தமிழர் மகாநாடு. குடி அரசு தலையங்கம் - 08.11.1925

Rate this item
(0 votes)

நமது நிலை

இவ்வாண்டு காஞ்சீபுரத்தில் நடக்கும் தமிழ்நாட்டு 31 - வது ராஜீய மகாநாடானது தென்னிந்தியத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கூடுகிறது. அதன் முக்கிய நோக்கம் நமது நாடு சுயராஜ்யம் பெறுவதற்கென்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும் சுயராஜ்யமென்பது சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குத்தான் பயன்படுமேயல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்யமென்பதும் பர ராஜ்ய மென்பதும் வித்தியாசமற்றதேயாகும். தென்னாட்டுத் தமிழ்மக்கள் பெரும்பாலும் சுயமரியாதையற்று சுயேச்சையற்று மிருகங்களுக்கும், பக்ஷிகளுக்கும், புழுக்களுக்கும், பூச்சிகளுக்குமுள்ள சுதந்திரமும், சுயாதீனமும் இன்றி கோடிக்கணக்கான மக்கள் உழல்வதை யாரும் மறுக்கமுடியாது. இவர்களின் பொருட்டும்,தேச முழுவதிலுள்ள இவர் போன்றார் பொருட்டும் விடுதலையை உத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால் ஐந்து வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட ஒத்துழையா இயக்கமானது பல்வேறு காரணங்களால் டெல்லியில் ஆக்கங்குன்றி நாளுக்கு நாள் கருகி வந்து பாட்னாவில் வேருடன் களைந்தெறிந்தாகிவிட்டது. இதன் பலனாய் ஏற்பட்ட நிலைமையானது சுயேச்சையும் சுயமரியாதையும் சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு அதிலும் முக்கியமாய் தென்னாட்டுத் தமிழ்மக்களுக்கு முன்னிலும் அதிகக் கேவலமான நிலையில் கொண்டுவந்துவிட்டுவிட்டது.

பிராமணர்கள்

பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்நாட்டு ஜனங்களென்று சொல்லிக் கொள்வோரிலேயே ஒரு வகுப்பார் தங்களுடைய சுயநலத்தையே உத்தேசித்து பொதுஜனங்களிடையே வகுப்பு வித்தியாசத்தையும் துவேஷத்தையும் உண்டு பண்ணி தங்களை உயர்ந்தோரென்று சொல்லிக் கொண்டு தங்கள் உயர்விலும் வாழ்விலுமே கண்ணுங்கருத்துமாயிருந்து தேசத்தையும், மதத்தையும், மற்ற சமூகங்களையும் பாழக்கியதுடன், அந்நிய தேசத்தார் நம்நாட்டிடையே படையெடுத்துவந்த போதெல்லாம் தங்கள் நன்மையின் பொருட்டே எதிரிகளுக்கு உளவு சொல்லியும் தேசத்தையும், மதத்தையும் காட்டிக்கொடுத்தும் அவர்களிடமே மந்திரி முதலிய உத்தியோகங்கள் பெற்று செல்வாக்கடைந்தும் நமது நாட்டாரை அடக்கியாள அவர்கள் ஓர் ஆயுதமாகவும் பயன்பட்டு வந்திருக்கிறார்கள். இதற்குதாரணமாக இச்சுயநலக் கூட்டத்தார் தங்கள் சூழ்ச்சியாலும், தந்திரத்தாலும் தாங்களே நமது மதாச்சாரியார்களாகவும், குல குருக்களாகவும், படித்தோர்களாகவும் தேச நன்மைக்கும், சமூக நன்மைக்கும் ஏற்பட்ட இயக்கங்களுக்கு தலைவர்களாகவும், அரசாங்கத்தை நடத்த அவர்களுக்கு ஊழியர்களாயுமிருந்து அரசாங்கத்தை நடத்திக் கொடுத்துக்கொண்டும் மற்றும் அரசாங்கத்திற்கு ஒற்றர்களாயிருந்து நாட்டின் உயிர்நாடியைக் காட்டிக்கொடுத்தும் ஆகிய இவ்வளவு காரியங்களையும் செய்துவருவது இக்கூட்டத்தார்தான் என்பதை இப்பொழுதும் காணலாம்.

