என்ன நிலை வந்தெய்தும் என்பது யோசனையுள்ளவர்களுக்கு நன்றாய் விளங்கும்.

பிராமணரல்லாத இயக்கத்தின் தலைவர்களாகிய ஸ்ரீமான்கள் டாக்டர் டி.எம். நாயர், ஸர்.பி. தியாகராய செட்டியார் ஆகிய இவர்கள் காலமானதற்குப் பிறகு பிராமணரல்லாத பாமர ஜனங்களின் உண்மை நிலையைச் சரியாய் அறியாதவர்களும், அவர்களிடம் பழகாதவர்களும், பணக்காரர்களும், பெரிய மிராஸ்தாரர்களும், ராஜாக்களும், ஜமீன்தாரர்களும், உத்தியோகஸ்தர்களும் தலைமை வைத்து நடத்துவதாயிருப்பதால் பிராமணரல்லாத பாமர ஜனங்களின் முழு செல்வாக்கையும் பெற காலதாமதமாகி வருகிறது. ஆனாலும் பிராமணரல்லாதார் இயக்கம் என்று ஒரே கட்டுப்பாடான இயக்கம் இந்தியா பூராவையும் இன்னும் சரியானபடி ஒன்றாய்ச் சேர்க்கவில்லையென்று வைத்துக் கொண்டாலும், ஆங்காங்கு சிறுசிறு கிராமங்களில் கூட பிராமணாதிக்கத்தின் கஷ்டங்களையும் தந்திரங்களையும் உணர்வதும், அதிலிருந்து தப்ப தனித்தனியாய் வழி தேடுவதுமான மார்க்கங்களில் ஏதோ சிலர் தவிர, (அதுவும் பிராமணர்கள் தயவு இல்லாமல் அடியோடு பிழைக்க - முன்னுக்கு வர - தலைவராக முடியாமல் இருக்கின்ற சிலர் தவிர) மற்றெல்லோரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பிராமணரல்லாதார் வகுப்பில் பிறந்த மகாத்மாவைப் போல் பார்ப்பனரல்லாதாரான ஓர் உத்தமர் இவ்வியக்கத்தைத் தலைமை வகித்து நடத்துவார்களேயானால், மூன்று வருடங்களுக்கு மேல் இவ்வியக்கமே தேவையில்லாத அளவு முன்னேற்றமடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த பார்ப்பனரல்லாத காங்கிரஸ், இனி வருஷா வருஷம் ஒவ்வொரு பெரிய பட்டணங்களில் கூடிக்கொண்டுதான் வரும். அப்படிக் கூடுவதில் தேசீயக் காங்கிரஸ் கூட்டுமிடங்களில், இதைக் கூட்டுவது நன்மை தரத்தக்கதல்ல என்பது நமது அபிப்ராயம். ஏனெனில் தேசீய காங்கிரஸ் கூடுமிடங்களில் பார்ப்பனரல்லாதார் காங்கிரஸ் கூடுவதாயிருந்தால் பிராமணரல்லாத ஜனங்கள் ஆடம்பரமாயிருக்கும் விஷயத்திற்கு மனம் செலுத்துவார்களேயல்லாமல் முக்கியமான விஷயங்களைச் சரிவரக் கவனிக்க மாட்டார்கள். உதாரணமாக, கதரின் மேன்மையை எடுத்துச் சொல்லவும் குடியின் கேட்டை ஒழிக்கவும் பாமர ஜனங்கள் உள்ள ஒரு இடத்தில் ஒரு கூட்டம் கூட்டி அதற்குப் பக்கத்தில், கழைக் கூத்தனான ஒரு தொம்பனையும் மத்தளம் தட்டி ஆ! ஆ!! என்று சொல்லிக் கொண்டிருக்கச் செய்தால் பாமர ஜனங்கள் கழைக்கூத்தைப் பார்க்கத்தான் போவார்களேயல்லாமல், கதரின் மேன்மையையும், குடியின் தீமையையும் கேட்க வரமாட்டார்கள். அதுபோலவே, தேசீயக் காங்கிரஸிற்குப் பணம் இருக்கிறது; தாராளமாய் பணம் செலவு செய்யும் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் வருவார்கள்; நல்ல பேச்சுக்காரர் வருவார்கள் என்று நினைத்து வேஷம் பார்ப்பதிலேயே, பாமர ஜனங்களின் கவனம் இழுக்கப்பட்டுப் போகும். ஆதலால், பார்ப்பனரல்லாதார் மகாநாட்டை தேசீயக் காங்கிரஸ் கூடாத இடத்தில்தான் கூட்ட வேண்டும். தேசீயக் காங்கிரஸ் தீர்மானங்களைப் போல் சட்டசபைக்குப் போகத் தகுந்த மாதிரியும் உத்தியோகம் பெறத்தகுந்த மாதிரியுமான தீர்மானங்களை மாத்திரம் போட்டுக் கொள்ளாமல், மகாத்மா காங்கிரஸ் தீர்மானங்களைப்போல் தேசத்திற்கும் அநுகூலமுள்ளதாகவும், கிராமம் கிராமமாய்ப் போய் பிரசாரம் செய்து கிராமவாசிகளுக்கு நன்மை பயக்கக் கூடியதான தீர்மானங்களையே செய்யவேண்டும். செய்தபடி நடக்கவும் வேண்டும்.

தியாகம் செய்வதற்கும், கஷ்டப்படுவதற்கும், துணிந்தவர்களே முன் வந்து வேலை செய்ய வேண்டும். காலரும், டையும், பூட்ஸும், சராயும், ஆங்கில தொப்பியுமுள்ளவர்கள் பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றி பேசினாலாவது, தலைமை வகித்து நடத்தினாலாவது, அதோடு ஒரு பயனும் விளையாது, அரசாங்கத்தார் தயவிருந்தால்தான் பிராமணரல்லாதார் முற்போக்கடைய முடியும் என்ற எண்ணத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். அரசாங்கத்தார் தயவில்லாமலே முன்னுக்கு வரக்கூடிய நிலைமையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட சுயநல எண்ணமில்லாமல், பிராமணரல்லாதார் கட்டுப்பாடாய் உழைப்பதாயிருந்தால், மகாத்மாவின் ஒத்துழையாமை தத்துவத்தாலும், நிர்மாணத் திட்டத்தாலுமே முன்னுக்கு வரலாம். அந்த நிலைமையில் ஏற்படுத்தப்படும் முன்னேற்றம்தான் நிலைத்து நிற்கக் கூடியது. அப்படிக்கில்லாத முன்னேற்றம் நிலையானதல்ல என்பதை பிராமணரல்லாதார்கள் உணர வேண்டும்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 03.01.1926

Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.