வைசிராய் பிரபுக்கு வேண்டுகோள். குடி அரசு - 28.09.1930

Rate this item
(0 votes)

லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்கமானது ஹிந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாசமென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத்தொகைக் கணக்கு கொடுக்கும் போது) ஹிந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது அதன் கொள்கை.

ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ் கமிஷனரைக் கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும்பாதவர்களை கூறும்படி வற்புறுத்தலாகாதெனக் கேட்டுக் கொண்ட தற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங்கத்தார் வைசிறாய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:-

 

பற்பல மாகாணங்களிலுமுள்ள ஹிந்து சமூகத்தினரில் பலர் ஹிந்து மதத்துக்கு ஜாதி வித்தியாசம் அவசியமில்லையென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு இந்து சமயத்தினர் முன்னேற்றமடைய முடியாமல் போய்விட்டதென்றும் உணர்ந்திருக்கின்றனர்.

இத்தகைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது. அரசியல், சமூக விஷயங்களில் இப்போது தோன்றியிருக்கும் புத்துணர்ச்சியால், பழைய காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சில ஆசாரங்கள் இப்போது அவசியமில்லையென்றும், அவற்றால் தற்காலம் கஷ்டங்களே ஏற்படுகின்றன வென்றும் பலர் நம்புகின்றனர்.

ஆதலின் அடுத்த சென்சசில் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது பலருடைய ஆவல். ஆதலின் தாங்கள் அப்படிப்பட்டவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதென அவ்விலாக்கா அதிகாரிகளுக்கு உத்திரவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

இத்தகைய அனுமதி முன்னரே சீக்கியர்களுக்கும், பாஞ்சாலத்திலுள்ள ஆதி இந்துக்களுக்கும் அளித்திருப்பதால் மற்ற இந்துக்களுக்கும் இந்த அனுமதி குற்றமாகாது. ஜாதி என்று கேட்டிருக்கும் இடத்தில் “ஒன்றுமில்லை” என்று குறிப்பிட்டுவிடுவதும் தவறாகாது.

ஆதலின் தாங்கள் சென்சஸ் எடுக்கும் அதிகாரிகள், அல்லது குமாஸ்தாக்கள் ஜாதியை கூறும்படி கட்டாயப்படுத்தலாகாதென்றும், ஜனங்கள் சொல்லாமலிருக்கும் போது அவர்களாகத் தங்களுக்குத் தோன்றியதைப் பதிவு செய்யாமலிருக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்து இந்து சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலுவீர்களென்று எதிர்பார்க்கிறோம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 28.09.1930)

Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.