மகாத்மாவின் அபிப்பிராயம்

ஆதிகாலத்தில் மக்கள் ஒற்றுமைக்கும், சமத்துவத்துக்கும் சகோதரத்துவத்துக்கும், ஜீவகாருண்யத்திற்கும், அஹிம்சைக்கும் ஏற்பட்ட இயக்கங்களுக்கும், சாதனங்களுக்கும் இக்கூட்டத்தாரே விரோதிகளாயிருந்து தங்கள் சுயநன்மைக்காகவே அவைகளை ஒழித்து தேசத்தை இக்கெதிக்கு கொண்டு வந்தவர்களும் இவர்களே தானென்பதைச் சரித்திர மூலமாகவும் நேரிலும் காணலாம். மகாத்மாவால் ஏற்படுத்தப்பட்ட அஹிம்சா தர்மத்தோடு கூடிய விடுதலை இயக்கத்தை ஆரம்ப முதல் இன்று வரையிலும் பல சூழ்ச்சிகளாலும் பாழாக்கினவர்கள் இவர்களேயென்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

இதை மகாத்மா அவர்களே தம்முடைய இயக்கம் சீர்குலைந்ததற்குக் காரணம் படித்த வகுப்பினர்தான்! படித்த வகுப்பினர்தான்!! எனப் பலமுறை கதறியிருக்கிறார். நாட்டில் படித்த வகுப்பார் யாரென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அல்லாமலும் பெல்காம் காங்கிரஸின் அக்கிராசனப் பிரசங்கத்தில் “ இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிட பிராமணர்கள் செய்த கெடுதி குறைவானதல்ல வென்று மகாத்மாவே சொல்லியிருக்கிறார். ஆதலால் நமதுநாடு முன்னேற்றமடையவோ, நமது சமூகம் முன்னேற்றமடையவோ மக்கள் யாவரும் சமம் என்னும் உணர்ச்சி அடையவோ எல்லோரும் சமமாய் வாழவோ நம்மால் ஏற்படுத்தப்படும் இயக்கம் தங்கள் சூழ்ச்சியால் பொது மக்களை ஏமாற்றி தங்கள் மாயவலையில் கட்டுப்படுத்தி எதற்கும் தாங்களே முன்னணியிலிருந்துகொண்டு எதையும் தங்கள் சவுகரியத்துக்கு உபயோகப்படக்கூடிய மாதிரியில் திருப்பிக்கொள்ளும் நய வஞ்சகர்களான சுயநல வகுப்பார் கையில் சிக்காமல் தப்ப வழிதேட வேண்டும். அங்ஙனம் நாம் வழி தேடாவிட்டால் நம் விடுதலைக்கென ஆரம்பிக்கப்படும் எந்த இயக்கமும் அதற்காக நம்மால் செய்யப்படும் எவ்வித தியாகமும், அனுபவிக்கப்படும் எவ்வித கஷ்டமும் பயன் தராததோடு இப்பொழுது நாமிருக்கும் நிலைமையிலும் இன்னும் கீழிறங்க உதவியாகிவிடும்.

ஆகையினால் காஞ்சீபுரம் மகாநாட்டில் கூடும் பொதுஜனப் பிரதிநிதிகள் சுயராஜ்யத்துக் கென்றோ தேச முன்னேற்றத்திற் கென்றோ கருதி ஏமாந்துபோய் மறுபடியும் இக் கூட்டத் தாரின் சூழ்ச்சிக்கு ஆளாகி அவர்கள் சொல்லுகிறபடி நடந்து நமது நன்மைக்கென்று நினைத்து அவர்கள் நன்மைக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டு போகாமலிருக்கும்படி நாம் எச்சரிக்கை செய்கிறோம்.

பிராமணர் - பிராமணரல்லாதார்

தென்னாட்டில் பொதுவாக இக்கூட்டத்தாரை நீக்கிய பொது ஜனங்களுக்கு பிராமணரல்லாதார் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இதில் கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய இந்துக்களல்லாதவர்களும் பிராமணரல்லாதவர்களே. இந்துக்களுக்குள்ளும் பிராமணர் நீங்கிய மற்றவர்கள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட பல ஜாதிப் பெயர்கள் சொல்லிக்கொள்ளப்பட்டாலும் அவர்களும் பிராமணரல்லாதவர்களே. அல்லாமலும் தீண்டாதாரெனக் கூறித் தொடக்கூடாதவர்கள், பார்க்கக்கூடாதவர்கள் என்று தள்ளி வைத்திருக்கும் ஒரு பெரும் கூட்டத்தாரும் பிராமணரல்லாதவர்களே. இவர்கள் யாரும் நாம் மேற்சொன்ன பிராமணர்களின் மாயவலையினின்றும் தப்பி சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் சிறுசிறு வகுப்பு வித்தியா சங்களையும் பொருளற்ற ராஜீய அபிப்பிராய வித்தியாசத்தையும் மறந்து விடுவதோடு தங்கள் சுயநன்மைக்காக பிராமணர்களுக்கு ஒற்றர்களாகவும், காட்டிக் கொடுப்பவர்களாகவும் இருக்கும் சிறுமைக் குணங்களை விட்டு எல்லோரும் முன்னுக்கு வரவேண்டுமென்ற எண்ணத்துடன் சூழ்ச்சியன்றியிலும், துவேஷமின்றியும் மனப்பூர்வமாக ஒன்றுபட்டு பாடுபட முன்வர வேண்டும்.

