நமது பத்திரிக்கை. குடி அரசு தலையங்கம் - 01.11.1925

Rate this item
(0 votes)

நமது “குடி அரசுப்” பத்திரிக்கை ஆரம்பித்து ஆறு மாதங்களாகின்றது. அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய மகாத்மாவின் நிர்மாண திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது. இத்தொண்டில் “குடி அரசு” சிறிதுங்கள்ளங்கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது தனது ஆத்மாவையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி தொண்டு செய்து வந்திருக்கின்றது - வரவும் உத்தேசித்திருக்கிறது.

“குடி அரசு” குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரசாரப் பத்திரிகையேயல்லாமல்; வெறும் வர்த்தமானப் பத்திரிக்கை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப்பதையோ தனது சுயவாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ சுயநலத்திற்காக கீர்த்திபெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும் வாசகர்களுக்கு போலி ஊக்கமும் பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றாற்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர் வேடிக்கைப் பத்திரிக்கையுமன்று. பிரதி வாரமும் “குடி அரசு” தனது ஆத்மாவை வெளிப்படுத்தும்போது கண்ணீர் சொட்டாமலிருக்க முடிவதே யில்லை. இதன் பலனாக உயர்ந்தோரென்று சொல்லிக்கொள்ளுவோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர்களென்று சொல்லிக் கொள்ளுவோர்களாகிய பல ராஜதந்திரிகளுக்கும் விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிப் பிரசாரங்களுக்கு நமது “குடி அரசு” ஆளாக வேண்டியதாகவும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வித நிலையில் “குடி அரசு” சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் போதிய அளவு பெற முடியாமலிருப்பது ஓர் ஆச்சரியமல்ல.

உண்மையில் “குடி அரசு”க்கு எந்த பிராமணரிடத்திலும் குரோதமோ வெறுப்போ கிடையாதென்பதை உறுதியாகச் சொல்லுவோம். ஆனால் பிராமணன் உயர்ந்தவனென எண்ணிக் கொண்டிருப்பதிலும், மற்றவர்கள் தீண்டாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள், “இழிவான” மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத் திலும், தங்கள் வகுப்பார்தான் முன்னணியிலிருக்க வேண்டும், மேன்மை யுடன் பிழைக்க வேண்டும் மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாகவே யிருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அதற்காக மற்றவர்களை உபயோகித்துக் கொண்டும் செய்யும், கொடுமையான சூழ்ச்சி களிடத்திலும்தான் “குடி அரசு”க்கு வெறுப்பு இருப்பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டுமென்று ஆவல் கொண்டு உழைத்து வருகிறது.

பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்வோரிடத்தில் “குடி அரசி” ன் தற்காலப் பத்திராதிபர் எவ்வளவோ அன்புடனும், பக்தியுடனும், நட்புடனும் வெகு காலமாக நடந்து கொண்டு வந்திருக்கிறார். அநேக பிராமணர்களுடைய அன்புக்கும் பாத்திரமாயிருந்திருக்கிறார். இன்னும் இருந்து வருகிறார். தேசீய வேலையிலும், பல தேசீய பிராமணர்களுடன் ஒன்றுபடக் கலந்தே ஒத்துழைத்தும் வந்திருக்கிறார். உதாரணமாக, ஒத்துழையாமைக்கு முன்பு சட்டசபைப் பிரவேசங்களுக்கு தனது குடும்ப சகோதரர்கள் போன்ற ஆப்த நண்பர்களான ஸ்ரீமான்கள் கோவை எம். சம்மந்த முதலியார், டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், எம்.வேணுகோபால் பிள்ளை முதலியோர்களுக்கு விரோதமாகவும், அதற்குமுன் அதிகப் பழக்கமில்லாத ஸ்ரீமான் பி.வி. நரசிம்மய்யருக்கு “தீவிர தேசீயவாதி” என்கிற ஒரு காரணத்திற்காகவே அவருக்கு சட்டசபை அங்கத்தினர் பதவி கிடைக்கவேண்டிய வேலை செய்திருக்கிறார். இதில் ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கு சொல்வது குற்றமாகாதென்று நினைக்கிறோம். அதாவது, ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளைக்காக ஸ்ரீமான் நரசிம்மய்யரை தம் அபேக்ஷகர் ஸ்தானத்தை வாபீஸ் வாங்கிக் கொள்ளும்படி ஒரு சட்டசபைத் தேர்தலில் கேட்கப்பட்டபோது ஸ்ரீமான் பி.வி.நரசிம்மய்யர் ஸ்ரீமான். வேணு கோபால் பிள்ளை தாம் காங்கிரஸ்வாதியென்றும், ஹோம்ரூல் கக்ஷியைச் சேர்ந்தவரென்றும் வெளிப்படையாகப் பத்திரிகைகளுக்கு எழுதினால் தாம் அபேக்ஷகர் ஸ்தானத்திலிருந்து விலகிக்கொள்வதாகப் பகிரங்கமாகச் சொன்னார்.

