முதலாவது தீர்மானம். குடி அரசு சொற்பொழிவு - 29.11.1925

Rate this item
(0 votes)

1. பாட்னாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை கதராடை எப்போதும் கட்டாயமாய் உடுத்த வேண்டும் என்ற மாறுதலுடன் காங்கிரஸ் உறுதி செய்யவேண்டுமாய் இம் மகாநாடு சிபார்சு செய்கிறது.

2. இப்போது சுயராஜ்யக்கட்சியார் நடத்திவரும் ராஜீயத்திட்டத்தில் குறைவுபடாமல் இன்னும் தீவிரமாக காங்கிரஸ் ராஜீய வேலைத்திட்டத்தை நடத்தி சட்டசபை தேர்தல்களையும் நடத்தவேண்டுமென்றும் இனி சுயராஜ்யக் கட்சி என்ற பெயரே வேண்டாமென்றும் இம்மகாநாடு கான்பூர் காங்கிரசுக்கு சிபார்சு செய்கிறது.

என்ற தீர்மானத்தை ஸ்ரீமான். ளு. சீனிவாசய்யங்கார் பிரேரேபித்து பேசியதின் சுருக்கம்.

இத்தீர்மானமானது தமிழ்நாட்டிற்கே புதியது என்றும் அதனால்தான்தான் பிரேரேபிப்பதாயும் நமக்கு எதிரிகள் பலமாயிருப்பதால் காங்கிரசும், சுயராஜ்யக்கட்சியும் ஒன்றாகிவிடவேண்டும் என்றும் சுயராஜ்யக்கட்சி சட்ட சபை ஒத்துழையாமை செய்வதில்லை என்று சிலர் சொல்வதை கவனிக்கக் கூடாது என்றும் இதெல்லாம் நாம் சரிசெய்துகொள்ளக்கூடிய சிறு விஷயங்கள் என்றும் முட்டுக்கட்டை போடுவதுதான் சுயராஜ்யக்கட்சி கொள்கையென்றும் வகுப்பு நன்மைகளைப் பற்றிக்கூட சுயராஜ்யக்கட்சியார் கவனிப்பார் என்றும் சொல்லித்தீர்மானத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

இன்று தினம் பிராமணரல்லாதாராகிய நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். இத்தகைய பெரிய மகாநாடு எதன் பொருட்டு கூட்டப்பட்டதென்பது பற்றியும் இதில் என்னென்ன விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படும் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள இங்கு கூடியுள்ள பலரும் அவாக்கொண்டிருக்கக் கூடும். இம்மகாநாடு எந்த வகுப்பாரிடத்தும் அதிருப்தியாவது துவேஷமாவது காரணமாகக் கொண்டு கூட்டப்பட்டதன்று.

தேசவிடுதலைக்காக ராஜீய விஷயத்தில் நமது நிலைமையைத் தெளிவாக்கி ஒரு திட்டம் நமக்கென அமைத்துக்கொள்வது நியாயமேயாம். நம்முடைய உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுவதன் நிமித்தம், இத்தகைய மகாநாடுகள் கூட்டவேண்டியது அத்தியாவசியமென் றேற்படுகின்றது. இதுபோன்ற மகாநாடுகள் சென்ற ஐந்தாறு ஆண்டுகளாக மாகாண மகாநாடும் காங்கிரசும் கூடும்போது அவ்வவ்விடத்திலேயோ பிறிதோரிடத்திலேயோ கூட்டப்படுவது வழக்கமாய் வருகிறது. இத்தகைய மகாநாடுகளில் நமது முன்னேற்றத்திற்கான வழிகளைக் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டுவது முதற்செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமானதாகிறது.

தேசத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும். இவ்வாறு பிரிவினைகள் இல்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலும்கூட இத்தகைய பேதமுண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது. இதனை வரவேற்புச் சபைத்தலைவர் பிரசங்கத்திலும், தலைவர் பிரசங்கத்திலும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். பிராமணர் பிராமணரல்லாதாரென்னும் பிரிவினை இல்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கொப்பாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து உடல் நலத்தைக் கெடுக்கும் புண்ணை ஆற்றமுயலுவதே பொது நோக்குடைய அறிஞர் கடமையாகும். இத்தகைய பிரிவேற்பட்டுள்ளதால் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்திற்கான விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படவேண்டுவது ஒவ்வொரு பிராமணரல்லாத மக்களின் கடமை என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை.

லக்னோ ஒப்பந்தத்தின் மூலமாக முகம்மதியர்களுக்குத் தனிப்பிரதிநிதித் துவமளிக்கப்பட்டதன் பலனாக அங்கே இந்து முஸ்லீம் வேற்றுமை பெரிதும் ஒழிந்து ஒற்றுமைக்கு இடமேற்பட்டது. அது போன்றே நமது உரிமைகளைப் பாதுகாத்து நாம் முன்னேற்றமடைவதற்கான மார்க்கம் இன்னதென தெளிவாக்குவதன் பொருட்டே இப்பெருங்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. இக்கூட்டத்தைச் செவ்வனே நடத்தி வைக்க ஸ்ரீமான். ராமலிங்கஞ் செட்டியாரை தலைமை வகிக்கக்கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு: 22.11.1925 இல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற பிராமணரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு.

குடி அரசு சொற்பொழிவு - 29.11.1925

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.