தீண்டாமை. குடி அரசு துணைத் தலைங்கம் - 08.11.1925

Rate this item
(0 votes)

சென்னை மாகாண தீண்டாமை மகாநாடு

சென்னையில் தீண்டாமை மகாநாடென்று ஓர் மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி கூடிற்று. பல பெரியோர்களும், பல தீண்டாதார்களும் மற்றும் பலரும் விஜயம் செய்திருந்தார்கள். பல கனவான்கள், வெகு உக்ரமாகவும் பேசினார்கள். தீண்டாமையை விலக்கவேண்டுமென்று பல தீர்மானங்களும் செய்தார்கள். இவற்றினால் தீண்டாமை ஒழிந்து விடுமென்று, நாம் நம்புவதற்கில்லை. இவ்வித மகாநாடு இதற்கு முன் ஆசாரத்திருத்த மகாநாடென்ற பெயரால் எவ்வளவோ நடந்திருக்கிறது. எவ்வளவோ சாஸ்திர ஆதாரங்களெல்லாம் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. எத்தனையோ தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றின் பலனாய் என்ன நடந்தது?

தீண்டாமை என்னும் கொடுமை நம் நாட்டிலிருந்து நீங்கி மக்கள் எல்லோரும் பிறவியில் சமம் என்கிற உணர்ச்சி பரவி ஒத்து வாழ வேண்டுமானால், ஸ்ரீமான்கள். டி.வி.சேஷகிரி ஐயரும், டி.விஜயராகவாச்சாரியாரும், மகாதேவ சாஸ்திரியாரும், பனகால் இராஜாவும், பாத்ரோவும் போன்றவர்கள் மீட்டிங்கு கூட்டி உபந்யாசம் செய்து தீர்மானங்கள் செய்துவிட்டுப் போவதினால், ஒருக்காலும் நன்மை யேற்படவே மாட்டாது. அல்லாமலும், சட்டசபை முதலிய இடங்களில் போய் உட்கார்ந்து கொண்டு தீண்டாமையொழியத் தீர் மானங்கள் செய்து பத்திரிக்கைகளில் போட்டு விடுவதினாலும் ஒருக்காலும் நன்மை யேற்படவே மாட்டாது. காங்கிரஸில் தீண்டாமையென்பது ஓர் முக்கியமான திட்டமெனப் போட்டுத் தீர்மானம் செய்து விடுவதினாலும் முடியக்கூடிய காரியமல்ல. இவைகளை நாம் அனுபவத்தில் பார்த்தாகிவிட்டது. இவைகளின் கூட இருந்து வேலை செய்கிறவர்களே வெளியே வந்ததும் இதற்கு விரோதமாய் சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். உதாரணமாக ஆசாரத்திருத்தக் கூட்டங்களிலிருந்தவர்கள் எத்தனையோ பேர் இன்றையத்தினம் பிறவியில் உயர்வு, தாழ்வு உண்டு என்கிற வருணாசிரம தர்மத்தை ஆதரித்துக் கொண்டு வருகிறதைப் பார்க்கிறோம்.

சட்டசபைகளில், பொதுத் தெருக்களில் எல்லோரும் போகலாமெனத் தீர்மானம் செய்துவிட்டு பின் அவசியமிருந்தால்தான் போகலாமென்று அதற்கொரு வியாக்கியானம் செய்து, தெருக்களில் நடக்கிறவர்களைப் பிடித்துத் தண்டித்துக் கொண்டு வருவதை நாம் பார்க்கவில்லையா? அதுபோலவே காங்கிரஸிலும் தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்று தீர்மானம் செய்து விட்டு அதற்காகவே தியாகம் செய்கிறோம், கஷ்டப்படு கிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களெல்லாம், பிறவியினால் ஜாதி வித்தியாசமில்லையென்றும்,பொது ஸ்தாபனங்களில் பொதுப்பணங்களில் நடக்கும் சந்தர்ப்பங்களிலாவது ஒருவர் சாப்பிடுவதை மற்றவர் பார்த்தால் பாவம் என்று சொல்லக்கூடாதென்று தீர்மானம் செய்து சேரமாதேவி குருகுலத்தில் குழந்தைகள் மத்தியிலாவது அமுலுக்குக் கொண்டுவரப்பார்த்தவுடனே, நான் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன், எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவேன், ஆனால் குழந்தைகள் ஒருவர் பார்த்து ஒருவர் சாப்பிடச் சொல்லமாட்டேனென்றும், ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்க்குமானால் நான் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொல்லிக்கொண்டும், காங்கிரஸ் ஸ்தாபனங்களில் தம் பதவிகளை ராஜீநாமாச் செய்து ஓடினவர்கள் எத்தனை பெயரைப் பார்க்கிறோம்?

