வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக் கொண்டாட்டம். குடி அரசு சொற்பொழிவு - 06.12.1925

Rate this item
(0 votes)

“ எங்களுக்குச் ( தனக்கும் தனது மனைவிக்கும் ) செய்த உபச்சாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாக்கிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிடவில்லை ” . தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அநுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கக்ஷியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது.

சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அநுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாக்கிரகத்தின் உத்தேசம் கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாதென்பதுதான் அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூப்பித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள்.

மகாத்மா அவர்கள் ஆம், அதுதான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள் போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்கமாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பேனென்றும் சொன்னார்.

வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிருஸ்துவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.

குறிப்பு :- 29 .11 . 25 ஆம் நாள் வைக்கம் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு

குடி அரசு சொற்பொழிவு - 06.12.1925

 
Read 19 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.