இவர்களுள் காங்கிரஸ்காரர்களென்போரும், மாறுதல் வேண்டாதாரென்போரும் சுயராஜ்யக் கக்ஷிக்காரர்களென்போரும், ஜஸ்டிஸ் கக்ஷியென்போரும், சுயேச்சைக் கக்ஷி என்போரும், பழய மிதவாதக் கக்ஷியென்போரும், பெசண்டம்மைக் கக்ஷியாரென்போரும், மதாபிமானிகளென் போரும், அரசாங்க உத்தியோகஸ்தர்களென்போரும் ஆகிய பல பிரிவினர் களிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ராஜீய விஷயத்திலோ மத விஷயத்திலோ தனது வாழ்வு விஷயத்திலோ ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதமுடையவர்களாயிருந்த போதிலும் தாங்கள் எல்லோரும் பிராமணரல்லாதாரென்பதையும், பிராமணர்களின் சூழ்ச்சிகளினின்றும், தந்திரங்களினின்றும் விலகி தாங்கள் சுயமரியாதையுடன் மனிதனாக வாழ வேண்டும் என்கிற ஒரே பொதுவான நோக்கத்தை வைத்து பாடுபடுவதற்கு ஒரு பொது இயக்கத்தைக் காண வேண்டியது தற்சமயம் மிகவும் அவசியமென்பதை பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளுவார்கள். இதைப்பற்றி நம்மாலும், மற்றும் பல அறிஞர்களாலும் தற்கால நிலைமையை உத்தேசித்து தீவிரமாய் சொல்லப்பட்டு வந்திருக்கிறதை யாவரும் அறிவார்கள். ஆதலால் இவ்வெண் ணத்தை ஈடேற்றிக் கொள்ள காஞ்சீபுரத்திற்கு வந்து இதற்கென ஓர் தனி மகாநாடு கூட்டித் தங்களது கொள்கை இன்னதென்பதையும் ராஜீய மகாநாட்டில் பிராமணரல்லாதார் நிலைமை என்னவென்பதையும் முடிவு செய்து கொண்டு அந்த முடிவை ராஜீய மகாநாட்டில் வலியுறுத்த ஒருப்பட வேண்டுமாய் மிகவும் வினயத்துடன் வேண்டிக் கொள்ளுகிறோம்.

காஞ்சீபுரம் ராஜீய மகாநாடானது காங்கிரஸ் அமைப்பின் கீழ் ஏற்பட்ட விதிகளின் பிரகாரம் நடத்தப்படுமாகையால், நாம் அழைக்கும் வகுப்பில் சிலருக்கு அதில் கலந்துகொள்ள சந்தர்ப்பமேற்படாது. ஆகையால் இதற்கென பிரத்தியேகமாக ஓர் மகாநாடு அதே சமயத்தில் அதே இடத்திலேயே கூட்டி அதில் நமது நோக்கத்திற்குப் பாடுபட முன் வரும் சகலருக்கும் ஆதரவளிக்க ஏற்பாடு செய்யப்படும். தற்காலம் ஏழை மக்கள் இருந்துவரும் கஷ்டநிலையை நிவர்த்திக்க முன்வரும் தேசபக்தர்கள் அனைவரும் இம்மகாநாட்டில் கலந்து கொள்வார்களென்று நம்புகிறோம்.

ஒற்றுமைக் குறைவிற்குக் காரணம்

ராஜீய மகாநாட்டில் பிராமணரல்லாதாரும் உணரவேண்டியது ஒன்றுண்டு. முக்கியமாக ராஜீய வாழ்வில் பிராமணருக்கும், பிராமணரல்லாதாருக்கும் ஏற்படுகிற மனஸ்தாபத்திற்கும், சூழ்ச்சிகளுக்கும் காரண மாயிருப்பதும் பிராமணரல்லாதாரில் இந்து முகமதிய கிறிஸ்தவ சமூகங்க ளுக்கு இந்துக்களில் தீண்டக்கூடியவர், தீண்டாதார் இவர்களுக்குள்ளும் ஏற்படும் மனஸ்தாபங்களுக்கும், ஒற்றுமையின்மைக்கும் காரணமாயிருப்பதும் உத்தியோகங்களைப் பற்றியும் தெரிந்தெடுத்த ஸ்தானங்களைப் பற்றியும் உள்ள போட்டிகள்தான்.

