கொல்லை வழிப்பிரவேசம், சாக்கடை வழிப்பிரவேசத்தைவிட மோசமானதா? குடி அரசு துணைத் தலையங்கம் - 13.12.1925

Rate this item
(0 votes)

சென்னை ஜஸ்டிஸ் கக்ஷியைச் சேர்ந்த ஸ்ரீமான். தணிகாசலம் செட்டியாரவர்கள், சென்னை கார்ப்போரேஷனுக்குள் நியமனம் மூலியமாய் பிரவேசித்ததைக் கொல்லை வழியென்று சில பிராமணப் பத்திரிகைகள் கூக்குரலிடுகின்றன. ஆயினும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. சுயராஜ்யக் கட்சியாரும், அதன் தலைவர்களும் சாக்கடை வழியில் பிரவேசிக்கிறார்களே, இதை விட ஜஸ்டிஸ் கக்ஷிக்காரருடைய நடவடிக்கை எப்படி மோசமாகும்? கோயமுத்தூர் ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சுயராஜ்யக்கக்ஷித் தலைவருமான ஓர் பிராமணர், பிராமணருக்கு விரோதமான கக்ஷியென்றும், நாட்டிற்குப் பிற்போக்கான கக்ஷியென்றும், சர்க்கார் உத்தியோகத்துக்கும், சுயநலத்துக்கும் ஆசைப்பட்ட கக்ஷியென்றும், தன்னால் சொல்லப்படுகிற ஜஸ்டிஸ் கக்ஷியின் ஆதிக்கத்திலிருக்கிற இலாகாக்களிலொன்றான, ஜில்லாபோர்டு அங்கத்தினர் ஸ்தானத்துக்கு. ஒத்துழையாமையையும் முட்டுக்கட்டையையும் ஆதரிக்கிற தத்துவங்களைக் கொண்டவர், பனகால் இராஜாவைக் கெஞ்சி அவரை ஏமாற்றி, ஜில்லா போர்டுமெம்பர் பதவி பெறுவது சாக்கடை வழியில் செல்லுவதா? அல்லவா?

ஜஸ்டிஸ் கக்ஷியாரின் கொள்கைப்படி ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் பெறுவது கடுகளவு அறிவு உள்ளவனும் ஒருக்காலும் கொல்லைவழியென்று சொல்லவே மாட்டான். ஒருக்கால் தேர்தலில் தோற்றுப்போய் நியமனம் பெற்றது குற்றமென்று நினைப்பார்களேயானால், டாக்டர். நாயர் போன்றவர்களெல்லாம் காரியத்தின் அவசியத்தைக் கோரியும், தேர்ந்தெடுக்கும் ஜனங்களின் அறியாமையை உத்தேசித்தும், போட்டியாய் நிற்பவர்களின் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் கண்ணியக் குறைவான நடத்தைகளையும் அறிந்தும், இம்மாதிரியான காரியங்களில் வழி காட்டியிருக்கிறார்கள். ஆனால், தேர்தல்களில் நிற்கக்கூட யோக்கியதையற்றவர்களும் நிற்பதானால் பத்தாயிரம், இருபதினாயிரம் செலவழித்தாலல்லாமல் வெற்றிபெற முடியாமலிருக்கிற ஒரு கூட்டத்தார், இம்மாதிரி நடப்பதற்கு வேறு யாராவது வழிகாட்டியிருக்கிறார்களா? இவையெல்லாம் ஒரு ஜாதியாரின் ஆக்கத்தைக் குறைக்கவேண்டுமென்ற சூழ்ச்சியும், யோக்கியதையற்றவர்கள் முன்னுக்கு வரவேண்டுமென்ற பேராசையும், தங்கள் ஜாதியாரிடத்தில் செல்வாக்குள்ள பத்திரிக்கைகள் இருக்கின்றதென்கிற அகம்பாவமும், இப்படி எழுதச் செய்கிறதே அல்லாமல், யோக்கியமானவர்களுக்கு இதில் எவ்விதமான உண்மையும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை.

ஒத்துழையாமை என்பது இல்லையானால், சுதந்தர புத்தியுள்ளவர்களுக்குத் தேர்தலுக்கும், நியமனத்துக்கும் அளவு கடந்த வித்தியாசமில்லையென்பதுதான் நமது அபிப்ராயம். இரண்டு பேரும் தங்களிஷ்டம் போல் வேலைசெய்ய ஸ்தல ஸ்தாபனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. மொத்தத்தில் தற்காலமுள்ள எந்த ஸ்தாபனங்களிலும், தேர்ந்தெடுப்பு மூலியமானாலும், நியமனம் மூலியமானாலும் உள்ளே செல்லுவதால் பிரமாதமான அரசியல் காரியம் எதுவும் செய்ய முடியாதென்பதோடு அதைத் தனது சுயநன்மைக்கு ஓர் பதவியாக மாத்திரம் உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்பதுதான் நமது தாழ்மையான அபிப்ராயம்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 13.12.1925

 
Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.