அந்தப்படியே ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளையும் தாம் காங்கிரஸ்வாதியென்றும், ஹோம் ரூல் கட்சியைச் சேர்ந்தவரென்றும் பத்திரிக்கைகளுக்கு எழுதிவிட்டார். பேச்சுப்படி ஸ்ரீமான் நரசிம்மய்யர் பின்வாங்கிக் கொள்ளவேண்டுமென்று சொன்ன காலத்தில் முடியாதென்று சொல்லிவிட்டார். இது விஷயங்களைப் பத்திரிகைகளுக்கு எழுதின காலத்தில் “நியூ இந்தியா” “ஹிந்து” “சுதேசமித்திரன்” இம்மூன்றும் பிரசுரிக்கவேயில்லை. இம்மாதிரி நாணயத் தவறுதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலுங்கூட ஸ்ரீமான். நாயக்கர், தம்முடைய ஆப்த நண்பராயிருந்து கொண்டு வந்த ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளையவர்களுக்கு விரோதமாகவும், ஸ்ரீமான் நரசிம்மய்யருக்கு அநுகூலமாகவுமிருந்து தம்முடைய வோட்டுகளையும், தம் நண்பர்களுடைய வோட்டுகளையும், ஸ்ரீமான் நரசிம்மய்யருக்கே கொடுத்து அவரை சட்டசபை மெம்பராக இருப்பதற்கும் உதவி செய்தார்.

அல்லாமலும், ஒத்துழையாமை காலத்திலும் தேசீய பிராமணர்களுடன் ஒன்றுபடக் கலந்தே, பரிசுத்தமாய் சில பிராமணர்களைப் பின்பற்றியும், அவர்களைத் தலைவர்களாக்கியும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டும் உழைத்து வந்திருக்கிறார். இவையெல்லாம் தேசத்தையும் தேசக்ஷமத்தையும் முன்னிட்டேயல்லாமல் வேறெவ்வித சுயநலத்திற்காகவும் அல்ல வென்பதை ஸ்ரீமான். நாயக்கரின் எதிரிகளுங்கூட அறிவார்கள். இப்படியிருக்க, இப்பொழுது, திடீரென்று சில தேசீயவாதிகளென்போரிடமும் முக்கியமாய் பிராமண சமூகத்தில் பலரிடமும் அருவருப்புத் தோன்றக் காரணமென்ன வென்பதை வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளுவது சுபாவ மேயாகும். நமக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவத்தில், பிராமண தேசீயவாதி களென்போரில் பெரும்பாலோர், தங்கள் சுயநலத்திற்கும், தங்கள் வகுப்பு முன்னேற்றத்திற்கும், பிராமணரல்லாத மற்ற எல்லா சமூகத்திற்கும் துரோகம் செய்வதற்குமே உழைத்து வந்திருக்கின்றார்களென்றும் - ஸ்ரீமான். நாயக்கர் போன்றாரை உபயோகப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்களென்றும் நினைக்கும்படியாகவே ஏற்பட்டுப் போய்விட்டது.

பிராமணர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும் பிராமணரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப்படுவதாய்க் காணப்படுகிறது. இந்நிலையில் தேசத்தின் பெரிய சமூகத்தாரான, பிராமணரல்லாதாரைப் பலி கொடுத்து பிராமணர்களுக்கு நல்ல பிள்ளை களாய் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் தோன்றமாட்டேனென்கிறது. அல்லாமல், இவற்றைப் பற்றிய கவலை எடுத்துக்கொள்ளாமல் எப்படியோ போகட்டும் என விட்டுவிடுவதற்கும் மனம் ஒருப்படுவதில்லை. என்றைக்கிருந்தாலும் இரு சமூகத்தினரும் ஒன்றுபட்டுதானாக வேண்டும்.