இந்தப் போட்டிகள் ஒரு வகையாக முடிவு பெறுமானால் பிறகு இந்தியருக்குள் எவ்வித ஒற்றுமையின்மையும் அபிப்பிராய பேதங்களும் ஏற்படக் காரணமேயில்லை. ஆதலால் உத்தியோக விஷயங்களில் ஆகட்டும், மற்றும் தெரிந்தெடுப்பு பதவிகளிலாகட்டும் அல்லது இதர பொது ஸ்தாபனங்களிலாகட்டும் அவரவர்கள் இன்னின்ன அளவுக்கு உரியவர்கள் என்கிற தீர்மானம் ஏற்பட்டுப் போய்விட வேண்டியது. சாதாரணமாக சில விஷயங்களில் மாத்திரம் இந்துக்களுக்கும், மகமதி யர்களுக்கும் உரிமையளவு ஏற்பட்ட பிறகு அநேக விஷயங்களில் இந்து - முகமதிய - கிறிஸ்தவ விரோதங்களே பெரும்பாலும் மறைந்து விட்டது டனல்லாமல், ஒருவரை ஒருவர் தாழ்ந்தவர்களென்று சொல்லி அடக்கியாளுந் தன்மையும் மறைந்துவிட்டது. இப்பொழுது இந்துக்களில் பெரும்பான்மை யாய் பிராமண, பிராமணரல்லாதார், தீண்டாதார் என்கிற மூன்று பெரிய பிரிவினைகள் இருந்து வருகிறது. இப்பிரிவினைகளை அரசாங்கத்தாரும், பொதுமக்களும் ஒப்புக் கொண்டுமாகிவிட்டது. அதற்குத் தகுந்த ஆதாரங்களும் ஏற்பட்டுவிட்டது. இம் மூன்று வகுப்பார்களுக்கும் உத்தியோகங்களில் இன்னின்ன அளவென்றும் தெரிந்தெடுப்பு பதவிகளிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் இன்னின்ன அளவென்றும் ஏற்பட்டுப் போய் விடுமேயானால் வகுப்புத் துவேஷம், சமூகத் துவேஷம், மதத் துவேஷம் இவைகள் நம் நாட்டை விட்டே பறந்து ஓடிப்போகும்.

பிராமணர்கள் ஒப்பமாட்டார்கள்

இம்முறையானது சிறிய தொகையினராயிருந்து பெரிய பங்கை அனுபவித்துக் கொண்டு வரும் வகுப்பாருக்கு பெருத்த வேதனை யாய்த்தானிருக்கும். அதற்காக பிராமணரல்லாதார் சிலருக்கும், தீண்டாதார் சிலருக்கும் லஞ்ச லாவணம் கொடுத்தாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம், தேசம் கெட்டுப்போய்விடும் என்று பொய்யழுகை அழச்செய்து மாய்மாலக் கண்ணீர் விடும்படியும் செய்விப்பார்கள். இதையெல்லாம் நாம் கவனிக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் உதவி நின்றவுடனே இவர்கள் மறுபடியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொல்ல வந்து விடுவார்கள். எப்படியென்றால் நேற்று தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் வேண்டுமென்று கேட்டவர்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் நான் காங்கிரசில் இருக்க மாட்டேனென்று சொன்னவர்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ராஜீயக் கூட்டங்களில் பிரேரேபித்தவர்களும் பிராமணர்கள் காலுக்குள் நுழைந்து இன்றைய தினம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்று கூறுவதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். உலகமுள்ள வரையும் இக்கூட்டம் இருந்துதான் வரும். ஆதலால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

தீண்டாதார்

பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானதென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலேயோ அவர்கள் முன்னேறவேயில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-ல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப் புலிகளுக்கு இதைப்பற்றிக் கவலையிராதுதான். பொறுப்புள்ள பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை. இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான் சொல்லவேண்டும்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமேயானால் இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிராமணக்கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்கக் கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறியக்கூடாத மனிதனும், அவனவன் தெய்வத்தைக் காணக் கூடாத மனிதனும் இந்தியாவில் இருக்கக்கூடுமாவென்பதை பொது நோக்குடைய ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டுவதோடு ராஜீய மகாநாட்டில் இதை வலியுறுத்தி அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேச பக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு தலையங்கம் - 08.11.1925

Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.