இன்னும் பெரிய ஆசார சீர்திருத்தக்காரரென்றும், பஞ்சமர்களுக்கு உழைக்கிறவர்களென்றும் சொல்லிக்கொண்டு, பஞ்சமர்களுடன் திரிந்துகொண்டும் இருந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் போன்றவர்களெல்லாம் மதத்திற்கும், ஒழுக்கத்திற்கும் விரோதமான காரியங்கள் தாங்கள் எவ்வளவு செய்து கொண்டபோதிலும் கூட, சமயம் வந்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டியது கிரமந்தான். ஆனால் அது இப்போது சாத்தியப்படக்கூடிய காரியமல்லவென்று சொல்லவில்லையா? இந்தக் காரணங்களால் மீட்டிங்குகளாலும், சட்டசபைகளாலும், காங்கிரஸினாலும் ராஜீயவாதிகளாலும் தீண்டாமை ஒழியுமென்றாவது, தீண்டாத, பார்க்காத, தெருவில் நடக்காத, அண்டாத, கோவிலுக்குள் நுழையாத, தங்களுடைய வேதத்தைப்படிக்கக் கூடாத, சகோதரர்களுக்கு விடுதலை கிடைத்து விடுமென்று எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனமே யென்பதுதான் நம்முடைய அபிப்பிராயம். ஏனெனின், வைக்கத்தில் தெருக்களில் நடக்க, தீண்டாமை விலக்கு மகாநாடோ, சட்டசபை தீர்மானங்களோ, காங்கிரஸ் திட்டங்களோ இந்த உரிமையை வாங்கிக் கொடுக்கவில்லை. முடிவாக, கொஞ்சம் அநுகூல மேற்பட்டிருக்கின்றதென வைத்துக் கொண்டாலும் சத்தியாக்கிரகத்தின் மூலமாகவும், மகாத்மாவின் உதவியாலும் ஏற்பட்ட தேயல்லாமல் வேறொன்றினாலுமல்லவென்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஆதலால், இனியேனும் நம் நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்னும் எண்ணம் யாருக்காவது இருக்குமேயானால், அவர்கள் சத்தியாக்கிரகத்தைத் தான் கடைப்பிடிக்க வேண்டியது. தீண்டாமை ஒழிப்பதற்கு பொருள் உதவி செய்கிறவர்களாயிருந்தால் சத்தியாக்கிரகத்துக்கே கொடுக்கவேண்டியது. தீண்டாமைக்காக தமது வாழ்நாளை அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றிருந்தால் அவர்கள் சத்தியாக்கிரகத்துக்குத் தான் அர்ப்பணம் செய்ய வேண்டும். இதல்லாமல் வேறு என்ன நினைத்தாலும் மந்திரத்தில் மாங்காய் விழுந்து விடாது. சில சமயங்களில் மாத்திரம் தீண்டாதாரோடு சாப்பிட்டு விடுவதினாலேயோ, சமமாய் உட்காருவதினாலேயோ, அவர்களைத் தொட்டுவிடுவதினாலேயோ தீண்டாமை ஒழிந்துபோகாது. நமக்குத் தெரிய எத்தனையோ பெயர் தீண்டாதவர்களுடன் சரீர சம்மந்தம் வைத்துக் கொண்டிருப்பவர்களும், தீண்டாதார் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தில் மதுபானம் செய்கிறவர்களும், தீண்டாதாரிடத்தில் அடிமைகளாயிருப்பவர்களும், அவர்களிடத்தில் கூலிக் காரர்களாயிருப்பவர்களும் அந்த சமயம் தீர்ந்ததும் தங்களை உயர்ந்த ஜாதிக் காரர்களென்றுதான் சொல்லிக்கொள்ளு கிறார்கள். ஆகையினால் முடிவாக, தீண்டாமை ஒழிவது தான் நமது தேசத்தின் விடுதலைக்கு முக்கிய சாதனமென்றும், அதற்காக உழைப்பதும், சத்தியாக்கிரகம் செய்வதுந்தான் தேசவிடுதலைக்கு உழைப்பதென்றும், நாம் உறுதியாகச் சொல்லுகிறோம்.

இதற்காக, மாயவரம் ஸ்ரீமான் கார்குடி சின்னையா பிள்ளை தலைமையில் தீண்டாமை விலக்க சத்தியாக்கிரக கமிட்டியென்று ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான தியாகத்திற்கும், கஷ்டத்திற்கும் தைரியமுள்ளவர்கள் அதிற்சேர்ந்து, எங்கெங்கு தீண்டாத, தெருவில் நடக்காத, கோவிலுக்குள் செல்லாத கொடுமைகள் இருக்கின்றதோ அங்கங்கு அகிம்சா தர்மத்தோடு, சத்தியாக்கிரகம் செய்து ஆயிரக்கணக்கான சகோதரர்கள் சிறைக்குச் செல்லவேண்டும். இது விஷயத்தில் சர்க்காருக்கும், வர்ணாசிரம தர்மிகளுக்கும் நாம் ஒன்றும் வித்தியாசம் கற்பிக்கமுடியாது. இரண்டு பேரும் நமக்கு எதிரிகளாய்த்தானிருப்பார்கள். பின்னும், சர்க்காரைவிட பிறவியில் உயர்ந்தவரென்று எண்ணிக் கொண்டிருக்கும் பிராமணர்களே, நம்முடைய விரோதிகளென்று சொல்லுவதுடனல்லாமல் பிராமணர்களைவிட இது விஷயத்தில் சர்க்காரார் கொஞ்சம் மேலானவர்களென்றுகூட சொல்லுவோம். இப்படிச் சொல்லுவது குற்றமென்று யாராவது சொல்லுவார்களேயானால் அவர்களை நாம் தாழ்ந்தவர்களென்போருக்கும், தீண்டாதவர்களுக்கும் துரோகியென்று அழைக்க பின்வாங்கமாட்டோம்.

குடி அரசு துணைத் தலைங்கம் - 08.11.1925

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.