அங்ஙனம் ஒன்றுபடுவதற்கு அவரவர்களுடைய குற்றங்குறைகளை எடுத்துச் சொல்லப் பயந்து கொண்டு மேற்பூச்சுக்கு மாத்திரம் பிராமணர்களிடம் அன்பர்களாய் நடந்து கொள்ளுவதில் இரு சமூகத்தாருக்கும் ஒரு பிரயோஜனமுமேற்படாது எனக் கருதியே, யாருடைய நிஷ்டூரம் ஏற்பட்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லாமல் உண்மையை எடுத்துக் கூறி குற்றங்களைக் கீறி ஆற்றி திருத்துப்பாட்டடையச் செய்து இரு சமூகமும் உண்மையான சகோதர அன்பில் கட்டுப்பட்டு நமது நாடு உண்மையான விடுதலை பெறவே உழைத்து வரப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே “குடி அரசின்” முதலாவது இதழ் தலையங்கத்தில் “மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்வமும், சகோதரத்வமும் ஓங்கி வளரல்வேண்டும், மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும், உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச்சண்டைகள் ஒழியவேண்டும், ஆனதுபற்றியே, “நகுதற்பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்மேற் சென்றிடித்தற் பொருட்டு” எனும் தெய்வப்புலமைத் திருவள்ளுவரின் வாக்கை கடைபிடித்து, நண்பரேயாயினுமாகுக, அவர் தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்” என நமது அபிப்பிராயத்தைத் தீர்க்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

இந்நிலையில், நமது “குடி அரசு” பாமர ஜனங்களின் ஆதரவைப் பூரணமாகப் பெறுவது சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல, உதாரணமாக, “குடி அரசு” ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும் இதுவரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள். இது நஷ்டத்தில் தான் நடைபெற்று வருகின்றதெனச் சொல்ல வருந்துகிறோம். அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லையென்பதே நமது அபிப்பிராயம்.

பெரும்பாலும் பிராமணர், செல்வந்தர், முதலாளிகள், வைதீகர் முதலியோருடைய குற்றங்களை எடுத்துச் சொல்லிவருவதால் அவர்கள் நமது பத்திரிக்கையை ஆதரிப்பார்களென்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகவே முடியும். ஆதலால், நமது பத்திரிக்கையை ஆதரிக்க வேண்டியது பிராமணரல்லாதார், ஏழைகள், தொழிலாளிகள், தீண்டாதாரெனப்படுவோர் முதலிய ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்ட முக்கிய கடனாகும். அந்தப்படி இக்கூட்டத்தார் நமது “குடி அரசை” ஆதரிக்கவில்லையானால், “குடி அரசு” தானாகவே மறைந்து போக வேண்டியதுதான் அதனுடைய கடமையேயல்லாமல், முன்சொன்னது போல் சுயநலம் முதலியவைகளுக்கென்று இப்பத்திரிக்கையை நடத்துவதில் பிரயோஜனமில்லை.

ஏனெனில் “குடி அரசா”னது தன்னுழைப்பினாலும், தனது தியாகத்தினாலும் மக்கள் சிறப்பாய் பிராமணரல்லாதார், தீண்டாதார் முதலியோர் விடுதலை பெற்று சுயமதிப்புடன் வாழ்ந்து தேசம் உண்மையான சுயராஜ்யமடைய வேண்டுமென்றும், சகலரும் சமமாய் வாழவேண்டுமானால், தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் சமநிலைக்கு வரவேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் இன்றியமையாதெனக் கருதி அதையெல்லாவகுப்பாரும் அடைய வேண்டுமென எதிர்பார்க்கிறதேயொழிய பொது மக்கள் வாழ்வால் “குடி அரசு” வாழ வேண்டுமென்று அது கருதவேயில்லை. ஆதலால், “குடி அரசி”ன் வாழ்வைக் கோருகிற ஒவ்வொருவரும், தங்களாலியன்றளவு புதிய சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுத்தும், மற்றும் தங்களால் கூடிய உதவி செய்தும் இதனை ஆதரிக்க வேண்டுகிறோம்.

குடி அரசு தலையங்கம் - 01.11.1925

Read 106 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.